ஹிப்பி திருவிழா - 1969 வுட்ஸ்டாக் கொண்டாட்டம்!
அரை நூற்றாண்டுக்கு முன்பு இசைக்கலாசாரம் ஒன்று தொடங்கியது. இதில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விநோதர்கள் கலந்துகொண்டனர். ஆம் இவர்கள்தான் இசை, ஆன்மிகம் என நாடோடியாக அலைந்து திரிந்த கேசுவல் ஹிப்பிகள். எல்எஸ்டி போர்டு வைத்து அதனை விற்று காசு சேர்த்து ஜமாய்த்த கில்லாடிகள்.
அமைதியும் இசையும் என்ற பெயரில் இந்த இசை விழாக்கள் அக்காலத்தில் மரபு ஆட்களையும் அமைப்புகளையும் அதிரடித்தன. அதைப் பலரும் பின்பற்றி இசையமைத்து பாடல்களும் வெளியிட்டனர்.
வுட்ஸ்டாக் இசைவிழாவை மைக்கேல் லாங், ஆர்டி கான்ஃபெல்ட், ஜோயல் ரோசன்மென், ஜான் ராபர்ட்ஸ் ஆகியோர்தான் தொடங்கினர். இவர்கள் பல்வேறு இசை நட்சத்திரங்களை அணுகி, நிகழ்ச்சி நடத்தக் கேட்டனர். ஆனால் அவர்கள் ஏதோ காரணத்தால் மறுத்துவிட்டனர். ஆனாலும் இளைஞர்களை சந்திக்க முடியும் காரணத்தினால் புகழ்பெற்ற சிலர் இசைந்தனர். இதன் விளைவாக, அவர்கள் புகழின் உச்சத்தைத் தொட்டனர்.
வால்கில் எனுமிடத்தில் விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அவர்களும் ஒரு கட்டத்தில் இசைவிழாவுக்கு இடம் தர மறுத்துவிட்டனர். பின் பெதல் பகுதியில் நிலமுள்ள பால்பண்ணை விவசாயி இடம் தர முன்வந்தார். அதற்கும் மறுப்புகள் எழுந்தன. உடனே, எனக்கும் இந்த இளைஞர்களின் உடை, கலாசாரம் , கட்டற்ற காதல் பிடிக்கவில்லை. ஆனால் இது அமெரிக்கா. ஒருவர் தனக்குப் பிடித்த மாதிரி வாழ அனுமதிக்கிற பூமி. எனவே நான் அவர்களுக்கு என் இடத்தை இசைவிழா நடத்த தருகிறேன் என்றார். சொன்னபடியே நடந்துகொண்டார்.
காதலரின் கையைத் தேடாதீர்களேன் ப்ளீஸ்! |
ஆகஸ்டில் நான்கு நாட்கள் நடைபெறும் விழாவுக்கு, ஜூலையில் இருந்து வேலை நடைபெற்றது. ஆகஸ்ட் 13 அன்று அதாவது இரு நாட்களுக்கு முன்பாகவே மக்கள் கூட்டம் விழா நடைபெறும் இடத்திற்கு வரத்தொடங்கியது. விழாக்குழுவினர் எதிர்பார்த்தது 15000 பேரைத்தான். ஆனால் வந்த மக்களின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் அதிகம். எனவே காசு வைத்து விழாவை தேற்ற நினைத்த நான்கு இளைஞர்களும் இதை எதிர்பார்க்கவில்லை. எனவே கூட்டதைச் சமாளிக்க விழாவை இலவசம் என்று அறிவித்தனர். உணவு வழங்கும் ஆட்களை அனுபவம் பார்த்தெல்லாம் ஒப்பந்தம் போடவில்லை. வாங்க என்று சொல்லிவிட்டார்கள். அவ்வளவுதான்.
இதில் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லையா? ஒருவர் மைதானத்தில் தூங்கும்போது அதைத் தெரியாமல் ஒருவர் அவர் மீது ட்ராக்டரை ஏற்றிவிட்டார். அப்புறம் என்ன நில சமாதிதான். அதைத்தவிர வேறு குற்றங்கள் ஏதும் நடக்கவில்லை. ஏனெனில் மற்றவற்றை குற்றம் என கூறும் மக்கள் யாரும் அங்கு இல்லை என்பதே அதற்குக் காரணம்.
தன்னார்வலர்கள் மையம் திறக்கப்பட்டு வந்தவர்களுக்கு உணவு, முதலுதவி, எல்எஸ்டி என சகலமும் வழங்கப்பட்டது. ஜிம்மி ஹென்ட்ரிக்ஸ், தி ஹூ, ஜெஃபர்சன் ஏர்பிளேன், ஜேனிஸ் ஜோப்ளின் ஆகியோரின் இசைக்கச்சேரியை கஞ்சா புகைத்தபடி கேட்டு ரசித்தனர்.
சுவாமி சச்சிதானந்தா, இந்த விழாவுக்கு வந்து லட்சக்கணக்கான பக்தர்களின் சக்தியை எழுப்பினார். மூலாதாரத்திலிருந்து ஸ்வாதிஷ்டானம் வழியாக துரியத்துக்குத்தான். அதன் விளைவு என்னாச்சு என நீங்களே தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள். அங்கு உடை என்பது ஆப்ஷனல்தான்.
டைம் முதல் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வரை வுட்ஸ்டாக் இசைவிழாவைப் பற்றி எழுதித்தள்ளினர். பின்னே உலகமே இந்த விழாவின் வெற்றியைப் பற்றித்தானே பேசியது. எல்எஸ்டி பயன்படுத்தாதீர்கள் என விழாக்குழு மெகாபோனில் கத்தியது யாருக்கோ என மக்கள் இருந்தனர். பாதி காற்றோட்டமான லீவிஸ் ஜீன்ஸில் பங்கேற்று இசைவெள்ளத்தில் மூழ்கி முழுக்க ஆதாம் ஏவாளாக மக்கள் மாறினர். இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அங்கு அனைவருமே அப்படித்தான் இருந்தனர். இந்த விழாவில் இந்திய சிதார் இசைக்கலைஞர் ரவிசங்கர் பங்கேற்றார்.
இந்த விழாவின் இசையை ரசிக்க வேண்டுமா? கீழேயுள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.