ரஜினியை பின்னாலிருந்து இயக்குகிறார்கள்! - கே.வீரமணி
சாதி பிரிவினைகளை
ஆதரிக்க ராமாயணத்தை அடையாளம் காட்டுகிறார்கள்!
பிரிவினையின் லாபம் அடையும் கட்சிகள் அதற்காக நவீன இந்திய
சிற்பிகளை அவமானப்படுத்துவதும், அதற்காக பாடநூல்களை கூட மாற்றுவதும் நடந்து வருகிறது.
இப்போது கூடுதலாக, பிரபலமாக உள்ள நபர்களை தூண்டிவிட்டு ஒட்டுமொத்த மக்களையும் பிரிவினைப்படுத்த
மதவாத கட்சிகள் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன. இதற்கான செயல்பாடுகளில் பெரியார்
சிலைகள் உடைப்பு, அவரது கருத்துகள் திரிக்கப்படுவது என நடந்து வருகிறது. பிரபல நடிகரான
ரஜினிகாந்த் துக்ளக் வார இதழில் பெரியார் பற்றி பேசிய கருத்து சர்ச்சையானது. ரஜினி
தவறான தகவல்களை ஊடகங்களுக்கு தருகிறார் என்று இதற்கு பதில் சொல்லுகிறார் திராவிடர் கழக பொதுச்செயலாளரான கி.வீரமணி.
மக்களிடையே
பிரிவினை விதைக்கும் பிளவு செயல்பாடுகள் தொடரும் என்று நினைக்கிறீர்களா?
எனக்கு ஜோதிடம் தெரியாது. இதுபோன்ற யூக கேள்விகளுக்கு என்னிடம்
பதில் கிடையாது.
ரஜினி மறக்கப்பட
வேண்டிய சம்பவம் என்று கூறியதற்காக பெரியாரிஸ்டுகள் மன்னிப்பு கேட்கவேண்டுமென நினைக்கிறீர்களா?
இல்லை. அவசியம் கிடையாது. ரஜினி போன்ற நபர்கள் இப்படி மோசமான
வகையில் ஆதாரப்பூர்வமற்ற கருத்துகளை கூறிவருவது தவறு. அவருக்கு பின்னாலுள்ள சக்திகள்
இப்படி செயல்படுவதற்கு அவரைத் தூண்டுகிறார்கள் என்று நினைக்கிறேன். எங்களுக்கு அவரைப்
பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது. சிலரின் ஆயுதமாக ரஜினி பயன்பட்டு வருகிறார் என்று
தோன்றுகிறது.
பெரியாரிய சிந்தனைகள்
இதுபோன்ற தாக்குதலுக்கு எதிராக மென்மையான போக்கை கடைப்பிடிப்பது போல தெரிகிறதே?
நிச்சயமாக இல்லை. நாங்கள் பெரியாரிய வழியில் நடக்கிறோம்.
அச்சிந்தனைகளை தொடர்ந்து கூர்மை செய்து வருகிறோம்.பெரியார் பற்றிய அவதூறு கருத்துகளை
சொல்லுபவர்கள் மீது அக்கருத்தே பூமராங்காக பாய்ந்து தாக்கும். பெரியார் இறந்து பல்லாண்டுகள்
ஆனாலும் அவரது சிந்தனைகள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.
நவீன காலத்திற்கு
பெரியாரை எப்படி பொருத்திப் பார்ப்பீர்கள்? பெரியார் இன்றும் உயிரோடு இருந்தால்,
1940-50களில் நடந்துகொண்ட மாதிரிதான் நடந்து கொள்வாரா?
சாக்ரெட் தான் பேசிய உண்மைக்காக விஷம் கொடுத்து கொல்லப்பட்டார்.
அதன் காரணமாக அவரது கருத்துகளை மக்கள் பேசாமல் இருக்கிறீர்களா? பெரியாரிய சிந்தனைகள்
அன்று போல இன்றும் வளர்ந்து வருகிறது. பெரியார் தன் மீதும், கருத்துகள் மீதும் பல்வேறு
விமர்சனங்களை விரும்பியவர். அவரது கருத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் யாரேனும் ஒற்றைச்
செருப்பை வீசினால் கூட அந்நபருக்கு புதிதாக செருப்பை வாங்கித் தருபவராக பெரியார் இருப்பார்.
பெரியார் தனிமனிதர் அல்ல. இயக்கம்.
பெரியாரின்
மீது மட்டும் இத்தனை தாக்குதல்கள் ஏன் நடைபெறுகின்றன
பெரியார் தான் வாழும் காலத்திலேயே விமர்சனங்களை ஏற்றவர்.
நாங்களும் அதேவழியில் விமர்சனங்களை கருத்துகளை ஏற்கிறோம். பெரியாரின் கருத்துகள் சிலரின்
நம்பிக்கையை தாக்குவதாக கூறுகிறார்கள். நான் ஒன்று கேட்கிறேன். பிறப்பினால் ஒருவரை
சூத்திரன் என்ற பெயர் வைத்து உழைக்க வற்புறுத்துவது தவறு அல்லவா? அது அவர்களின் மனதை
வருத்தவில்லையா? மக்கள் அனைவரும் சாதி ஒழிப்பில்
ஈடுபட்டு, சாதி இழந்த மக்களுக்கு மானிய உதவிகளை வழங்கவேண்டும். தங்களின் மனம் புண்படுகிறது
என்று பெரியாரை எதிர்ப்பவர்கள், வர்ணாசிரமத் தர்மா என்ற கொடூர விதிகளை இங்கு அமல்படுத்த நினைக்கிறார்கள்.
மனிதர்களை பிறப்பால் வேற்றுமை படுத்துவதை, ராமாயணத்தைக் காட்டி நியாயப்படுத்துகிறார்கள்.
இப்போது உங்களுக்கே தெரியும். இப்படி இருந்தால் எப்படி சாதிகளை ஒழிப்பது என்று பாருங்கள்.
நன்றி – டைம்ஸ், டி.கோவர்தன்.