கணிதம் சொல்லி உலகை வசப்படுத்திய ஆசிரியை!
கணித நுட்பங்களை கற்றுத்தரும் ஆசிரியை!
பீகாரைச் சேர்ந்த கணித ஆசிரியை ரூபி குமாரி, தன் புதுமையான கணித நுட்பங்களால் மாணவர்களை கவர்ந்து வருகிறார்.
2014ஆம் ஆண்டு பீகாரைச் சேர்ந்த கணித ஆசிரியை ரூபிகுமாரி மாணவர்களுக்குக் கற்பிக்க தொடங்கினார். புதுமையான நுட்ப வழிகளில் கணிதத்தைக் கற்றுத் தந்தவர், மாணவர்களை ஈர்க்கத் தொடங்கினார். ஒன்பதைப் பெருக்க விரல்களை எப்படி கால்குலேட்டராக பயன்படுத்துவது என்று இவர் கற்பிக்கும் வீடியோ இணைய உலகில் அதிகம் பகிரப்பட்டது. இதனால் பலருக்கும் அறிந்த முகமாக ரூபி குமாரி மாறினார். இவரின் கற்றல்முறை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா முதல் இந்தி நடிகர் ஷாருக்கான் வரை ஈர்க்க, பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன.
பீகாரின் பங்கா எனும் சிறுநகரில் பிறந்தவர் ரூபிகுமாரி. முதல் தலைமுறையாக கல்வி கற்க விரும்புபவர்களுக்கு எளிய முறையில் கணிதத்தை பயிற்றுவிக்க நினைத்தார். ஆனால் இந்த எண்ணம் அவ்வளவு எளிதில் நிறைவேறவில்லை. 250 மாணவர்களுக்கு தனது புதுமையான கற்றல் முறையில் கற்பித்தார்.
“நான் விளையாட்டு மூலம் பாடங்களை சொல்லிக்கொடுத்தது மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் பள்ளி முதல்வரை அணுகி எனது கற்பித்தல் முறை பற்றி புகார் சொன்னார்கள். பள்ளி நிர்வாகத்திற்கு, நான் பாடத்திட்டங்களை சரியாக முடிக்க மாட்டேனோ என்கிற பயம் இருந்தது” என்கிறார் ரூபிகுமாரி. ஆனால் விளையாட்டு மூலம் கணிதத்தைக் கற்கண்டாக நினைத்து கற்ற மாணவர்கள், தேர்வில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றனர். இதன் விளைவாக பெற்றோர்கள் அமைதியாயினர்.
வெற்றியாளர்கள் கற்றுக்கொண்டே இருப்பார்கள் என்பதற்கு ரூபிகுமாரி சிறந்த சான்று. புதிய கற்றல் முறைகளைப் பற்றிய நூல்களை வாசித்து தன்னை மேம்படுத்தி வருகிறார். இவரது கற்றல் முறைக்கு தனக்கு சிறுவயதில் பாடம் சொல்லிக்கொடுத்த அத்தை ஒருவரே காரணம். அவர் பாடங்களை படங்கள், பாடல்கள், விளையாட்டுகள் மூலமாக ரூபிக்குத் கற்றுத் தந்தார்.
அவரை முன்மாதிரியாக கொண்டே இன்றும் ரூபி தன் பாடங்களை மாணவர்களுக்கு எளிய முறையில் கற்றுத்த்தருகிறார். ஆங்கில பட்டதாரியான ரூபிகுமாரி பள்ளியில் ஆங்கிலம், கணிதம், சமஸ்கிருதம் ஆகிய பாடங்களைக் கற்றுத்தந்து வருகிறார். இணையம் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியை வழங்கமுடியும் என நம்பிக்கை கொண்டு செயல்பட்டு வருகிறார்.
தகவல்:ET