நம்பிக்கை மனிதர்கள் - புரட்சியைக் காற்றில் பரப்பும் பாடகன்!
நம்பிக்கை மனிதர்கள்/ நாயகர்கள்
பாடகர் எசல் |
பத்திரிகையாளன், பாடகன், நடிகன் இவர்கள் மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது நடப்பு நிகழ்ச்சிகளை த த்தமது துறை சார்ந்து வெளிப்படுத்தும் திறமை. மக்களைப் பற்றி கவலைப்படுகிறவர்கள் அரசியல் பற்றியோ, நாட்டின் நிலை பற்றியோ, ஏழைகளைப் பற்றியோ, பட்டினிச்சாவுகளைப் பற்றியோ எப்படி பேசாமல் இருக்க முடியும்.
இங்கும் துருக்கியைச் சேர்ந்த பாடகர் அதைத்தான் தன் பாட்டில் செய்தார். செய்துகொண்டிருக்கிறார். ஆனால் தன் நாட்டில் அல்ல; ஜெர்மனியில். என்ன காரணம்? அரசின் சிறை தண்டனைக்கு பயந்துதான்.
முன்னமே விதித்த ஐந்தாண்டு தண்டனை இவரை பெரியளவு பயமுறுத்தி இருந்தது. பாடல்களில் போதைப்பொருள் மற்றும் செக்ஸ் பற்றி பேசியதுதான் குற்றச்சாட்டாக பதிவானது. ஆனால் உண்மை என்ன என்பது அங்குள்ள மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். துருக்கி சர்வாதிகாரியான எர்டோகனின் குருட்டு ஆட்சி குறித்தும், அதன் வழியாக மக்கள் படும் பாட்டையும் மக்களிடமே சென்று பாடினார் புரட்சிப்பாடகர் எசல். அதுதான் அரசு இவரை தன் ஹிட் லிஸ்டில் சேர்க்க காரணம்.
ஒரு காலத்தில் 50 டாலர்களைக் கொடுத்து ஸ்பாட்டிஃபை இணையப்பாடல் நிறுவனத்தில் தன் ஆல்பத்தை வெளியிட முடியாதவர்தான் எசல். இன்று அதன் ஹிட் பாடகராக கோலோச்சி வருகிறார். இத்தனைக்கும் இவரின் வயது 28தான். ஒற்றைப்பெற்றோராக தாயாரால் வளர்க்கப்பட்டவர் எசல். இவரது தாயார் அரசு கலாசார துறையில் பாடகராக இருந்தார். 50க்கும் மேற்பட்ட நாடுகளில் சென்று பாடியும் ஆடியும் உள்ளார். தன் மூன்றுவயதில் மெல்ல ஹம் பண்ணப் பழகியவர் அதன் பின் எழுதிப் பாடத் தொடங்கினார். இவரின் ஆதர்சம் எமினம் என்ற பாடகர். இயற்பெயர் ஓமர் செர்கன் இபக்செக்ளூ.
1980 ஆம் ஆண்டு துருக்கியில் ராப் பாடல்களைப் பாடத் தொடங்கினர். தன் பதினான்கு வயதில் தன் பெயரை ஓமர் எசல் என மாற்றிக்கொண்டு பாடல்களை எழுதிப் பாடத் தொடங்கினார். அப்போது டெட் அங்காரா கல்லூரியின் கல்வி உதவித்தொகை கிடைத்திருந்தது. அப்போது ஹிப்பாப்பிலிருந்து ரகே ரக பாடல்களை எழுதிப் பாடத்தொடங்கினார். அதில், அன்பு ஒற்றுமை ஆகிய தீம்களையே விரும்பி எழுதி பாடினார்.
பின் படிப்பை விட பாடல்களை விரும்ப படிப்பு எப்படி ஈர்க்கும்? அப்போதே வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். பின் அங்குள்ள நிறைய பேண்டுகளில் கலந்து பாடல்களை இயற்றிப் பாடி வந்தார். அங்குதான் நண்பர்களான பக்கி, செலிக் ஆகியோரைச் சந்தித்தார். 2016 ஆம் ஆண்டு சில பாடல்களை எழுதி வெளியிட்டார். தனியான பாடகர் சுயமாக எழுதி பாடினாலும், காசு வேண்டுமே? உணவுக்கே தடுமாறும்போது, பாடல்களை கிராண்டாக வெளியிட காசு தேடினார். அப்போதுதான் ஸபாட்டிஃபை சம்பவம் நடந்தது. அன்று சுயாதீனமான ஆல்பம் வெளியிட சில்லறைகளைத் தேடியவருக்கு, அடுத்த ஆண்டு வாய்ப்பு கிடைத்தது. முப்ஃடெசல் எனும் ஆல்பம் ஸ்பாட்டிஃபையில் மாஸ் ஹிட்.
அமெரிக்க இசையான ஹிப்ஹாப், ரகே, அனடோலி நாட்டுப்புற இசை என கலந்த புத்துணர்ச்சியான வரிகள் இந்த ஆல்பத்தை மிகப்பெரும் வெற்றி அடையச் செய்தன. அரசியல் சமூகம் கலாசாரம் என சுற்றிச்சுழன்ற பாடல் வரிகளில் சமூக கோபம் கொப்பளித்தது. மது, போதைப்பொருட்கள், விபசாரம் என்று மாறும் துருக்கியின் முகத்தை தோலுரித்தார். 2018 ஆம் ஆண்டு மே மாதம் எசல் போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார் என போலீஸ் கைது செய்தது. “சிறையில் நான் வாழும் ரேடியோவாக இருந்தேன். கைதிகளாக இருந்த நண்பர்கள் என்னிடம் ரேடியோவில் உள்ள ஆன் பட்டன் இல்லாததைக் குறையாக கண்டார்கள்” என்று பேசுகிறார். ஆனால் அரசியல்வாதிகள் இவர் அவ்வளவு எளிதானவராக பார்க்கவில்லை என்பதற்கு குவியும் வழக்குகளே சாட்சி.
”நான் என் அம்மாவை என் முன்மாதிரியாகப் பார்க்கிறேன். துருக்கியில் இருந்தால், உங்கள் மனநிலை மற்றும் உடல்நிலையைஃ குலைத்துவிடும் அபாயம் என்பதால் வெளிநாடுகளில் வாழ வேண்டியதாயிற்று.” என்பவரிடம் எதைப்பற்றி நினைக்கிறீர்கள் என்றபோது, நாட்டிலுள்ளவர்களின் எதிர்காலம் என பளிச்செனப் பேசுகிறார்.
நம்பிக்கை மனிதராக, நாயகராக, நட்சத்திரமாக மாற இந்த வார்த்தை ஒன்று போதாதா?
நன்றி:Ozy - பேட்டிரிக் கெடி