தியேட்டர்களில் தேசியகீதம் நல்லதுதான்! - சேட்டன்பகத்
தியேட்டர்களில் தேசியகீதம் பாட டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது சமூக வலைத்தளங்களில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. எமர்ஜென்சி காலங்களில் கூட இதுபோன்ற ஆணைகள் அமலில் இருந்தன என்பதால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
தியேட்டர்களில் தேசியகீதம் அவசியமா என்று கேள்வி எழுப்பப்படுவதில் தவறில்லை. இந்திய அரசின் ஒற்றுமைக்கான நடவடிக்கை என்றே இதனை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அடாவடியாக அமலாவதால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய விவாதம் ஏற்படுத்தினாலே உடனே ஏன் தேசிய கீத த்திற்கு எதிராக இருக்கிறீர்கள்? நீங்கள் தேச துரோகி என புரிந்துகொள்ள முடியாத மொழியில் சிலர் பேசுகின்றனர். இந்தியாவின் பெயர் பலநேரங்களில் கெடுவது இதுபோன்ற கண்மூடித்தனமான தேசபக்தியாளர்களால்தான்.
தியேட்டர்களில் தேசியகீதம் பாடுவது நீதிமன்ற உத்தரவு எனும் போது அதனை விமர்சிப்பது அரசியலைப்புச்சட்டப்படி தவறு. இதில் என் கருத்து, இது தேவையானது என்பதுதான். உடனே இதனை ஜெர்மனியின் ஹிட்லர் செய்தது போல இருக்கிறது நண்பர்கள் வலைத்தளங்களில் பொங்குகிறார்கள். சிலர் எதற்கு எழுந்து நிற்கவேண்டும் என்று தாமதமாக க் கூட படத்திற்கு வருகிறார்கள். இது அவரவரின் சுதந்திரம். ஒருவரை தேசியகீத த்திற்கு எழுந்து நில் என்று கட்டாயப்படுத்துவது தவறு என்றுதான் கூறுவேன். ஒருவரின் தனிநபர் உரிமையில் நாம் கைவைப்பது போல இந்த உத்தரவைக் கருதுகிறேன். நான் ஒரு கருத்தைக் கூறுகிறேன். அதில் உங்களுக்கு ஒரு மாற்றுக்கருத்து இருக்கிறது. எனக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து உங்களை நசுக்கி என் கருத்தை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்றால் அங்கு வளருவது வெறுப்புதானே?
அரசு தன் உத்தரவை எளிமையாக புரியும்படி மக்களுக்கு விளக்கியிருக்கலாம். அது தவறும்போதுதான் தேசதுரோகி குற்றச்சாட்டு, தேசியகீத அவமதிப்பு வழக்கு என தேவையற்ற நீதிமன்ற நேரத்தை வீணாக்கும் செயல்கள் நடைபெறுகின்றன. நாம் இந்தியர் என்று எப்போதெல்லாம் நினைத்துப்பார்க்கிறோம் சொல்லுங்கள். பெருமை, சிறுமை அப்பாற்பட்டு சிந்தியுங்களேன். தேசியகீதம் என்பது ஒரு அடையாளம். அதை வைத்து ஒரு மனிதரை குற்றவாளி ஆக்கவேண்டாமே! ஏனெனில் இந்த சமூகம் என்பது பெரும்பான்மையினருக்கு மட்டுமல்ல தமக்குச் சொந்தமான கருத்துக்களைக் கொண்ட சிறுபான்மை மக்களுக்கும்தான். இந்தியா என்பது கலாசார பன்மை கொண்டதோடு, பன்முக கருத்துக்களையும் விவாதங்களையும் அதன் வழியே முடிவுகளையும் எடுத்து முன்னேறி வந்த நாடு. அதனை எப்போதும் மறக்காதீர்கள் நண்பர்களே!
சேட்டன் பகத்தின் இந்தியா பாசிட்டிவ் என்ற நூலைத் தழுவியது.