கருப்பர் என்று நினைக்க வற்புறுத்தாதீர்கள்! - ஜேம்ஸ் பேல்ட்வின்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள்
ஜேம்ஸ் பேல்ட்வின்!
அமெரிக்காவின் ஹர்லேமில் 1924 ஆம் ஆண்டு பிறந்த பேல்ட்வின் எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர். ஓவியரான பியுஃபோர்டு டெலனி, கருப்பினத்தில் எதிர்பார்க்காத கலைஞன் என்று இவரைப் பற்றி பெருமையாக கூறியிருக்கிறார். இவரது படைப்புகள் 1947 ஆம் ஆண்டில் முதன்முறையாக வெளியாகின. பின்னர், கட்டுரைகள் வெளியாகி கவனம் பெற்றன. பின் நோட்ஸ் ஆஃப் நேட்டிவ் சன் என்ற நாவல் (1950) வெளியானது. ஜியோனிஸ் ரூம் என்ற இரண்டாவது நாவல் இவரை உலகறிய வைத்தது. காரணம் அதிலிருந்த பாலுறவு பற்றிய விஷயங்கள்தான். இதில் ஓரினச்சேர்க்கை விவகாரங்கள் ஏராளம் இருந்த்தால் சர்ச்சைகள் சுழன்றடித்தது. அதனால் நூலை வெளிநாடுகளில்தான் வெளியிட்டார்.
இருபதாம் நூற்றாண்டுகளில் மழை, பனி என சக கவிஞர்கள் எழுதி பிரசவிக்க, கருப்பினத்தவர்களின் வாழ்க்கை பற்றி எழுதி மிரட்டியவர் ஜேம்ஸ் பேல்ட்வின். இன்றும் அக்கால வாழ்க்கை பற்றி அறிய இவரது கட்டுரைகளைப் படித்தால் போதும்.
பேல்ட்வின் பிறக்கும்போது, தாய் தனியாக வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று வயதாகும்போது டேவிட் பேல்ட்வின் என்பவரை மணந்தார். குடும்ப உறவுகள் சரியில்லை என்றாலும், படிப்பில் கோட்டை விடவில்லை. முடிந்தளவு நூல்களைப் படித்தார். டேவிட் கிளிண்டன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பள்ளி பத்திரிகைக்கு இவர்தான் பொறுப்பு. கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் என எழுதிக் குவித்தார்.
1942ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தார். அதற்குப்பிறகுதான் வாழ்கை அவருக்கு புரியத்தொடங்கியது. காரணம், நிறவெறிக் கொடுமைகள். ரயில்வே ரோடு வேலை, ஓட்டல், பார் என செய்யாத வேலை இல்லை. ஏன் இவ்வளவு கஷ்டம்? ஏழு குழந்தைகளைக் கொண்டது அவரது குடும்பம். சோறு வேண்டாமா? ஆப்பிரிக்க அமெரிக்கரான அவருக்கு போகுமிடமெல்லாம் அவமானங்களும் நிறவெறி வசைகளும் நிறையக் கிடைத்தன. 1943 ஜூலை 23 அன்று தன் தந்தையை இழந்தார். அதேசமயம் எட்டாவது சகோதரனைப் பெற்றார். பின் எழுத்துதான் வாழ்க்கை என முடிவு செய்தார். ரிச்சர்ட் ரைட் என்ற எழுத்தாளரை நண்பராக க் கொண்டு அவரது அறையில் தங்கினார். செலவுகளைப் பகிர்ந்தனர். அப்போது எழுதிய கட்டுரைகள் தி நேஷன், பார்டிஷன் ரிவ்யூ, தி கமண்டரி ஆகிய இதழ்களில் வெளிவரத் தொடங்கின. அப்போது உதவித்தொகை கிடைக்க பிரான்ஸ் பயணமானார்.
அப்போது சொன்ன வார்த்தை அவரது நிலையை அனைவருக்கும் விளக்கியது. ”நான் அடிமை ஒருவரின் பேரன் மற்றும் எழுத்தாளர். இந்த இரண்டையும் நான் சமாளித்து வரவேண்டும்” என்றார். 1978 ஆம் ஆண்டு ஜஸ்ட் அபவ் மை ஹெட் என்ற நூலில் ஆண்களுக்கு இடையிலான பாலுறவு பற்றி எழுதினார். பின்னர் தன் பாலினத்தை வெளிப்படையாகவே அறிவித்தும் விட்டார். மார்ட்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ் ஆகியோரின் படுகொலை மனரீதியாக பேல்ட்வினைப் பாதித்தது. அந்த பாதிப்பு எழுத்துகளிலும் தெரிந்தது. தன் வாழ்நாளின் இறுதிவரை கட்டுரைகள் எழுதி வந்தார். மாற்றுப்பாலினத்தவர் பற்றியும், கருப்பினத்தவர் பற்றியுமான கட்டுரைகள் இவரது எழுத்தில் முக்கியமானவை.
”நீங்கள் உங்களை வெள்ளையராக நினைக்கும்வரை நான் கருப்பராகத்தான் நினைக்க வற்புறுத்தப்படுவேன் ”என ஆவேசப்பட்டு பேசும் அளவுக்கு பேல்ட்வின் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது நாவலை வைத்து ஓரினச்சேர்க்கையாளர் என்று சொன்னால் உடனே பொறுத்துக்கொள்ள முடியாமல் போவது இவரது பலவீனம். மனதில் பட்டதை அங்கேயே பேசிவிடும் தைரியம் இல்லாமலா ஓரினச்சேர்கை பற்றி அன்றே நாவல் எழுதியிருக்க முடியும்? பிரான்சில் 1987 ஆம் ஆண்டு டிச.1 அன்று மறைந்தார்.
நன்றி:அவுட் .காம்
தமிழில் - வின்சென்ட் காபோ