சமூக பொறுப்புக்குழு எப்படி அமைக்கப்படுகிறது? - சிஎஸ்ஆர் 6
அத்தியாயம் 6
பெருநிறுவன சமூக பொறுப்பு
குழுவின் வடிவமும், செயல்பாடும்
1987 ஆம் ஆண்டு சமூக பொறுப்புணர்வுத் திட்டங்கள் பற்றி வேர்ல்டு கமிஷன் அமைப்பு, சில வரையறைகளை உருவாக்கி வெளியிட்டது. அதில் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம் என்பது எதிர்கால தலைமுறையினருக்கான தேவைகளை சமரசமின்றி தீர்ப்பதற்கான திட்டங்களையும் தீர்வுகளையும் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தியது.
இதுதொடர்பாக இந்திய அரசு, 2011 ஆம் ஆண்டு கம்பெனி சட்டத்தின் கீழ் ஒன்பது விதிகளை உருவாக்கியது. இவை வணிக நிறுவனங்களுக்கும், அவை செய்யும் சமூக பொறுப்பு சார்ந்த திட்டங்களுக்கும் பொருந்துபவை. மேலும் ஐ.நா அமைப்பு இது பற்றிய பத்து கொள்கைகளை வெளியிட்டுள்ளது.
சிறுகுறு தொழில் நிறுவனங்கள் கூட இன்று சமூக பொறுப்புணர்வுத் திட்டங்களுக்குள் வந்துவிட்டன. இவை இதனைச் செலவாகப்பார்க்காமல் முதலீடாகப் பார்ப்பது அவசியம்.
தொழில்நிறுவனங்கள் சரியான முறையில் இயங்கி லாபம் பார்க்க, அரசு உரிமம மட்டும் போதாது. அப்பகுதியில் வாழும் மக்களின் ஒத்துழைப்பும் தேவை. இதற்கு சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்கள் உதவும். நிறுவனத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்தால் அதன் தொழிலும் விரிவாகும்.
தன் நிறுவனத்திலுள்ள ஊழியர்களை, இப்பணியில் ஈடுபடுத்தி அவர்களை ஊக்கமூட்டுவதையும் பெரு நிறுவனங்கள் செய்து வருகின்றன. சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களையே பெருநிறுவனங்கள் தம் விளம்பரத்திற்கு பயன்படுத்தலாம். திட்டங்களால் பயன்பெற்றவர்களை தங்களின் உற்பத்திப் பொருட்களின் மறைமுக விளம்பரத் தூதர்களாக பயன்படுத்த முடியும்.
2013 ஆம் ஆண்டு உருவான இந்திய அரசின் கம்பெனிச்சட்டம் பிரிவு 135 படி சமூகப் பொறுப்புணர்வுச் சட்டம் உருவானது. இதன்படி நிறுவன மதிப்பு 500 கோடி அல்லது நிறுவன மொத்த வருமானம் 1000 கோடி அல்லது 5 கோடி லாபம் கொண்ட நிறுவனங்கள் 2 சதவீத வருவாயை சமூகத்திட்டங்களுக்காகச் செலவிடுவது கட்டாயமாகி உள்ளது.
பெருநிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வுத்திட்டங்களை தானாகவே செய்யலாம். அல்லது சமூகத்திட்டங்களைச் செய்துவரும் தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து நிதியளித்து செயற்படலாம். தன்னார்வ நிறுவனங்கள் சமூகச்செயற்பாடுகளில் மூன்று ஆண்டுகள் ஈடுபட்டிருப்பது அவசியம்.
பெருநிறுவனங்கள் தாமாகவே தன்னார்வ அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கியும் இச்செயற்பாடுகளைச் செய்யலாம்.
இதற்காக பெருநிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒன்றுகூடி திட்டத்தை தீட்டி சமூகப் பொறுப்புணர்வு கமிட்டியை அமைக்க வேண்டும்.
இக்கமிட்டியில் மூன்று இயக்குநர்கள் இடம்பெறலாம். அதில் ஒருவர் சுயாதீனமான இயக்குநராக இருப்பார். இவர்கள் சமூகத்திட்டங்களுக்கான செயல்பாட்டு அறிக்கையைத் தயாரித்து இயக்குநர்கள் குழுவுக்கு அனுப்பி அனுமதி பெறுவார்கள். இத்திட்டத்தின் மேம்பாடுகளை சமூகப் பொறுப்புணர்வுத் திட்ட கமிட்டி, குறிப்பிட்ட இடைவெளியில் கண்காணிக்க வேண்டும்.
திட்டத்தின் அடிப்படையில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். செலவிடப்படாத நிதிக்கு விளக்கத்தையும் இக்கமிட்டி இயக்குநர்கள் குழுவுக்கு அளிப்பது கட்டாயம். மேற்சொன்ன விஷயங்கள் அரசு விதிகளின்படி அமைந்தவை.
அடிப்படையான சமூகப்பொறுப்புணர்வுத்திட்டம் எப்படி அமையவேண்டும்?
சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம் சமுதாயத்தில் யாருக்கு பயனளிக்கப்போகிறது என்பதைத் திட்டமிட வேண்டும். எந்த பகுதியில் திட்டம் செயற்படுத்தப்படவிருக்கிறது என்பதையும், என்ன மாதிரியான துறை சார்ந்த திட்டமாக இருக்கும் என்பதையும் முன்னதாகவே திட்டமிடுவது அவசியம். இந்த திட்டங்களில் தன்னார்வலர்களையும் பயிற்சியளித்து இணைத்துக்கொள்ளலாம். இதில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் இவைதான்.
மக்கள் பிரிவு
இந்திய மக்களில் பொருளாதாரம் சார்ந்து கீழ்நிலையில் உள்ளவர், பிற்படுத்தப்பட்டோர், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என பலவகைப்பிரிவினர் உண்டு. இவர்களில் எந்த பிரிவினருக்கு சமூகப் பொறுப்புணர்வுத்திட்டம் பயனளிக்கும் என்பதைத் திட்டமிட வேண்டும்.
பின்தங்கிய பகுதி முன்னேற்றம்
சமூக பொறுப்புணர்வுத் திட்டம் என்பது முடிந்தளவு பெருநிறுவனங்கள், உள்ளூர் பகுதிகளை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல வழிவகுப்பவைதான். வங்கி, தொலைத்தொடர்பு போன்ற துறை சார்ந்த நிறுவனங்கள் அனைத்து பகுதிகளிலும் செயற்படுகின்றன. இவை தவிர்த்து பிற நிறுவனங்கள் நகரங்களைவிட பின்தங்கிய கிராமங்களில் திட்டங்களை மேற்கொள்ள அரசு பரிந்துரைக்கிறது.
துறை சார்ந்த செயற்பாடுகள்
சுகாதாரம், கல்வி, பெண்கள் முன்னேற்றம் ஆகிய துறை சார்ந்த செயற்பாடுகளை திட்டக்குழு முன்னரே திட்டமிட வேண்டும். அப்போதுதான் அதற்கேற்ற திட்டங்களை வடிவமைத்து குறிப்பிட்ட காலத்திற்குள் செயற்படுத்த முடியும். இதில் பெருநிறுவனங்கள் தங்களுடைய விற்பனைப் பொருட்களை சார்ந்தே யோசிக்கின்றனர். உதாரணம் லீவர் நிறுவனம் கல்வி, சுகாதாரத்திலும், பெண்கள் முன்னேற்றத்திலும், ஐடிசி கல்வி சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
எனவே நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களை சுமையாக கருதாமல் தனது சமூக கடமையாக கருதி அதனை ஏற்கவேண்டும். இதன் மூலமாக அப்பகுதி சார்ந்த மக்களும், பொருளாதாரமும் வளர்ச்சி பெற வாய்ப்பு கிடைக்கும்.
நன்றி - தினமலர் பட்டம்