இடம்பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய அரசு அவமானகரமாக நடத்தியது! - சரத்பவார், தேசியவாத காங்கிரஸ் தலைவர்





மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் ...
பத்திரிக்கை

சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் தலைவர்

 

மகாராஷ்டிரத்தில் அரசியல் சமநிலையின்மை நிலவுகிறதா? குடியரசுத்தலைவர் ஆட்சி வர வாய்ப்பிருக்கிறது என்கிறார்களே?

இவையெல்லாம் ஆதாரமற்ற வதந்திகள். முன்னாள் முதல்வரான பட்னாவிஸ் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் சந்திப்பில் இத்தகைய வதந்தி பரப்பப்பட்டுள்ளது. நாங்கள் கூட்டணிக்கட்சிகளின் பல்வேறு வேறுபாடுகளைக் கடந்தும் இணக்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். பிற மாநிலங்களைப் போலவே நாங்களும் கோவிட் -19 பாதிப்பை எதிர்கொண்டு போராடி வருகிறோம். முந்தைய பாஜக அரசின் பல்வேறு தோல்வியுற்ற நிர்வாக விஷயங்களை சமாளித்து ஆட்சி நடத்தி வருகிறோம். எங்கள் மாநில மக்களும் எங்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

 மத்திய அரசு அளித்துள்ள நிதியுதவி உங்களுக்கு போதுமானதாக தோன்றுகிறதா?

நிதி அமைச்சகம் அளித்து நிதியுதவி முழுக்க வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கு மட்டுமே. கஷ்டப்படும் மக்களுக்கு அளித்து உதவவில்லை. அறிவிக்கப்பட்டுள்ள தொகையும் போதுமானது அல்ல. இந்த விஷயத்தில் மத்திய அரசு தோற்றுவிட்டது.

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடத்தப்படும் விதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மத்திய அரசு பல்வேறு மாநிலங்களிலிருந்து சொந்த மாநிலங்களுக்கு வந்த தொழிலாளர்களை அவலமான முறையில் நடத்தியது. மேலும் பல லட்சக்கணக்கானோரை வீட்டுக்கு அனுப்பாமல் திரும்ப வேலை  செய்யும் இடங்களுக்கு அடித்து துரத்திய மன்னிக்கமுடியாத செயல். சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ள தொழிலாளர்கள் பற்றித்தான் நான் இப்போது கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறேன்.

எதிர்காலத்தில் தொழிலாளர்களை பணியமர்த்த வேண்டுமெனில் உத்தரப்பிரதேச அரசைக் கேட்டுக்கொண்டு செயல்படவேண்டும் என அம்மாநில  முதல்வர் கூறியுள்ளாரே?

அவர் முதல்வராக இருக்கிறார். குறைந்தபட்சம் அரசியலமைப்புச்சட்டம் மக்களுக்கு அளித்துள்ள சுதந்திரம் உரிமைகள் பற்றி படித்துவிட்டு பேசினால் நன்றாக இருக்கும்.

மகாராஷ்டிரத்தில் நிறைய இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் இன்னும் பொது முடக்க விதிகள் அமலில் இருக்கிறதே?

நாங்கள் நோய்த்தொற்று பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் மக்கள் சுகாதாரமும், சுத்தமுமாக இருக்க வலியுறுத்தி வருகிறோம். வணிகத்திற்கு புகழ்பெற்ற மகாராஷ்டிர மாநிலம் கடந்த இரண்டு மாதங்களாக எவ்வித வணிக நடவடிக்கைகளும் இன்றி முடங்கிப்போய் கிடக்கிறது. இனியும் அப்படி இருந்தால் மக்களின் வேலைவாய்ப்பு, மாநில பொருளாதாரம் என அனைத்தும் சிக்கலாக வாய்ப்புள்ளது. எனவே நாங்கள் விதிகளை தளர்த்தி வருகிறோம். இன்று தினசரி மகாராஷ்டிரத்திலிருந்து நாற்பது ரயில்கள் இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கு சென்று வருகிறது. இதற்கு காரணம், பல லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு நாங்கள் வேலைவாய்ப்புகளை இங்கே உருவாக்கி கொடுத்திருக்கிறோம். அமித்ஷா பாஜக கூட்டங்களில் மகாராஷ்டிரத்திற்கு என்ன செய்தார் என்று கேட்டுவருகிறார். நாங்கள் இங்கே மக்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருக்கிறோம். இது பாஜகவினருக்கு எப்போதும் புரியாது. பாராட்டவும் மனசு வராது.

மும்பையில் நோய்த்தொற்று அதிகமாக இருக்கிறதே?

உண்மைதான். காரணம், மும்பை அதிக மக்கள் நெருக்கடியான மாநிலம். இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மக்களும் நெருக்கமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் எப்படி சமூக இடைவெளியை கடைபிடிப்பது? ஆனாலும் இப்போது நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு வேகமாக எடுத்து வருகிறது. மகாராஷ்டிரம் குடிசைகளும், நகரங்களும் நிறைந்த பகுதி. வணிக நடவடிக்கைகள் இடையறாது நடந்து வந்த மாநிலம் என்பதால் நோய்த்தொற்று அதிகமாக ஏற்பட்டது.

நன்றி: எகனாமிக் டைம்ஸ்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்