அப்பா, நான் உங்களை புறக்கணிக்கவில்லை! - அன்புள்ள அப்பாவுக்கு!





Grayscale Photo of Man and Child Sitting on Hammock
pexals




1

அன்புள்ள அப்பாவுக்கு, 


அன்பரசு எழுதுவது, தாங்கள் நலமாக இருக்கிறீர்களா? மஞ்சள் காமாலை பாதிப்பு இன்னும் முழுதாக நீங்கவில்லை. உடல் சோர்வும், மனச்சோர்வும் வாட்டுகிறது.

 தினசரி சாப்பிடுவதற்கு முன்னதாக அறையில் கீழாநெல்லி பொடியை நீரில் கலக்கி குடித்து வருகிறேன். என்ன பலன் கிடைக்குமோ தெரியவில்லை. அறையில் சமையல் செய்யும் முயற்சிகள் மிக தூரத்தில் தெரியும் விளக்கு போலவே என்னை இன்னும் ஈர்த்துவருகிறது. ஆனால் அதற்கு எந்த பயனும் இல்லை. காரணம் எனது அலுவலகப் பணிகள்தான்.

 காலையில் ஐந்து மணிக்கு எழுந்துவிட்டு சிறிதுநேரம் படிப்பேன். பிறகு, டீ குடிக்க ஜனா அண்ணனோடு செல்வேன். அவர் உறுதியாக டீ குடிப்பாரா என்று எனக்கு தெரியாது. காரணம், க்ரீன் டீ என டெட்லி டீ பாக்கெட்டுகளை வாங்கி வைத்திருந்தார். அது அவரின் ஸ்டைல். விஷயத்திற்கு வருகிறேன்.

ஏழரை மணிக்கு வரும் 12 ஜியில் ஏறிவிடுவேன், மலம் கழிப்பது கூட தினகரன் அலுவலகத்தில்தான். எங்கள் அறையில் தண்ணீர் நிரம்பிய பக்கெட்டைப் பார்ப்பது பாலைவனத்தில் பிஸ்லரி வாட்டர் பாட்டில் கிடைப்பதை விட அரிதானது.

நீங்கள் மருத்துவமனையில் மனம் கலங்கியபடி பேசியபோது என்னால் எந்த ஒரு ஆதரவு வார்த்தையையும் சொல்ல முடியவில்லை. பதினான்கு வயதிலிருந்து வேலை செய்து வருகிறீர்கள். அறுபது வயதை தொட்டபின்னும் உழைப்பு அலுக்கவில்லை உங்களுக்கு. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நான் உங்களுடன் பேசவில்லை. காரணம், இருவருக்குமான வயது வேறுபாடு, பொதுவான விஷயங்கள் பேசுவதற்கான தடை  என காலப்போக்கில் பெரிய சுவர் உருவாகி வளர்ந்துவிட்டது. இதன் அர்த்தம், நான் உங்களைப் புறக்கணிக்கிறேன் என்பதல்ல.

உங்களது படிக்கும் பழக்கம் இல்லையென்றால் நான் இன்று எங்கிருப்பேன்? என்றே தெரியவில்லை.

ச.அன்பரசு
8.2.2016