ஜாலி கேலி கலாய் காதல் சினிமா - ஓ மை கடவுளே !
ஓ மை கடவுளே - தமிழ்
அஷ்வத் மாரிமுத்து
ஒளிப்பதிவு - விது அய்யன்னா
இசை - லியோன் ஜேம்ஸ்
ஒரு பெண், இரண்டு ஆண்கள். இந்த மூவரும் நண்பர்கள். பப் மது அருந்திக்கொண்டிருக்கும்போது, காதலித்தவர்களை கல்யாணம் செய்துகொண்டால்தான் லைஃப் நன்றாக இருக்கும் என்று ஒருவர் சொல்லுகிறார். அருகிலிருந்து தோழி, அதையேதான் யோசிக்கிறார். உடனே அருகிலிருந்த தோழனிடம் நாம் கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்கிறார். அதை மறுக்க அவரிடமும் எந்த காரணமுமில்லை. அடுத்த பதினைந்து நிமிட ஆட்டோ பயணத்தில் சரி பண்ணிக்கலாம் என்கிறார். அதன்பிறகு அவர்களது வாழ்க்கை என்ன ஆனது, ஓ மை கடவுளே என்று சொல்லும்படி ஆன நிகழ்ச்சிகளை அட்டகாசமாக உருவாக்கிய படம்தான் ஓ மை கடவுளே.
ஆஹா!
இயக்குநர் ஆறு ஆண்டுகளாக எழுதி உருவாக்கிய படம். அதனால்தான் திரைக்கதை -வசனம்-இயக்கம் என ஹரி, கே.எஸ். ரவிகுமார் ரேஞ்சுக்கு போடுகிறார். படத்தில் தான் யோசித்த விஷயங்களை நுட்பமாக பேசி அதற்கு நியாயம் செய்துவிடுகிறார்.
எளிமையாக கிடைத்த விஷயங்களின் அருமையை நாம் உணருவதில்லை என்பதுதான் படத்தின் கான்செப்ட். அப்படி கிடைத்த தோழி - மனைவியை தவறவிடும் ஒருவன், இரண்டாவது வாய்ப்பில் எடுக்கும் முடிவு என்ன என்பதுதான் கிளைமேக்ஸ்.
காமெடி, கோபம், வருத்தம், ஏக்கம் என அத்தனையையும் கண்களில் கொண்டு வந்துவிடுகிறார் அசோக் செல்வன் (அர்ஜூன்). இவருக்கு ஈடுகொடுத்து சளைக்காமல் நடித்திருக்கிறார் ரித்திகா சிங்(அனு). செராமிக்ஸ் நிறுவனம் வைத்துள்ள எம்.எஸ். பாஸ்கர் (பால்ராஜ்) கிடைத்த கேப்பில் பிரமாதப்படுத்தி இருக்கிறார். டாய்லெட் பீங்கானில் கம்ஃபோர்ட் பற்றி அர்ஜூனுக்கு சொல்லித்தரும் காட்சி, ஆல்டைம் சிரிசிரிதான். இதில் வரும் ஃபேன்டசி பகுதியில் விஎஸ்பியும், ரமேஷ் திலக்கும் கலக்கியிருக்கிறார்கள். சில விஷயங்களை சொன்னால் புரியாது. படத்தைப் பாருங்கள்.
லியோன் ஜேம்ஸின் பாடல்களில் கதைப்போமா சித்ஸ்ரீராம் குரலில் நன்றாக வந்திருக்கிறது. பின்னணி இசையிலும் ஈர்க்கிறார்.
ஐயையோ
செகண்ட் சான்ஸ் கிடைத்து அர்ஜூன் செய்யும் சேட்டைகளை வெட்டி எறிந்திருக்கலாம்.
காதல் சினிமாதான். இரண்டு அர்த்தங்களை நிறைய வைக்காமல் ஜாலியான அதேசமயம் யோசிக்கவேண்டிய விஷயங்களை படத்தில் வைத்திருக்கிறார் இயக்குநர். நம்பிக்கைக்குரிய புதிய வரவு.
ஜாலி கேலி கலாய் காதல் படம்
கோமாளிமேடை டீம்