தனிநபரை விட தேசம் முக்கியம்! - சேட்டன் பகத்




Young boys riding a bicycle with Modi's mask, campaign for BJP's prime ministerial candidate Narendra Modi in Varanasi.




அண்மையில் நான் இணையத்தில் சர்வே ஒன்றை கவனித்தேன். அதில் மோடி அவசரநிலையை அறிவிக்கிறார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் போல. எதற்கு? கருப்பு பணத்தைக் கட்டுக்குள் கொண்டுவரத்தான். அதை நீங்கள் ஆதரிப்பீர்களா என்று ஆய்வில் கேட்கப்பட்டிருந்தது.

உடனே மோடியின் பக்தர்கள் முதற்கொண்டு ஜே ஜே என கருத்துகளைக் குவித்து 51 சதவீத ஆதரவை நொடிகளில் திரட்டி விட்டனர். மோடி ஒரு தேநீர் விற்பனையாளராக அலைந்து திரிந்து உழைத்து பிரதமராக வந்தவர். முதல்வராகவும் தன் திறமையை நிரூபித்தவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை.

ஆனால் நாட்டை விட மோடி என்ற தனிநபரின் புகழ் உயருவது நாட்டிற்கு நல்லதல்ல. அது சர்வாதிகாரத்தன்மையையே உருவாக்கும். சிலருக்கு நேரு பிடிக்கும், சிலருக்கு காந்தி, சிலருக்கு மோடி என விருப்பங்கள் பலவாக இருக்கும். நாம் அந்தந்த காலங்களில் அவரின் செயற்பாடுகளை நல்லவிதமாக உள்ளது பலரிடமும் விவாதித்திருப்போம். இந்த இடத்தில்தான் பல்வேறு கருத்துகளின் கூடலாக அதன் நல்லவை, அல்லவை தெரிய வரும்.

ஆனால் மோடி அமல்படுத்திய சட்டங்களை நீங்கள் வலைத்தளங்களில் விமர்சனம் செய்து அதன் யதார்த்த நிலைக்கு எடுத்துக்காட்டு கொடுங்கள் பார்ப்போம். உடனே உங்கள் மீதான தனிநபர் தாக்குதல் இணைய மோடி படையால் தொடங்கிவிடும். சரி தவறு என்பதை ஒரு விஷயத்தைப் பற்றி ஆரோக்கியமான கலந்துரையாடல்கள்தான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் ஆம் என்பதைத் தவிர நீங்கள் எதையும் கூறக்கூடாது என உக்கிரமாக ஒரு கூட்டம் பேசுகிறது என்றால் அது நிச்சயம் நல்ல போக்கு அல்ல. மோடிக்கு மட்டுமல்ல அவரின் வகிக்கும் பதவி உள்ளிட்டவை கூட பிற்காலத்திற்கு இதுபோன்ற ஆட்களால் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இந்தியா போன்ற சினிமா பித்து கொண்ட நாட்டில் கனவுகள் அதிகம். எனவே நடிகரையோ, அரசியல் தலைவர்களையோ தங்களது ரோல்மாடலாக கொள்வது இயல்பானதே. ஆனால் அவர்களின் கருத்துகளை கண்ணை மூடிக்கொண்டு நம்புவது தவறானது. அதோடு நமக்கு அரசியலமைப்புச்சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தைப் பயன்படுத்தி, மற்றொருவரை அச்சுறுத்தி மௌனமாக்குவது மனிதநேயமற்ற குற்றச்செயல். வளர்ந்து வரும் இந்தியா பொருளாதாரத்தில் மட்டுமன்றி, ஜனநாயகம், கலாசாரம் என அனைத்திலும் பிறர் போற்றும்படி வளருவது நல்லது. இதுவே பன்மைக் கலாசாரம் கொண்ட இந்தியாவின் பெருமையை உயர்த்தும்.

தனிநபரின் சிந்தனை வழியே அமைப்பு உருவாகிறது. நிச்சயம் அமைப்பை உருவாக்கியவரைப் போற்ற வேண்டும். ஆனால் அதற்காக மாற்றுக்கருத்தை முன்வைக்கிறவரை வசைபாட அவசியமில்லை. இணையத்தில் நடக்கும் கலந்துரையாடல் வழியே ஆக்கப்பூர்வமான கருத்துகளும் கிடைக்கலாம். அவை இந்தியாவை பலப்படுத்தும். எந்த ஒரு தனிநபரைவிடவும் நாடு முக்கியமானது. அதனை எந்த இடத்திலும் மறக்காதீர்கள்.


சேட்டன் பகத்தின் இந்தியா பாசிட்டிவ் என்ற நூலைத் தழுவியது.