சிஎஸ்ஆர்: கற்றதும் பெற்றதும்



Gujarat received Rs 610.85 cr, second highest in Corporate Social ...
டிஎன்ஏ இந்தியா



6

கற்றுக்கொண்டது என்ன?

1976ஆம் ஆண்டு அமெரிக்காவில் உருவான பாடிஷாப் என்ற நிறுவனம் அழகுப் பொருட்களை 50க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்று வந்தது. இக்காலகட்டத்தில் தன்னைப் பிரபலபடுத்திக்கொள்ள அழகுசாதனப் பொருட்களை சோதித்துப் பார்க்க விலங்குகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற பிரசாரத்தில் இறங்கியது. அக்காலத்தில் ஆயிரக்கணக்கான விலங்குகளை அறிவியல் சோதனைகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி வந்தனர். பல்வேறு போராட்டங்கள், பேரணிகள், விழிப்புணர்வு கண்காட்சிகள் காரணமாக ஐரோப்பிய யூனியன் இதனை தடுக்கும் விதமாக 2002இல் சட்டம் ஒன்றை இயற்றியது.

இந்த சமூக பொறுப்புணர்வு திட்டம் காரணமாக பாடிஷாப் நிறுவனம் திரட்டி அனுப்பிய புகார் மனுக்களின் எண்ணிக்கை 40 லட்சங்களுக்கும் அதிகம்.

கற்றதும், பெற்றதும்!

துறைசார்ந்த பிரச்னையை கையில் எடுக்கவேண்டும். அதேசமயம் அதனை ஊழியர்களும், வெளியிலுள்ள மக்களும் ஏற்கும் விதமாக அமைக்கவேண்டும்.

எடுக்கும் தலைப்பு சர்ச்சைக்குரியதாக இருக்க அவசியமில்லை. ஆனால் குறைந்தபட்சம் ஊடகங்களில் விவாதிக்கப்படும் அளவிலேனும் பேரணிகளை, நிகழ்ச்சிகளை திட்டமிட தோதாத இருக்கவேண்டும்.

நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புகொள்வதோடு, நிறுவனத்தின் வணிகமும் குறிப்பிட்ட இலக்கை அடைவது முக்கியம். பாடிஷாப் தனது பெயரை தனித்துவப்படுத்திக்கொண்டதோடு, சூழல் மீது அக்கறை கொண்ட நிறுவனம் என்ற பெயரையும் பெற்றது.


திட்டம் முக்கியம்!

ஜான்சன்ஸ் அண்ட் ஜான்சன்ஸ் நிறுவனம் குழந்தைகளின் பொருட்களுக்காகவும், பல்வேறு மருத்துவ சாதனங்களுக்காகவும் உலகப் புகழ்பெற்றது. இந்த நிறுவனம் அமெரிக்காவில் உள்ள நர்ஸ்களின் பற்றாக்குறையை அரசின் கவனத்துக்கு கொண்டு முயன்றது. இதற்கான திட்டத்தை 2002ஆம் ஆண்டு கொண்டு வந்தது. அச்சு, காட்சி, இணையம் என அனைத்து வழிகளிலும் நர்ஸ்களின் போதாமையைப் பற்றி மக்களிடம் கொண்டு சென்றது. எளிமையாக தொடங்கினாலும் மக்கள் இதனை ஆரவாரமாக வரவேற்றனர். இதனால் ஜான்ஸன்ஸ் நிறுவன வலைத்தளமே முடங்குமளவு அங்கு 90 லட்சம் மக்கள் வருகை புரிந்தனர். இதனை சாதாரணமாக நினைத்த நிறுவனம் இரண்டு ஊழியர்களை மட்டுமே இதற்கென நியமித்தது. ஆனால் மாதம்தோறும் 1700க்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்து குவிய நிறுவனமே திணறிப்போய்விட்டது.

ஆனால் ஜான்சன்ஸ் நிறுவனம் பல்வேறு செவிலியர் சங்கங்கள், தன்னார்வ அமைப்புகளுடன் ஒன்று சேர்ந்த விழிப்புணர்வுத் திட்டத்தை நாடு முழுக்க நடத்தியது. தனது பெயரை நாடெங்கும் கொண்டு சென்று திட்டத்தில் வெற்றி பெற்றது.


பரிசாக பார்வை

1988ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த லென்ஸ் கிராஃப்டர்ஸ் என்று மூக்கு கண்ணாடி நிறுவனம், பார்வையை பரிசளியுங்கள் என்ற விழிப்புணர்வுத் திட்டத்தைத் தொடங்கியது. மக்கள் பயன்படுத்திய கண்ணாடிகளை அக்குறைபாடு உள்ள பிறருக்கு வழங்கும் திட்டம் இது. இதன்படி, 11 லட்சத்திற்கு மேற்பட்ட பழைய கண்ணாடிகள் நிறுவனத்திற்கு கிடைத்தன. லென்ஸ் கிராஃப்டர்ஸ் நிறுவனம் யார்வேண்டுமானாலும் நிதியுதவி அளித்து தேவையான கண்ணாடிகளை வாங்கவும் ஏழைகளுக்கு உதவலாம் என்று கூறி சாதனை செய்தது.

பழைய கண்ணாடியை மருத்துவரின் குறிப்புகளோடு வாங்கி வைக்க அனைவருக்கும் எப்படி தெரியும்? எனவே, லென்ஸ்கிராஃப்டர்ஸ் நிறுவனம் தனது 18 ஆயிரம் ஊழியர்களை இப்பணியில் ஈடுபடுத்தியது. மேலும் பல்வேறு மக்கள் தொடர்பு பணிகளுக்கு லயன்ஸ் கிளப்புகளோடு இணைந்துகொண்டது. இதிலிருந்து என்ன கற்கலாம்?

திட்டத்தை நிறுவனத்திடமிருந்து மக்களுடையதாக மாற்றிக்கொள்வது அவசியம்.

அடுத்து பிரசாரத்தை உறுதியானதாக உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

ஊழியர்களுக்கு திட்டத்தை தெளிவாக விளக்குவதோடு நமக்கு இதில் என்ன கிடைக்கும் என்பதையும் சொல்லிவிட வேண்டும்.

பல்வேறு தன்னார்வ நிறுவனங்களை இணைத்துக்கொண்டு திட்டத்தை பிரசாரம் செய்வதோடு அதன் பயன்களை கண்காணிக்கவேண்டும்.

திட்டத்தை உருவாக்கும்போதே கவனிக்கவேண்டிய விஷயங்கள் சில உண்டு. அவை, பிரசாரத்தை நாம் யாரை மையமாக வைத்து செய்கிறோம் என்பது முக்கியம். அடுத்து பிரசாரத்தை எந்த நேரத்தில் எந்த நிலப்பரப்பு சாரந்து செய்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். பிரசாரத்தில் நமக்கு கிடைக்கப்போவது என்ன, பேரணி, விழிப்புணர்வுக்கான நிதி ஆகியவற்றை முன்னரே திட்டமிடுவது அவசியம். அப்போதுதான் திட்டத்தில் இறுதி இலக்கை கார்ப்பரேட் நிறுவனங்கள் அடைய முடியும்.

சிஆர்எம் எனும் அப்போதைய பிரச்னை சார்ந்த மார்க்கெட்டிங் தொழில்நிறுவனங்களிடையே புகழ்பெற்று வருகிறது. இதனை அந்த பிரச்னை நடக்கும் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மட்டுமே செய்ய முடியும். கொரோனா பிரச்னைக்கு பிரபல இந்தி இயக்குநர் தான் வரைந்த ஓவியங்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தை கொரோனா பாதிப்பிற்கு வழங்குவதாக கூறினார். இதுவும் சிஆர்எம் வகையில் சேரும். குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனம் இதனை ஏற்று விளம்பரப்படுத்தி நாடெஙுகும் கொண்டுபோய் சேர்த்தால் அதுதான் பிரச்னை சார்ந்த மார்க்கெட்டிங். இதற்கு முன்னரே அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம், சுதந்திரதேவி சிலையை புனரமைப்பு செய்ய எப்படி பிரசாரம் செய்தது என்று பார்த்தோம். அது இந்த வகையில் வரும்.

சமூகப் பிரச்னை சார்ந்த மார்க்கெட்டிங்கை நாம் குழந்தைகளின் கல்வி, ஆர்த்தரைட்டிஸ், எய்ட்ஸ், மார்பக புற்றுநோய், தேசிய பேரிடர் போன்ற விஷயங்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். இதுபோன்ற பிரச்னைகளில் நிறுவனங்கள் தங்களது பொருட்களை வாங்கினால் அதில் பத்து சதவீதம் சமூகப் பிரச்னைக்காக செலவிடப்படும் என விளம்பரம் செய்கின்றன.

நேரடியாக நிதி கேட்காமல் குறிப்பிட்ட பொருளை வாங்கும்போது கிடைக்கும் பணத்தைப் பெற்று சமூகப் பிரச்னைக்காக செலவிடுவது, இந்த வகை சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தில் முக்கியமானது. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர் கார்டு, விசா கார்டு போன்றவை இவ்வகையில் குறிப்பிட்ட சமூக பிரச்னைகளுக்காக கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வெளியிட்டு நிதி திரட்டியுள்ளன. இங்கிலாந்தைச் சேர்ந்த ஏவான் நிறுவனம் பெண்களின் மார்பகப் புற்றுநோய்க்காகவும், டார்க்கெட் நிறுவனம் மாணவர்களின் கல்வி நிதிக்காகவும், லைசோல் நிறூவனம் சுகாதார விழிப்புணர்வுக்காகவும் இன்றுவரை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

பொதுவாக குறிப்பிட்ட சமூக பிரச்னை சார்ந்தும், தான் தயாரிக்கும் பொருட்கள் சார்ந்தும் நிறுவனங்கள் செயல்படுகின்றன.. இதன்மூலம் பிரச்னைக்குத் தீர்வு கிடைப்பது நேரடிப்பலன் என்றாலும் நிறுவனத்தின் பொருட்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேருகிறது. சக போட்டியாளர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டவும் இந்த சிஆர்எம் முறை உதவுகிறது.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது பற்றி பிரதமர் பேசுகிறார். அதற்கான விழிப்புணர்வு தினம் வருகிறது என்றால் அதை வைத்தே மருந்து நிறுவனங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தலாம். தனியார் நிறுவனங்கள் என்பதால் தடுப்பூசி மருந்துகளை குறிப்பிட்ட காலகட்டத்தில் தள்ளுபடியில் குழந்தைகளுக்கு போடலாம் என அறிவிப்பு கொடுத்தால் சமூக விழிப்புணர்வோடு வணிகம் செய்த மாதிரி ஆயிற்று அல்லவா? இப்படித்தான் இப்போது மருந்து கம்பெனி நிறுவனங்கள் ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கிறார்கள்.

அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகளை இலவசமாக போடுகிறார்கள் என்றாலும் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்துகளை கட்டணம் பெற்று போடுகிறார்கள். ஆனால் அதனை விலை குறைத்து கொடுத்தால் சமூக விழிப்புணர்வோடு வியாபாரமும் கைகூடும். இதை ஒருமுறை செய்துவிட்டு அப்படியே விட்டுவிடக்கூடாது. அப்படியே ஆண்டுதோறும் தொடர்ந்தால்தான் வணிக வரலாற்றில் நிறுவனம் இடம்பிடிக்கும், வணிகமும் புதிய இடங்களில் வளரும்.