நேர்த்தி எனும் தொற்றுநோய் - அனைத்திலும் ஒழுங்கு எதிர்பார்க்கிறீர்களா? ஆபத்து!
எனக்கு டிசிப்ளின்தான் முக்கியம், எனக்கு திருப்தியாகலப்பா, இது பெஸ்ட் கிடையாது, நல்லா வொர்க்அவுட் பண்ணுங்க என்ற வார்த்தைகளை நாம் மேலதிகாரிகளிடம் அல்லது ஆசிரியர்களிடம் கேட்டிருப்போம். நாமே அந்த இடத்திற்கு உயரும்போது, நமக்கு கீழிருப்பவர்களிடம் இதே வார்த்தைகளை கூறிக்கூட இருக்கலாம். இதற்கு என்ன பொருள்?
நேர்த்தி. இதை சிலர் நேரடியாக சொல்லுவார்கள். நிறையப்பேர் எனக்கு இப்படி இருக்கணும் என்பதைத்தாண்டி பேசமாட்டார்கள். இதனை அவர்கள் தங்களுடைய ஸ்டைலாக நினைத்துக்கொண்டிருப்பார்கள்.
நான் வேலைசெய்த முன்னாள் பத்திரிகை ஆசிரியர் சிறந்த ஆசிரியர். ஆனால், பர்ஃபெக்ஷன் பார்ப்பவர்தான். மாதந்தோறும் வரும் பத்திரிகையை, தனது நேர்த்தியாக செய்யணும் என்ற குணத்தாலேயே ஆறுமாத பத்திரிகையாக மாற்றினார். காரணம், காத்திரமாக உருவாக்கணும் என்று பதில் சொன்னார். டிசைன் செய்யும் முன்பே இருமுறை திருத்தி எழுத திருத்தங்களை இன்டிசைனில் போட்டு கொடுப்பேன்.
பின் டிசைன் செய்தபின் நான்குமுறை திருத்தங்கள் செய்வார். எப்போது பார்த்தாலும் நான்கு ஏ4 காகிதங்கள் டேபிளில் கிடக்கும். எது எப்போது போட்டது என தேதி எழுதி வைத்து பாதுகாப்பது என் வேலைதான். நிதானமாக படித்துப்பார்த்து திருத்தங்களை மேற்கொள்வதை நான் குறை சொல்லவில்லை. ஆனால் சந்தா கட்டியவர்களுக்கு என்ன பதிலைச் சொல்ல? ஆபீசைத் திறந்து வைத்து இனமானம் காத்தவருக்கு வலது காது செவிடு. இடது காது கேட்கும். போன் வந்தால் நான் எடுத்து பதில் சொல்லவேண்டும். இதுவும் பர்ஃபெக்ஷன்தான்.ஆனால் பக்கவிளைவுகளை யார் சமாளிப்பது? எத்தனை பேருக்கு சங்கடம்.
போட்டி நிறைந்த காலகட்டம் இது. எனவே நேர்த்தி என்பதும் அனைவரும் எதிர்பார்க்கும் தகுதியாக மாறி வருகிறது. எனக்கு தவறே வரக்கூடாது. நீட்டாக இருக்கணும் பதில் பத்தில் ஏழுபேரிடம் இருந்து வருகிறது. இது தொற்றுநோய் போல பலருக்கும் பரவி வருகிறது.
இது தனிப்பட்ட விதத்தில் நேர்த்தி தரக்கட்டுப்பாடு இருப்பது வேறு. ஆனால் இத்தகைய மனம் கொண்டவர் குழுத்தலைவராக வந்தால் குழுவிலுள்ள பலர் தற்கொலை செய்துகொள்வதே நடக்கும். அதாவது, வேலையைவிட்டு விலகி சென்றுவிடுவார்கள்.
வார இதழில் பணியாற்றியபோது, மற்றொரு நேர்த்தி கொண்ட ஆத்மாவைச் சந்தித்தேன். பொறுப்பாசிரியராக பணியாற்றிய சினிமா நிருபர், தற்காலிகமாக ஆசிரியர் பொறுப்பேற்றார். அவருக்குத் தலைமை பொறுப்பேற்கத்தான் ஆசை. ஆனால் தகுதி வேண்டுமே? ஆண்டவனும் அவரின் தகுதியை நினைவுபடுத்த தராசில் நிறுத்துக் கொடுத்த வாய்ப்புதான் அது. அவர் பொறுப்பிலிருந்த பதினைந்து நாட்களில் ரிப்போர்ட்டர்கள் முதல் தலைமை நிருபர் வரை பி.பி மாத்திரை எந்த பார்மசியில் குறைந்த விலையில் கிடைக்கும் என கேட்கவே ஆரம்பித்துவிட்டனர். வேலையை விட்டே ஊருக்குச் சென்று விடலாமா என பக்கத்து சீட்டுக்காரர் கேட்டார். அவருக்கு அபயம் அளிக்க என்னிடம் சங்கும் சுதர்சன சக்கரமுமா இருக்கிறது? முழுக்க கட்டுரை எழுதி முடித்தபின் இதை மாத்து, லீடு இப்படியா எழுதறது மாத்து., கடைசி பாரா கவிதை மாதிரி இருக்கவேணாமா என்ன எழுதுற, நான்சென்ஸ் என அனைவரையும் திட்டத் தொடங்கிவிட்டார் நேர்த்தி எடிட்டர். இறுதியில் பார்ம் தினசரி போகவேண்டுமே என எழுதியபடியே போகவிட்டார். இத்தனைக்கும் அவருக்கு தட்டச்சு செய்யத் தெரியாது என்றால் நம்புவீர்களா?
இவர்களுக்கு திருப்தி வரவேண்டுமென்றால், கூடுவிட்டு கூடு பாய்ந்து எட்டு ரிப்போர்டர்களின் உடலில் புகுந்து தட்டச்சு செய்து கட்டுரைகளை எழுதினால்தான் உண்டு. அதுவும் ஒரே ஸ்டைலில் இருக்கும். விகடனைப் போல. இந்த ஸ்டைல் எனக்கு வேண்டும் என்று அவர் கூறியிருந்தால் அத்தனைப் பேருக்கும் நேரம் மிச்சம். பிரஷர் குறைந்திருக்கும்.
நேர்த்தி என்பதை நீங்கள் எந்த வகையிலும் இப்படித்தான் என வரையறுக்கவே முடியாது என்கிறார் இங்கிலாந்து பாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் தாமஸ் குரன். நேர்த்தியை எதிர்பார்ப்பவர்கள் மூன்று வகையினர். தனக்குத்தானே இப்படி தரம் வேண்டும் என எதிர்பார்த்து அனைத்தையும் தேடுபவர்கள், இரண்டாவது பிறரிடம் அதுபோன்ற தகுதிகளைத் தேடுபவர்கள், மூன்றாவது சமூகம் தன்னை பாராட்டவேண்டும் என அதற்காகவே நேர்த்தி முயற்சிகளைச் செய்பவர்கள்.
மூவருக்கும் பொதுவான தகுதி, இவர்கள் அனைவருமே கடுமையான எதிர்பார்ப்பு, உறவு, சமூகம் வேலை என அனைத்திலுமே ஏமாற்றங்களை சந்திப்பார்கள் என்பதுதான். தோல்விக்கும் அவமானத்திற்கும் மனதில் நிறைய இடம் கொடுப்பவர்கள், வெற்றியில் திருப்தி அடையவே மாட்டார்கள். இதுபற்றி குரன் மற்றும் ஹில் ஆகிய இருவரும் ஆராய்ச்சி ஒன்றைச் செய்தனர். ஆராய்ச்சி முடிவில் முந்தைய காலத்தை விட இன்று நேர்த்தியை எதிர்பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். 41 ஆயிரம் அமெரிக்க, கனடா, இங்கிலாந்து மக்களை ஆய்வு செய்தனர். இதில் மரபணுக்களின் பங்கும் உள்ளதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
சில மாதங்களுக்கு முன்னர் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். காரணம், கல்லூரியில் படித்துப்பெற்ற பட்டம் தொலைந்துவிட்டது. உடனே ரயில் தண்டவாளத்தில் குதித்து அதில் அடிபட்டு உயிர்துறந்தார். இதைக்கூறிய நண்பர் ஏன் அவனுக்கு டூப்ளிகேட் வாங்கிக்கலாம்னு கூட தெரியாதா என்று
கெட்டவார்த்தை ஒன்றை உதிர்த்தார்.
அவருக்கு குடும்பம் அல்லது வேலை சார்ந்த அழுத்தங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவர் தற்கொலை என்ற முடிவை தெளிவாக எடுக்கிறார் பாருங்கள். அது தவறான இடம். மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் இதனைக் கவனித்து அரசு இதற்கான கவுன்சிலிங் முயற்சிகளை அளிக்கலாம் என்று கூறுகின்றனர். மருத்துவம், பொறியியல் மட்டுமல்ல கலை அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு வரக்கூடும். எனவே இந்த நேர்த்தி தொடர்பான பிரச்னைகள், தற்கொலைகள் இந்தியாவில் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பு அனைத்துமே பந்தயங்களாகிவிட்டன. தேர்வில் வென்று மதிப்பெண்கள் வாங்கினால்தான் இந்த களத்தில் நீங்கள் நிற்கமுடியும். அதோடு விராட் கோலி போல அத்தனை போட்டிகளிலும் மதிப்பெண்களை குவித்தால்தான் வேலை. அதை வைத்துத்தான் கல்யாணம். வேலையிலும் வேகம் காட்டினால்தான் ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை எல்லாமே. இந்த ஓட்டப்பந்தயம் இடுகாட்டில் உங்கள் உடலை வைக்கும்போதுதான் நிற்கும். அதிலும் கல்லறையை சலவைக்கல்லில் செய்யலாமா என்று யோசித்து நின்றால் உங்களுக்கு பூமியில் மோட்சம் கிடையாது.
பிற குறைபாடுகளை விட நேர்த்தி பார்க்கும் பிரச்னை தற்கொலை வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. மேலும் சாதாரணமாக கோப ப்பட்டால் கல்லீரல் நோய் தாக்கும் என்கிறார்கள். இந்த நேர்த்தி பிரச்னையின் முக்கிய பாதிப்பு இதயநோய்தான் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். காரணம், நேர்த்தி செய்யவேண்டும் என்கிற கட்டற்ற வேகம், அதிருப்தி காரணமான கோபம்.
சிறந்த நாடக கலைஞர்கள், நடன கலைஞர்கள் நேர்த்தி மீது தீராத ஆர்வம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். அது அவர்களுக்கு துறை மீதான காதல் மூலமாக கூட வந்திருக்கலாம். அவர்களின் கலை வெற்றிக்கும் உதவியிருக்கலாம். ஆனால், அதற்கும் உளவியல்ரீதியான பாதிப்புகள், பக்கவிளைவுகள் இருக்கின்றன. குறைந்த காலகட்டத்திற்கு மட்டுமே இந்த நேர்த்தி உங்களுக்கு உதவும். ஒருகட்டத்தில் உங்களுக்கு ஏற்படும் மனச்சோர்வுக்கு இதுவே காரணமாகிவிடும் என்கிறார் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் சான்டா பேட்ஸ்.
வெற்றி தோல்வி என்பது இயல்பானது என மாணவர்களுக்கு பழக்குவது முக்கியம். அடுத்து ரேங்க் அல்லது கிரேடு என்பதை விட தேர்வு, படிப்பு என்பதை ரசித்துப் படிக்க முயற்சிக்கலாம். இதனை அனுபவங்களாக எடுத்துக்கொள்ள பெற்றோர் பழக்குவது மாணவர்கள் மனநோயாளிகளாக மாறுவதைத் தடுக்கும். நேர்த்தி என்பதன் கூடுதல் இணைப்பாக உணவு உண்ணும் குறைபாடு, உணர்ச்சிக் கொந்தளிப்பான நிலை ஆகியவை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கவனம் நண்பர்களே!
நன்றி: நியூ சயின்டிஸ்ட்
ஆங்கிலத்தின் ஹெலன் தாம்சன்
தமிழில்: அன்பரசு சண்முகம்