காதலிக்காக போராடும் காதலன்! - லவ்வர் -2018
லவ்வர் - 2018 தெலுங்கு
இயக்கம் - அன்னிஷ் கிருஷ்ணா
ஒளிப்பதிவு - சமீர் ரெட்டி
இசை - சாய் கார்த்திக், தனிஷ்க் பக்சி, அங்கித் திவாரி, ஆர்கோ, அஜய் வாஸ்
மருத்துவத்துறை சார்ந்த திரில்லர் படம். அரசு மருத்துவமனையில் பல்வேறு உறுப்புகளை தானமாக கொடுக்கிறார்கள். அதனை பணக்காரர்களுக்காக ஒதுக்கி லாபம் பார்க்கிறார் மருத்துவமனைத் தலைவர். இதைத் தட்டிக் கேட்கிறார் நர்ஸ் ஒருவர். மேலும், பணக்காரர் ஒருவரின் ரத்தவகையைச் சேர்ந்த சிறுமியைக் கொன்று அவரின் கல்லீரலை அபகரிக்கும் திட்டத்தை நர்ஸ் தடுக்கிறார். இதன்விளைவாக ஏற்படும் பிரச்னைகளே கதை.
ராஜ் தருணுக்கு இதில் பெரிய வேலை இல்லை. அனைத்து வேலைகளையும் ரித்தி குமாரே செய்கிறார். ராஜூக்கு சாய் கார்த்திக்கின் பாடல்களுக்கு நடனமாடவும், நர்ஸ் ரித்தியை எப்பாடு பட்டாலும் காதலித்து கேரள - ஆந்திர கலப்பில் குழந்தை ஒன்றை உருவாக்கவுமே மெனக்கெடுகிறார்.
ஆஹா!
பாடல்கள் அனைத்துமே திரும்பத் திரும்ப கேட்கலாம். ஒளிப்பதிவும் சிறப்பாக உள்ளது. ரித்தி குமார் அழகாக இருக்கிறார். நடிக்கவும் முயற்சிக்கிறார். இது ஒன்று போதாதா அவரைப் பாராட்ட? ராஜீவ் கனக்கலாவுக்கு இறுக்கமான கதாபாத்திரம். அன்பில் நெகிழ்ந்தாலும் சூழல் காரணமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் நடித்திருக்கிறார்.
ஐயையோ
முதல் காட்சியில் கொலை விழுந்து ராஜூவுக்கு அண்ணன் ராஜீவ் கனக்கலா எனும்போதே, கதை பாதி தெரிந்துவிடுகிறது. இதில் எதிர்பாராத ட்விஸ்ட் என்பது கிளைமேக்ஸ்தான். அதையும் டிஜிட்டலாக மாற்றிவிடுவதால் லவ்வர் டைட்டிலுக்கு என்ன நியாயம் செய்கிறார்கள் என்று புரிவதில்லை. வீடியோ பாடல்களுக்காக ஒரு படமா என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
தலைப்பை பார்த்து அதிகம் எதிர்பார்க்காதீர்கள்.
கோமாளிமேடை டீம்