சுத்தம் பார்த்தால் சோறு கிடைக்காது! - அன்புள்ள அப்பாவுக்கு...!
pexals |
2
அன்புள்ள அப்பாவுக்கு, அன்பரசு எழுதுவது.
நலமாக இருக்கிறீர்களா? தங்களுக்கு தொண்டைவலி என்று அம்மா பேசும்போது சொன்னார். சீரகம் போட்டு கொதிக்க வைத்த நீரை அருந்துங்கள். சரியாகிவிடும். இங்கு அலுவலக சூழல் பரவாயில்லை.
உடல்நிலை ஒத்துழைக்க வேண்டுமே என்பதுதான் இறைவனிடம் என் வேண்டுதல். கொரியர் அனுப்புவதில் நான் செய்த பிசகு, நீங்கள் இருமுறை அலைவது போல ஆகிவிட்டது. சான்றிதழ்களை வங்கிக்கு கொடுத்தால்தான் சம்பளக் கணக்கு தொடங்க முடியும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் எனக்கு ஏற்பட்ட பதற்றம்தான் இப்பிரச்னைக்கு காரணம்.
சென்னையில் சமாளித்து வாழ்வதற்கான சம்பளத்தை இந்நிறுவனத்தில் நான் பெறவில்லை. தடுமாற்றம்தான். அதிலும் ஒரு மகிழ்ச்சி, நீங்கள் அனுப்பி தந்த 5 ஆயிரம் ரூபாய்தான். எனக்கு பெரும் உதவியாக இருந்தது.
மதியம் தேடிப்பிடித்து வெரைட்டி ரைஸ் சாப்பிடுகிறேன். சுத்தம் என்பதை மறந்துவிட்டால் மட்டுமே இங்கு சாப்பிட முடியும். இரவு வீடு திரும்ப 8.30க்கு மேல் ஆகிறது. எதையும் கவனமாக படிக்க முடியவில்லை. சனியன்றும் அலுவலகம் உண்டு. அன்று அரைநாள் வேலை. தலித் முரசு பத்திரிகையில் எனக்கு வரவேண்டிய சம்பள பாக்கி தோராயமாக இரண்டாயிரம் ரூபாய் இருக்கும்.
எனக்கு உங்களது சிறுவயதுதான் நினைவுக்கு வருகிறது. அனைத்தையும் உங்களைப் போலவே நானும் தனியாக எனக்கென உருவாக்கிக் கொள்ளவேண்டும். அதற்கான தேவை உருவாகி வருகிறது.
ச.அன்பரசு
15.2.2016