யாருடைய சிபாரிசு நீங்க? - அன்புள்ள அப்பாவுக்கு...
3
அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம். நலந்தானே?
தினகரனில் இணைந்துவிட்டேன். இங்கு சம்பளக்கணக்கு தொடங்குவதற்கான பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டன. தலித் முரசு இதழில் வரவேண்டிய பாக்கி 2.796 ரூபாய் உள்ளது. இதற்காக அவர்களது அலுவலகம் சென்றேன்.
நீங்கள் எங்கள் கணினிகளை உங்களது உபயோகத்திற்காக தவறாக பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்றார் தலித் முரசு புனித பாண்டியன். இதைக் கண்டுபிடித்து சொன்னதற்காக நெடுஞ்செழியன் பெண் உட்பட பலரது பெயரையும் சொன்னார். நான் அப்படியெல்லாம் செய்யவில்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னேன். கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டேன்.
இவர்களுக்கு வேலை ஆகவேண்டுமென்றால், என்ன சாதி என்பது வரை கேட்டுக்கொண்டு இளிப்பார்கள். தேவையில்லை என்றால் மயிரே என்று மதித்துப் பேசுவது. சமூகநீதியே இவர்களின் கரங்களில்தான் இருக்கிறது. என்னை கோபப்படுத்திப் பார்க்க முயன்றார்கள். நான் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்த வில்லை. இந்த யுக்தியை எல்லாம் வேலை செய்த காலத்திலேயே பார்த்தாகிவிட்டது.
முத்தாரத்தில் என்னைப் பார்த்து பேசுகிற பலரும், யாருடைய சிபாரிசு என குறுஞ்சிரிப்புடன் கேட்கிறார்கள். ரெஸ்யூம் அனுப்பி வந்தேன் என்றால், ஒகே முருகன் சார் ஆள் என்று வாய்விட்டே ஒருவர் சொல்லிவிட்டார். வேலையில் என்னை நிரூபிப்பதே இதற்கு சரியான தீர்வாக இருக்க முடியும். என்ன, இத்தகைய ஆட்கள் சுற்றி இருக்கும்போது மன உளைச்சல்களும் கூடும். மோசமான உணவு உடல்நலத்தை கெடுக்கும் என்பதோடு மன உளைச்சலும் அதே வேலையைச் செய்யும் என்பதை நம்புகிறீர்களா?
உணவைத் தரமான இடத்தில் சாப்பிட நினைத்தாலும், பாக்கெட்டில் பணத்தை தேட வேண்டியதாக உள்ளது. டைபாய்டோ, காலராவோ வந்தால் இன்னும் மோசமான செலவு ஏற்படும். சேமிப்பில் பணம் சேர்ந்தால் அலுவலகத்திற்கு அருகிலேயே அறை பார்க்க முடியும். 6.30க்கு பஸ்சிற்கு காத்திருந்து நெருக்கடியின்றி போக நினைத்தால் மணி 9 ஆகி விடுகிறது. வறட்டு சப்பாத்தியை சாப்பிட்டுவிட்டு படுக்க வேண்டியதுதான். அடுத்தநாள் விடியவேண்டியதுதான். நன்றி!
ச.அன்பரசு
20.2.2016