பொருளாதார இடைவெளி பற்றி உலக நிதி கண்காணிப்பகம் கவலை! -எதற்காக?
”சமூகத்தைப் பற்றி உலக நிதி கண்காணிப்பகம் கவலைப்படவில்லை”
நேர்காணல்
டிமோன் ஃபோர்ட்ஸ்டர்
உலகமெங்கும் அரசியல்ரீதியான அழுத்தம் அதிகமாக உள்ளது. குறிப்பாக நடுத்தர வர்க்கம் மெல்ல பனிமூட்டத்திலிருந்து வெளியே வரத் தொடங்கியுள்ளனர். தொழில்நுட்பங்களின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், கல்வி அறிவு குறைந்து வருகிறது. தொடர்ந்து வளர்ந்து வரும் பாகுபாடுகளின் இடைவெளி புதிய அரசியலை நாடுகிறது என உலக நிதி கண்காணிப்பகம் தன் வலைத்தளத்தில் கூறியுள்ளது. இதன் பொருள் என்ன? தன் நிதியைக் கையாளுவதில் வேறுபட்ட கொள்கைகளை இந்த அமைப்பு உருவாக்கும் என்று கொள்ளலாமா?
நிச்சயமாக. உலக நிதி கண்காணிப்பகம் மட்டுமல்ல உலகளவில் செயல்படும் பல்வேறு அமைப்புகளும் கூட தாராளமயமான வழிகளை சிந்தனைகளை நாடி வருகின்றன. சம்பள பாகுபாடு விஷயங்களை சாமர்த்தியமாக கையாண்டு கடன் பிரச்னைகளைத் தீர்க்க முயல்கின்றன. மானிடரி ஃபண்ட் அமைப்பு பல்வேறு விமர்சனங்களால் தன் பாதையை மாற்ற தீர்மானித்துள்ளது. மேலும் சந்தை நிலவரத்திற்கான விஷயங்களை மட்டுமே இந்த அமைப்பு கருத்தில் கொண்டு கொள்கைகள் வகுத்துள்ளது. சமூக பொருளாதார விஷயங்களை ஒப்புமைப்படுத்தி இந்த அமைப்பு பார்த்தது கிடையாது. இனி இந்த நிலையை மானிடரி ஃபண்ட் மாற்றிக்கொள்ளக் கூடும்.
உலக வங்கி மற்றும் உலக நிதி கண்காணிப்பகம் என இரு அமைப்புகளும் மேற்கத்திய முறைப்படி வகுத்த சட்டகங்களுக்குள் அனைத்து நாடுகளையும் கொண்டு வருவதாக விமர்சனங்கள் உண்டு. இப்போது அதை இந்த அமைப்புகள் உணர்ந்துள்ளதாக நினைக்கிறீர்களா? ஏனெனில் இன்று வேலைவாய்ப்பு, வாழும் தரம் என அனைத்தும் நிறைய மாற்றங்களைச் சந்தித்துள்ளன?
மேற்சொன்ன இரு நிறுவனங்களும் அரசு மானியக்குறைப்பு, தனியார்மயமாக்கம், உலகளவிலான முதலீடுகளுக்கு சந்தையை திறப்பது என்ற கொள்கைகளை மட்டுமே அனைத்து நாடுகளிலும் அமல்படுத்தின. அதாவது கறாராக இதனை அரசுகளை மிரட்டி செய்தன. நிதி சார்ந்த பேரதிகாரம் கொண்ட அமைப்புகள் இவை. இவை உருவாக்கிய சட்டகங்களுக்குள் அரசு வரவில்லையென்றால், அந்நாட்டு மக்கள் செத்தாலும் இவை ஒரு ரூபாய் கூட அந்நாட்டிற்கு கடனாக வழங்காது. இனிவரும் காலத்தில் இவை கடந்த காலத் தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது.
உலகவங்கி ஆகட்டும், உலக நிதி கண்காணிப்பகம் ஆகட்டும். இரண்டு நிறுவனங்களின் ஆலோசகர்களும் கூறும் கருத்தில் பல்வேறு முரண்பாடுகள் உண்டு. தாராளமயம் வேகம்பிடித்த தொண்ணூறுகளில் பொருளாதார பாகுபாடு, இடைவெளி தோன்றியது என்ற கருத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இது பற்றி உங்கள் கருத்து?
வளர்ந்த வளரும் நாடுகளில் உலகமயமாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. அதில் ஒன்றுதான் பொருளாதார இடைவெளி, சம்பள பாகுபாடு ஆகியவை. இதனால்தான் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், தங்களது ஐடி சேவைக்கான ஆட்களை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தேடினார்கள். இது அவர்களுக்கு பெருமளவு நிதியை மிச்சம் செய்தது. மேலும் அமெரிக்காவில் இதற்கான திறன் கொண்டவர்கள் கிடைக்கவில்லை என்பதும் மற்றொரு காரணம்.
பொருளாதார சமச்சீரின்மை பிரச்னைக்கு பெருநிறுவனங்கள் முறையாக வரியை அரசுக்கு கட்டாத தும் ஒரு காரணம் என கூறலாமா?
உலக நிதி கண்காணிப்பகம் தன் கொள்கைகளை தீட்டி தொழில் வரிகளை குறைத்து விட்டது. ஆனால் சேவை வரிகளை அதிகம் அரசு பெறுமாறு நிறுவனங்களின் வருமானத்தை பெருகச் செய்தது. பொருளை நுகர்வதற்கான வரிகள் அதிகரித்தன. ஆனால் அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அரசுக்கு கட்டும் தொழில் வரிகளை உலக நிதி கண்காணிப்பகம் முடிந்தளவு குறைக்கச்செய்ய நிர்பந்தித்தது.
சமூகத்திற்கு செலவு செய்வது பற்றி உலக நிதி கண்காணிப்பகம் கொள்கைகளைத் தீட்டியுள்ளதா?
இதுவரைக்கும் கிடையாது. அவர்களின் ஒரே லட்சியம். வணிக நிறுவனங்கள் மூலம் சந்தைகளைக் கைப்பற்றுவது. நுகர்வுக்கான வாய்ப்புகளை வழிகளை திறந்தவிடச்சொல்லி அரசுகளை கட்டாயப்படுத்துவது. நீங்கள் கூறும் சமூகம் பற்றி யோசித்து திட்டங்கள் தீட்ட அவர்களுக்கு நிறைய காலம் தேவை.
டிமோன் ஃபோர்ட்ஸ்டர், ஃப்ரீ பெர்லின் பல்கலையில் முனைவர் பட்டதாரி, உலக உறவுகள் பற்றி படித்து வருகிறார்.
மொழிபெயர்ப்பு: கா.சி.வின்சென்ட்
நன்றி: டெக்கன் கிரானிக்கள்