அதிரவைக்கும் பழிக்குப்பழி - இது கோட்டயம் புஷ்பநாத் கோட்டா!
பிரம்ம ரட்சஸ்
கோட்டயம் புஷ்பநாத்
தமிழில் - சிவன்
திருமகள் புத்தக நிலையம்
தறவாட்டில் வாழும் ராஜ வம்ச பெண் கார்த்திகா அந்தர்ஜனம். அங்கு பணியாற்றும் வாசுதேவன் தம்பி, அவளை திருமணம் செய்வதாக கூறி சொத்துக்களை ஏமாற்றப் பார்க்கிறான். அதனை தேவி கார்த்திகாவிடம் கூறிவிட, அவள் அவனை வீட்டை விட்டு விரட்டப் பார்க்கிறாள். ஆனால் வாசுதேவன் தன் நண்பர்களுடன் எழுமாற்றூர் அரண்மனைக்குச் சென்று அவளை பலாத்காரம் செய்து கொல்கிறான். அவளது உடலை குளத்தில் மிதக்கவிடுகின்றனர். ஊரே வாசுதேவனின் செல்வாக்குக்கு முன்பு ஒன்றும் செய்யமுடியாமல் பதுங்குகிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு அல்லவா?
வாசுதேவன் நல்ல வரும்படியான இடத்தில் கல்யாணம் முடிக்கிறார். அதற்காக காத்திருந்த கார்த்திகா, பிரம்ம ரட்சஸாக எழுந்து வாசுதேவனை பழிவாங்க புதைக்கப்பட்ட இடத்திலிருந்து எழுகிறார். அவர் ஆடும் ரிவென்ஞ் ஆட்டம்தான் பிரம்ம ரட்சஸ்.
காதல், துரோகம், பேராசை, நிரம்ப காமம் என அனைத்துமே இதில் உண்டு. தன் பழிக்குப்பழி வாங்குவதற்கு திருமேனி ஒருவர் தேவை என கார்த்திகா உணரும்போது அங்கு மாந்த்ரீகம் கற்க வருகிறார் விஜயதேவன். முதலில் அவரைக் கொல்ல முயன்றாலும், அவரின் நல்ல மனதைத் தெரிந்துகொண்ட அவரை தன் பழிக்குப்பழிக்குப் பயன்படுத்திக் கொள்கிறாள் கார்த்திகா. அதைப்போலவே உண்ணித்தானால் கொல்லப்பட்டவள், வாசந்தி. அவளையும் தன் மந்திர சக்தியால் தன் உடலோடு எழுப்புகிறாள் கார்த்திகா. பழிக்குப்பழி வாங்கி அவர்களின் ஆன்மா மோட்சமடைந்ததா? சேகரன் உண்ணித்தானின் கெட்ட மந்திரங்கள் பலித்ததா, வாசுதேவன் கார்த்திகாவை எப்படி எதிர்கொண்டார் என்பதையெல்லாம் கோட்டயம் புஷ்பநாத் இந்நூலில் பரபரவென எழுதி உள்ளார். படித்து மகிழுங்கள்.
கா. சி.வின்சென்ட்.
நன்றி: பாபு பெ.க