காஷ்மீரில் வல்லுறவும் கொலைகளும் அதிகரிக்கும்! - எழுத்தாளர் மிர்சா வகீத்






Mirza Waheed’s ‘Tell Her Everything’ traces the high price ...




நேர்காணல்

மிர்சா வகீத்

இந்தியாவில் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பாக காஷ்மீரில் கடுமையான போராட்டம் வெடித்துள்ளது. அதனை ஒடுக்கும் முயற்சியில் ராணுவம் காவல்துறை உறுதியாக உள்ளன. அங்குள்ள பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாநில கட்சித்தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.இதற்கு முன்னோட்டமாக காஷ்மீர் வந்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

 தற்போது அங்கு நிலைமை எப்படி உள்ளது என நேர்மையாக காட்டும் ஊடகங்கள் இந்தியாவில் கிடையாது. பிபிசி, அல்ஜசீரா, ராய்ட்டர்ஸ் மட்டுமே இதுதொடர்பான செய்திகளை சரியாக வெளியிட்டு வருகின்றனர். இரண்டு நாவல்களை வெளியிட்டுள்ள நாவலாசிரியர் மிர்சா, லண்டனில் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் காஷ்மீரில் வாழ்கின்றனர். அவரிடம் காஷ்மீரிலுள்ள நிலை குறித்துப் பேசினோம்.

நீங்கள் உங்களது பெற்றோரைச் சந்தித்தீர்களா?

இல்லை. போன் வழியே தொடர்பு கொள்ள முடியவில்லை. இணைப்பு முடக்கப்பட்டுள்ளது. நெருங்கிய நண்பர் மூலம் தொடர்புகொண்டு பெற்றோரின் நலனை விசாரித்தேன். அவர் நலமாக இருக்கிறார் என்று கூறினார். அதன்பிறகுதான் நிம்மதியானேன்.

காஷ்மீரில் என்னதான் பிரச்னை?

1947 ஆம் ஆண்டு முதலாக காஷ்மீர், இந்தியாவினால் ஏமாற்றப்பட்டு வருகிறது. ராஜா ஹரிசிங், காஷ்மீர் சுதந்திர நாடாகவே இருக்கவேண்டும் என விரும்பினார். ஆனால் பாகிஸ்தான் தொடுத்த போரினால், வேறுவழியின்றி அவர் இந்தியாவின் உதவியை நாடினார். பாதுகாப்பு உதவி, வெளிநாட்டு உறவு மட்டுமே இந்தியாவின் பொறுப்பு. தன்னாட்சி கொண்ட காஷ்மீரை இந்தியா தன் சொத்தாக்க துடித்து இன்று அதனை ராணுவத்தின் மூலம் சாதித்துக்கொண்டது. காஷ்மீர் எப்போதும் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ சேரவிரும்பவில்லை. ஹரிசிங்கிற்குப் பிறகு, பொம்மை அரசுகளை வைத்து இந்தியா காஷ்மீரின் தன்னாட்சியை அழித்தது. நேரு காலத்தில் காஷ்மீர் முதல்வரான ஷேக் அப்துல்லாவை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்திருந்தனர். இன்று பலாத்கார முயற்சியில் காஷ்மீரை இந்தியா தன் கரத்தில் கொண்டுவர முயற்சிக்கிறது.

பிரித்தாளும் கொள்ளையால் காஷ்மீர் பாதிக்கப்பட்டுள்ளதா?

ஆம். 1987 ஆம் ஆண்டு தேர்தலில் டில்லியின் ஆசி பெற்ற முஸ்லீம் யுனைடெட் கட்சி போட்டியிட்டது. இத்தேர்தல்தான் பின்னர் நடைபெற்ற அனைத்து பிரித்தாளும் பிரச்னைகளுக்கும் காரணமானது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து வழங்கப்படும் ஆயுதங்களை இங்குள்ள மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்கள் பயன்படுத்த தொடங்கினர். வன்முறை வெடிப்பின் முதற்புள்ளி இப்படித்தான் தொடங்கியது. மேல்தட்டு வர்க்கத்தினர், காஷ்மீரை தங்களது கைகளில் வைத்திருக்கத் துடிக்கின்றனர். இங்குள்ள மக்கள் சுதந்திரமாக இருக்கவே விரும்புகின்றனர். எந்த நாட்டின் அடிமையாகவும் வாழ விரும்பவில்லை.

பாஜகவின் கொள்கை இதில் எப்படி இருக்கிறது?

காங்கிரஸ் காலத்தில் மெல்ல காஷ்மீரின் தன்னாட்சி உரிமை சுருங்கி வந்தது. ஆனாலும் கூட உரிமை உள்ளது என்றேனும் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். உரிமையை பறிக்கும் சட்டங்கள் இயற்றப்படவில்லை. ஆனால் அப்போதும் டில்லியின் விருப்பப்படிதான் இங்கு ஆட்சி நடந்து வந்தது. ஆனால் இப்போது பாஜக, இங்கு முஸ்லீம்கள் இருக்கவே கூடாது. அவர்களுக்கு சலுகை ஏன் தரவேண்டும் என நினைக்கிறார்கள். இந்துகள் ஜம்முவில் அதிகம். லடாக்கில் பௌத்தர்களும் முஸ்லீம்களும் உண்டு. காஷ்மீரில் முஸ்லீம்கள் பெரும்பான்மை வகிக்கின்றனர். எனவே திட்டமிட்டு இம்மாநிலத்தை பிரித்து ஆள முயற்சிக்கின்றனர்.

காஷ்மீரின் மேற்குப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடும் சித்திரவதையை அனுபவித்து வருகின்றனர். இந்திய ராணுவம் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் பெண்களை கும்பலாகச் சேர்ந்து வல்லுறவு செய்துள்ளது. பலரைக் கொன்று அடையாளமின்றி புதைத்திருக்கிறது. மலைக்குன்றுகளில் உள்ள கல்லறைகளை இன்றும் நீங்கள் காணலாம். இனியும் இவை அதிகாரப்பூர்வமாகவே தொடரும் என்று காஷ்மீர் மக்கள் பயத்தில் உள்ளனர்.


நன்றி: நியூயார்க்கர் 

ஆங்கிலமூலம் - ஐசாக் சோட்டினர்




பிரபலமான இடுகைகள்