தந்தை தாயை நேசிக்கவேண்டியது முக்கியம்! - அன்புள்ள அப்பாவுக்கு...





Child, Father, People, Fatherhood, Connectedness 



6

அன்புள்ள அப்பாவுக்கு,
வணக்கம்.

நீங்கள் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.

உங்களுடைய ராசி பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் கன்னி ராசி என்று கேள்விப்பட்ட வரையில் அதற்கு உருப்படியான நற்பலன்களை நான் நாளிதழ்களில் கூட படித்தது இல்லை. கடுமையான வறுமை, போராட்டங்கள், தரித்திரத்தை அனுபவித்து கடந்து வரவேண்டியிருக்கும் என்பதுதான் நான் படித்த ஜோதிட நூலில் எழுதியிருந்தது. ஜோதிடருக்கு கூட கன்னி ராசிக்காரர்கள் ஏதோ கெடுவினை செய்திருக்கிறார்கள் போல என்று நினைத்துக்கொண்டேன்.

உங்களுடைய கஷ்டங்கள், சிரமங்கள் இதெல்லாம் ராசி காரணமாகத்தான் நடந்தது என்று கூறவில்லை. படிக்காமல், கற்ற தொழில்திறனை வைத்து முன்னேற நினைக்கும் ஒருவருக்கு வாழ்க்கை வேறு எப்படி அமைய முடியும்?

நான் உங்களிடம் கற்றுக்கொண்ட விஷயமாக நேர்மையையும், ஏற்றுக்கொண்ட பொறுப்பை கவனமாக நிறைவேற்றுவதையும் முக்கியமானதாக நினைக்கிறேன்.  இன்று எனக்கு அலுவலகத்தில் கிடைக்கும் வேலைகள் பலவும் பிறரால் ஏற்கப்படாதவை. நான் முடிந்தளவு கவனமாக செய்ய முயன்று வருகிறேன்.

வாழ்க்கை முழுக்க தொடரும் சில பிரச்னைகள் கடந்து கடன் கொடுக்காமல் இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதற்கு ஆதாரமான சம்பவங்கள் நடந்தன. நீங்கள் அடிக்கடி பழனி முருகன் கோவில், திருப்பதி பெருமாள் கோவிலுக்கு போவது பற்றி நான் கவலைப்பட்டதேயில்லை. அந்த கோவில்களிலிருந்து எனக்கு கிடைக்கும் பிரசாத அளவு குறையும்போதுதான் ரேஷன் அரிசி கிடைக்காத குடும்பஸ்தன் போல மனம் பதறியிருக்கிறேன்.

நீங்கள் உங்கள் ராசிப்படி வணங்கவேண்டியது புதன் என்றாலும், பெருமாளை வணங்கினாலே போதுமானது. நிச்சயம் நான் பேசும் விஷயங்களை நீங்கள் முன்னமே அறிந்திருப்பீர்கள். அனைத்தையும் பட்டியலிட்டு செய்பவர் என்பதால், இந்த விஷயங்களை அறிந்து கால இடைவெளியில் பாதிப்புகளை கோவிலுக்குச் சென்று குறைத்து கொள்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

எட்டாம் வகுப்பு வரை படித்த உங்கள் திட்டமிடல் மற்றும் கவனத்தினால்தான் உங்கள் பிள்ளைகள் இருவரையும் பட்டப்படிப்பு வரை படிக்க வைக்க முடிந்திருக்கிறது. உங்களது உழைப்பு, நேர்மையான செயல்பாடுகளை இன்றும் நான் நினைத்துப் பார்க்கிறேன்.  தந்தை தன் மகன்களுக்கு கற்றுத்தரவேண்டியது, தாயை நேசிப்பதைத்தான் என்று கூறுவார்கள். அந்த வகையில் நான் உங்களிடம் கற்க ஏதுமில்லை.

ச.அன்பரசு
14.3.16