ஊட்டச்சத்துக்குறைவை இந்தியா தீர்க்குமா?
qrius |
2022க்குள் இந்தியா ஊட்டச்சத்துக்குறைவு பாதிப்பை நீக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. தற்போது இந்திய அரசு போஷன் அபியான் எனும் திட்டத்தை ஊட்டச்சத்துக்குறைவைப் போக்க தேசிய அளவில் அமல்படுத்தி வருகிறது. ஆனால் இத்திட்டம் சிறப்பாக செயல்படவில்லை என்பதே யதார்த்த நிலைமை. இதுபற்றிய தகவல்களைப் பார்ப்போம்.
ஐ.நா அமைப்பின் சூழலியல் நோக்கங்கள் எனும் திட்ட அடிப்படையில் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பாதிப்பு பற்றிய அறிக்கை கடந்த 9ஆம் தேதி ராஜஸ்தானில் வெளியிடப்பட்டது. இதனை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டார்.
1975ஆம் ஆண்டு ஐசிடிஎஸ் எனும் திட்டத்தை இந்தியா அமல்படுத்தியது. பின்னர், தொண்ணூறுகளில் இத்திட்டத்திற்கான நிதி அதிகரிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் பத்து லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இறந்தனர். இதில் 62 சதவீதம் பேர் ஊட்டச்சத்துக் குறைவால் இறந்தனர். உலகளவில் பசியால் அவதிப்படுவோரின் பட்டியலில் இந்தியா 102 வது இடத்தில் உள்ளது. அதாவது, 21.9 சதவீத முன்னேற்றம் மட்டுமே பெற்றுள்ளது. இந்தியாவை விட பிரேசில், நேபாளம், பாகிஸ்தான் ஆகியவை சிறப்பான முன்னேற்றத்தை கொண்டுள்ளன.
இதற்காகவே 2018ஆம்ஆண்டு போஷன் அபியான் திட்டம் உருவானது. இரண்டாயிரம் கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் திட்ட அறிக்கையில் இருந்த விஷயங்கள் எவையும் களத்தில் அமல்படுத்தப்படவில்லை. இதனால் இத்திட்டம் பெயரளவில் உள்ளதே ஒழிய குழந்தைகளுக்கு உதவ வில்லை. தோராயமாக இந்த வேகத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகளை வழங்கினால் பஞ்சாப் மாநிலத்திற்கு தன் இலக்கை எட்ட 25 ஆண்டுகளும், ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நூறு ஆண்டுகளும் முழுதாக தேவைப்படும்.
இந்திய அரசு தினசரி வாழ்க்கையில் மக்களுக்குத் தேவையான விஷயங்களை செய்தாலே அவர்களுக்கு புகழும் கிடைக்கும் திட்டமும் வெற்றியடையும். குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து விஷயத்தில் இந்திய அரசு காட்டும் அலட்சியம் சரியானதல்ல.
நன்றி - டவுன் டூ எர்த்