சூழலியலாளர்கள் படுகொலை - ஏரி ஆக்கிரமிப்பாளருக்கு நேர்ந்த கொடூரம்!




Image result for karur veeramalai murder





அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவதுமில்லை!




மேலே சொன்ன அப்பர் பெருமானிம் வரிகளை மனதில் கொண்டுதான் தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே சூழலியலாளர்கள் செயற்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் அரசியல் கட்சிகளும், குற்றவாளிகளும் கைகோத்து செயற்படுவதால், இயற்கையைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் பலியாகி வருகிறார்கள். அண்மையில் கரூர் மாவட்டத்தில் ஜூலை 29 அன்று, முத்தாலைபட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரமலை, நல்லதம்பி என்ற தந்தை - மகன் இருவரும் கொல்லப்பட்டது இப்படித்தான்.

ஆறுபேர் கொண்ட குழு இவர்களை வெட்டிச்சாய்த்தது. காரணம், சுலபம். ஏரிக்குச் சொந்தமான 39 ஏக்கர்களை சமூக விரோதிகள் ஆக்கிரமித்தனர் என்று புகார் மனுவை எழுதினர். அம்மனுவை, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்சில் தாக்கல் செய்த குற்றத்திற்காக கொல்லப்பட்டனர்.
”அரசு பொதுச்சொத்துகளைக் காப்பதில் அக்கறை காட்டுவதில்லை. அதனைக் காப்பாற்ற முயற்சிப்பவர்களையும் குற்றவாளிகளுடன் கைகோத்து கொல்கிறது. இதில் எதிர்கட்சிகள் ஆளுங்கட்சிகள் என்று எந்த வேறுபாடும் கிடையாது” என்கிறார் எக்ஸ்னோரா தன்னார்வ அமைப்பின் தலைவரான நிர்மல்.

உலகளவில் கோல்டுமேன் பரிசைப் பெறுபவர்கள் பலரும் பரிசு வாங்கியபின் உயிருடன் இருக்கமாட்டார்கள். காரணம், சமூகவிரோதிகள், வனங்களைக் காப்பாற்றிய சூழல் தன்னார்வலர்களை திட்டமிட்டு கொன்றுவிடுவர். பிலிப்பைன்சில்தான் இதுபோல சூழல் தன்னார்வலர்கள் அதிகம் கொல்லப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆள் வைத்துக் கொல்வது புதிதல்ல. திருநெல்வேலி மாவட்டம் போன்றவற்றில் நடந்துவரும் விஷயம்தான் என்றாலும், சூழல் விஷயத்தில் நடப்பது புதியது. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை ஆறு, குளம், குட்டை ஆகியவற்றை பாதுகாத்த ஒரே சமூக குற்றத்திற்காக கொல்லப்பட்டுள்ளனர். அரசு எங்கே என்று கேட்கிறீர்களா? குளம் குட்டையை தூர்வாரச் சென்றார்கள் உடனே நீங்கள் எப்படி தூர்வார வரலாம் என்று கேட்பார்கள். தூர்வாரியபின் அதில் கற்கள் பதித்து இடங்களை விற்க வருவார்கள். பின்னே அரசும் சில பணிகளைச் செய்துதானே ஆகவேண்டும்?

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 48 ஏ, அரசு தனக்குச் சொந்தமான இயற்கை நிலங்களை பாதுகாப்பது பற்றிய விதிமுறைகளைக் கொண்டுள்ளது. அடுத்து, 51 ஏ(ஜி) பிரிவு அரசு சரியான முறையில் தனது சொத்துக்களைப் பாதுகாக்காதபோது மக்கள் அதனைப் பாதுகாக்கலாம் என்று கூறுகிறது. அதனை அவர்களது கடமை என்றும் குறிப்பிட்டுள்ளது. அது சரிதான், ஆனால் இதனை நம்மைக் கொல்ல வேகமாக லாரி ஓட்டிவருபவரிடம் கத்திச் சொல்ல முடியுமா? அவர் இந்தச் சட்டங்களை படித்திருப்பாரா?

”தனிநபர்கள் சூழலைப் பாதுகாக்க திரண்டால் அரசு எளிமையாக சூழல் தீவிரவாதம் என்று கூறிவிடுகிறது. ஆனால் இவர்கள் இங்கு செய்வது என்ன? அரசின் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஊழல், மோசடி என உளுத்துவிட்டதுதான் இந்த பிரச்னைகளுக்கு காரணம்” என்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான தேவசகாயம். பதினெட்டு ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறை எப்படி வளர்ந்தது? இப்படி அரசு நிலங்களை வளைத்துப்போட்டுத்தான். கூடுதலாக கல்விச்சேவையாற்றும் தந்தையர்களின் கல்வி நிறுவனங்கள் எழும்பி நிற்பதே குளம் குட்டைகளில்தான். இப்படி நீராதாரங்கள் பறிபோய்க்கொண்டிருக்க, தியேட்டர்களில் துறைசார் அமைச்சர் மழைநீர் சவால் விட்டுக்கொண்டிருக்கிறார். நாம் உண்மையில் வாங்குகிற சம்பளத்துக்கு ஏன் வேலைபார்க்கவில்லை என்று கேட்க திராணியற்று கையறு நிலையில் நிற்பதுதான் இதற்கு காரணம்.

சாதாரண மணல் அள்ளிப்போட்டு கொண்டு செல்லும் லாரிகளைப் பார்த்திருப்பீர்கள். இது சாதாரண துறை கிடையாது. ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் மணல் அள்ளுவதில் புழங்குகிறது. 2014 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் சாம் தேவசகாயம் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒற்றை ஆளாக மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தார். அவருக்கு என்ன பரிசாக கிடைத்த து தெரியுமா? கத்திக்குத்து மரணம். 81 வயதில் மணல் அள்ளுவதைத் தடுக்கவேண்டும் என அலைந்து திரிந்து கூலிப்படையால் கொலைசெய்யப்படவேண்டும் என அவருக்கு என்ன தலைவிதி சொல்லுங்கள்.

திருப்பூரின் எலச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன், மணல் மாஃபியாக்களை எதிர்த்து போராடி வருபவர். 2015 ஆம் ஆண்டு ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக மணல் அள்ளியவர்களைப் பற்றி புகார் அளித்தார். குற்றவாளிகளை தாசில்தார் முன்பு ஆஜர் செய்யப்போக தயாராக  இருந்தார். அன்று இரவு கூலிப்படையால் கடுமையாக தாக்கப்பட்டார் பிரபாகரன். உடனே போலீஸ் அங்கு வந்தது. மணலைத் திருடிய லாரி உரிமையாளருக்கு விசுவாக வாலையாட்டியபடித்தான்.

 மணல் கொள்ளையரின் லாரி மீது பெட்ரோல் குண்டு வீசியதாக புகார். உடனே பிரபாகரனை போலீஸ் கைது செய்தது. இதனால்தானே ஸ்காட்லாந்துயார்ட் வரை தமிழ்நாடு போலீசின் புகழ் பரவியிருக்கிறது? இன்றுவரை தகவல் உரிமை சட்டத்தில் அரசு சொத்துக்கள் பற்றிக் கேள்வி கேட்ட 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அரசைக் கேட்டால் நடவடிக்கை எடுத்துவருகிறோம் என்பார்கள். அத்தனை குற்றங்களும் போலீசுக்கு தெரிந்துதான் நடக்கின்றன. கொலைமிரட்டல்கள் வந்தபின்னர் அதை போலீசுக்கு கூறியபின்னர்தான் தன்னார்வலர்கள் தாக்கப்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். இயக்கமாகச் சேர்ந்து போராடுவது, இயற்கைச் சொத்துக்கள் மட்டுமல்ல இறந்துபோனவர்களுக்கு நீதிகிடைக்கவும் உதவும் என்கிறார் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன்.

 நன்றி- டைம்ஸ் - ஜெயராஜ் சிவன்