கடன் பத்திர வெளியீடு இந்திய அரசைக் காக்குமா?
flipboard.com |
கடன் பத்திர வெளியீடு அரசைக் காக்குமா?
இந்தியா, சரிந்துவரும் உள்நாட்டு உற்பத்தி மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செலவுகளுக்கான நிதி திரட்டும் முயற்சியாக, இந்திய அரசு கடன் பத்திரங்களை ('Sovereign Bond') வெளியிட்டு வருகிறது. தற்போது புதிய நடவடிக்கையாக வெளிநாட்டினரும் இப்பத்திரங்களை வாங்க முடியும் என்ற அரசின் முடிவு, பொருளாதார வல்லுநர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அரசு தன் செலவுகளுக்கான நிதியை இருவழிகளில் பெறலாம். வரி மற்றும் பத்திரங்கள் வெளியீடு. வரியை உயர்த்துவது கடுமையான சட்டச்சிக்கல்களைக் கொண்டது. எனவே பல்வேறு நாடுகள் முதிர்வுகாலத்தைக் கொண்ட கடன் பத்திரங்களை வெளியிடுகின்றன. இதனை மக்கள் அல்லது நிறுவனங்கள் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். அரசு, குறிப்பிட்ட முதிர்வுகாலத்தில் வட்டியுடன் கடன் பத்திரத் தொகையைத் திருப்பி தரவேண்டும். அரசு இப்பொறுப்பில் தவறினால், ரிசர்வ் வங்கி தொகையைத் திருப்பித் தரும்.
இதில் என்ன பிரச்னை? தன் செலவுகளுக்கான நிதி திரட்ட இந்திய அரசு உள்நாட்டுச்சந்தையில் பத்திரங்களை வெளியிட்டு வந்தது. ஆனால், இப்போது கடன் பத்திரங்களை வெளிநாடுகளில் வெளியிடுவது, உள்நாட்டுச்சந்தையை பெரிதும் பாதிக்கக் கூடியது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
முதிர்வுகாலத்தில் டாலர் மதிப்பில் நாம் கடன் பத்திரத் தொகையைத் திருப்பித்தருவது கடினமான ஒன்று. பொதுவாக இந்திய அரசு வெளிநாடுகளில் கடன்பத்திரங்களை வெளியிடுவது குறைவு. காரணம் கடன்மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் மதிப்பீட்டு புள்ளிகளைக் குறைத்துவிடும் அபாயம்தான். இதன்விளைவாக இந்தியாவுக்கு வரும் அந்நியத் தொழில் முதலீடுகள் பாதிக்கப்படும்.
தற்போது முடங்கியுள்ள வாகனத்துறையினர் அரசிடம் முதலீட்டுக்கான பணம் கேட்டு நிற்கின்றனர். விரைவு விற்பனைத்துறை (FMCG) வளர்ச்சியும் குறைந்துவிட்டது. பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன்களை சமாளிக்க இந்திய அரசு, 90 ஆயிரம் கோடி ரூபாய்களைத் தரவேண்டும்.
இந்தியா வெளிநாடுகளில் வெளியிடும் கடன் பத்திரங்கள் மூலம் 7.1 லட்சம் கோடிரூபாயைத் திரட்ட முடிவு செய்துள்ளது. ”இந்தியா வெளிநாட்டு சந்தையில் திரட்டவிருக்கும் கடன் அளவு 5 சதவீதம்தான். இம்முறையில் பிறநாட்டு கரன்சிகளைப் பெற்று, உள்நாட்டுச் சந்தையின் பாதுகாப்பை அதிகரிக்க முடியும் ” என்று கூறினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இம்முறையில் இந்தியாவின் கடன் பத்திர வெளியீடு கடன் 103.8 பில்லியன் டாலர்களாக (மார்ச் 2019 வரை) உள்ளது. உள்நாட்டு உற்பத்தியில் இதன் அளவு 3.8 சதவீதம். ” தற்போது உலக மார்க்கெட்டில் பெரிய லாபம் இல்லை. எனவே உலக முதலீட்டாளர்களை இந்தியப் பத்திரங்கள் வசீகரிக்க வாய்ப்பு உள்ளது” என்கிறார் டில்லி பல்கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியர் பிரவாகர் சாஹூ.
கா.சி.வின்சென்ட்