மலக்கழிவை அள்ளினாலும் சாதிக்க முடியும்! - இரு உதாரணங்கள்!
கருப்பு இந்தியா!
அவமதிப்பு வாழ்க்கையை மாற்றியது!
விமல்குமார் தன் பள்ளி வாழ்க்கையை நினைக்கும்போதெல்லாம் கண்கலங்குவார். காரணம் ஹரியானாவிலுள்ள குருஷேத்ரா மாவட்டத்தில் உள்ளது அவரது ஊரான லத்வா நகரம். அதிலுள்ள வால்மீகி பஸ்தி என்ற பகுதியில் அவரது பெற்றோர் வாழ்ந்து வருகின்றனர்.
தந்தைக்கு மார்க்கெட்டில் வேலை. தாய்க்கு வீடுகளை சுத்தம் செய்து கூட்டிப் பெருக்குவது. விமல்குமார் மட்டுமல்ல அவர் பகுதியில் வசிப்பவர்கள் அனைவருமே மலக்கழிவை அள்ளுவது கூட்டி பெருக்குவது, அருகிலுள்ள சந்தையில் வேலை செய்வது என வாழ்ந்த வந்த மக்கள்தான். இதனால் அவர்கள் பள்ளிகளிலும் பிற இடங்களிலும் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகள் அதிகம்.
விமல்குமார் பள்ளியில் பணியாற்றும்போது அவரின் அம்மா பள்ளி மைதானம், வகுப்பறைகள், கழிவறைகளை சுத்தம் செய்துகொண்டு இருப்பார். அதைப்பார்த்துக் கொண்டு விமல் கண்ணீரை அடக்கிக்கொண்டு இருப்பார். அவரின் சாதிப்படி வேலை என்று கிடைப்பது அதுதான். பள்ளி விட்டதும், தன் அம்மாவுக்கு உதவி செய்துவிட்டு இருவருமாக வீடு திரும்புவார்கள்.
படிப்பில் தொடக்கத்தில் பெரிய ஆர்வம் காட்டவில்லைதான். ஆனால் ஏழாவது மற்றும் எட்டாவதில் தேர்ச்சி பெறாதது அவரது வாழ்க்கையை மாற்றியது. அப்போது விமலின் தந்தையை அழைத்து பேசிய ஆசிரியர் விமலின் முன்னால் அவரை அவமானப்படுத்தி பேசினார். அதற்குப்பிறகு இனி இப்படி ஒரு அவமதிப்பு நம்மால் தந்தைக்கு ஏற்படக்கூடாது என நினைத்து படித்தார். இன்று அதன் விளைவாக, அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் டிசியில் கல்வி உதவித்தொகை பெற்று படித்து முனைவர் படிப்பை மேற்கொண்டு வருகிறார். ”எனக்கு ஊக்கத் தூண்டுதல் அளித்தது ஹீ மேன் கதாபாத்திரம்தான். ஐ ஹேவ் தி பவர் ” என்று சொன்னவுடன் வீரராக திட மனது கொண்டவராக மாறும் நாயகன் எனக்கு பிடித்தமானவர். அதன் விளைவாகத்தான் எதிர்ப்புகளை ஊதாசீனம் செய்து படிக்க முடிந்தது. இன்று இவரது பகுதியில் இவரை முன்மாதிரியாக கொண்டு நிறைய இளைஞர்கள் படிக்க வருகிறார்கள்.
வசைகளை கேட்காதே கடுமையாக உழை!
கௌசல் பன்வார் இன்று தன் 41 வது வயதில் சமஸ்கிருத பேராசிரியையாக உள்ளார். அதற்குக் காரணம் தந்தை சொன்ன மந்திரம்தான். யார் கூறும் ஏச்சுச்சொல்லையும் ஏற்காதே. உன் லட்சியத்தை நோக்கி கடுமையாக உழைக்கத் தயங்காதே என்ற வார்த்தைதான் அவரை கல்வி கற்க வைத்தது. அவமதிப்பு ஏணியில் உச்சமென ஏறியவர், இன்று சமஸ்கிருத பேராசிரியையாக அங்கீகாரம் பெற்று நிற்கிறார்.
பன்வாரின் தந்தை தினசரி கூலி வேலை, மலமள்ளும் தொழிலாளியாக இருந்தவர். அவரின் மகள் ஏழாவது வகுப்பில் சமஸ்கிருதம் பாடத்தை தேர்ந்தெடுத்தார். மேல்சாதி ஆசிரியர்கள் பன்வாரை அவமானப்படுத்தி வகுப்பைவிட்டு வெளியேற்ற முயன்றனர். ஆனால் உறுதியாக படித்த பன்வார் தன் முனைவர் படிப்பை ஜேஎன்யூவில் முடித்தார். தற்போது மோதிலால் நேரு கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார்.
தலித் மக்களே மலமள்ளும் தொழிலை வேலைவாய்ப்பு என்று பார்க்காமல் அடிமைத்தொழில் என்று புரிந்துகொண்டு வெளிவந்து கொண்டிருக்கின்றனர்.
நன்றி - டைம்ஸ் ஜன.26, 2020 ஹிமான்சி தவான்