சட்டம் போட்டால் சமூக பொறுப்புணர்வு கூடுமா?
mallenbaker.net |
சட்டங்களால் சமூகப் பொறுப்புணர்வு அதிகரிக்குமா?
இந்திய அரசு, அண்மையில் சமூக பொறுப்புணர்வுத் திட்டம் பற்றிய சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. இதன்படி பெருநிறுவனம் சமூகப் பொறுப்புணர்வுக்காக ஒதுக்கிய 2 சதவீத நிதியைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலவழித்தே ஆகவேண்டும். மூன்று நிதியாண்டுகளுக்குள் நிதியை செலவழிக்காதபோது, அந்நிதியை அரசுக்கு வழங்கவேண்டும். மேலும் விதிமீறலுக்கு அபராதமாக 50 ஆயிரம் முதல் 25 இலட்சம் ரூபாய் விதிக்கப்படவிருக்கிறது. இதற்கு காரணமான அதிகாரிகளை மூன்று ஆண்டுகளுக்கு சிறையிலும் அடைக்க முடியும் எனக் கூறும் அரசு விதிகள் பயமுறுத்துகின்றன.
சமூகநலநோக்கில் நிதி செலவழிக்கும் நிறுவனங்களைக் கூட காலக்கெடு விதித்து அரசு மிரட்டுகிறது என வணிக வட்டாரங்களில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. 5 கோடி லாபம் சம்பாதிக்கும் அல்லது 500 கோடி முதல் 1000 கோடி மதிப்பிலான நிறுவனங்கள் கட்டாயமாக 2 சதவீத தொகையை சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு செலவிடுவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
“2024 ஆம் ஆண்டுவரை பெருநிறுவனங்களுக்கு காலக்கெடு உள்ளது. அவர்கள் செலவிடாத பணம் அரசின் பொருளாதாரப் பற்றாக்குறை திட்டங்களுக்கு செலவழிக்கும் நோக்கம் கிடையாது. நிறுவனங்கள் திட்டமிட்டுள்ள நோக்கங்களுக்கு நிதியைச் செலவழித்தால் மகிழ்ச்சி ” என்கிறார் வணிக விவகாரங்கள் துறைச் செயலர் இன்ஜெடி ஸ்ரீனிவாஸ்.
இந்தியாவின் டாப் 500 நிறுவனங்கள் 2014 -2019 (மார்ச்) வரையில் சமூக பொறுப்புணர்வுக்காக 50 ஆயிரம் கோடி ரூபாயைச் செலவிட்டுள்ளனர். இந்நிறுவனங்களே, 90 சதவீத சமூகத்திட்டங்களுக்கான நிதியை வழங்குகின்றன. ”அரசு சமூகப் பொறுப்புணர்வுக்கான நிதி வழங்கலைக் கட்டாயமாக்கியுள்ளது. இதன் விளைவாக இந்நிறுவனங்கள் ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடுவது முறைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது” என்கிறார் என்ஜிஓபாக்ஸ் அமைப்பின் இயக்குநரான போமிக் ஷா.
இந்நிதியைப் பெறுவதில் மகாராஷ்டிரம், இராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. கல்வி, உடல்நலம், சுகாதாரம் ஆகிய துறைகளில் அதிகளவு சமூகப் பொறுப்புணர்வுத்திட்டங்கள் செயற்பாட்டில் உள்ளன. மிசோரம், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் சமூகப் பொறுப்புணர்வு நிதியைப் பெறுவதில் பின்தங்கியுள்ளன.
கம்பெனிகள் சட்டம் 2013 படி சமூகப்பொறுப்புணர்வு சட்டம் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் சமூகத்திட்டங்களை 17 வகைப் பிரிவுகளாகக் குறிப்பிடுகிறது. இச்சட்டப்பிரிவில் இதுவரை 60 வழக்குகள் பதிவாகி தீர்க்கப்பட்டுள்ளன. இவை குற்றவழக்காக கருதப்படாது என்பதே மட்டுமே நிறுவனங்களுக்கு ஒரே ஒரு நிம்மதியான விஷயம்.
-கா.சி.வின்சென்ட்