வங்கிகள் தேசியமயம் - 50 ஆண்டுகள்- என்ன நடந்தது?
வங்கிகள் தேசியமயம்: 50 ஆண்டுகள் நிறைவு!
வங்கிகள் தேசியமயமாகி இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று 14 வங்கிகளை அரசு வங்கிகளாக மாற்றியது. ரிசர்வ் வங்கி வரலாற்றில் 1947க்குப் பிறகு அமலான முக்கியமான நிதிச் சீர்த்திருத்தம் இதுவே.
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை தொண்ணூறுகளில் நடைபெற்ற தாராளமயமாக்கலோடு பொருளாதார வல்லுநர்கள் ஒப்பிடுகின்றனர். வங்கிகள் தேசியமயமானது காங்கிரசுக்கு அன்று ஆதாயம் அளித்தது. ஆனால், பின்னாளில் அரசுகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தின.
அன்றைய இந்தியாவில் தனியார் வங்கிகள் செயற்பட்டு வந்தாலும், அவற்றின் மீது பெரியளவு நம்பிக்கை உருவாகவில்லை. மக்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றுவது தினசரி செய்தியாக மாறி வந்தன. 1951-68 வரையிலான காலத்தில் தனியார் வங்கிகள் தொழில்துறைக்கு 68 சதவீத கடன் தொகைகளையும், விவசாயத்திற்கு 2 சதவீத கடன்களையும் அளித்தன. அக்காலகட்டத்தில்தான் கிராமங்களிலுள்ள விவசாயத்துறைக்கு உதவுவது போல வங்கிகள் தேசியமயம் என்ற இந்திய அரசின் உத்தரவு வெளியிடப்பட்டது.
பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வங்கிகள் தேசியமயமாக்கல் என்ற முடிவை இந்திரா, அறிவித்தார். இம்முடிவை எதிர்த்த நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய், தன் பதவியை விட்டு விலகினார். 24 மணி நேரத்தில் மசோதாவைத் தயாரித்து குடியரசுத் தலைவர் விவி கிரியிடம் கையெழுத்து பெற்றனர்.
ஜூலை 19, 1969 ஆம் ஆண்டு இரவு 8.30 க்கு வங்கிகள் தேசியமயமாகும் உத்தரவை வெளியிட்டார் பிரதமர் இந்திராகாந்தி. "பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற காரணத்திற்காக இந்திரா காந்தி, வங்கிகள் தேசியமயம் என்ற முடிவை எடுக்கவில்லை என்பது அனைவருக்குமே தெரிந்திருந்தது. பொதுத்துறை வங்கிகளில் 51 சதவீதமாக இருந்த அரசின் பங்குகள் பின்வரும் காலங்களில் மெல்ல குறைந்துபோனதும் சரிவுக்கு காரணம்" என்கிறார் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரான சி. ரங்கராஜன்.
அப்போது 14 வங்கிகளின் லாபம் 5.7 கோடியாக இருந்தது. இன்று அவ்வங்கிகளின் ஒட்டுமொத்த நஷ்டம் 49,700 கோடியாக உள்ளது. இதற்கு தொண்ணூறுகளின்போது இந்திய அரசு வகுத்த சீர்த்திருத்தங்களை முறையாக பின்பற்றாததும், வாராக்கடன் நிலுவைகளும், அரசியல் அழுத்தங்களும் முக்கிய காரணங்களாக உள்ளன. “இந்தியாவின் வங்கிகளை தொலைதூரங்களுக்கு கொண்டுபோய் சேர்த்தது வங்கிகளை தேசியமயமாக்கிய முடிவுதான்.
அதில் பல்வேறு சீர்திருத்த வடிவங்களை முன்னமே சோதித்திருந்தால், இழப்புகளைத் தவிர்த்திருக்கலாம்.” என்கிறார் பாரத வங்கியின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா. இந்திய அரசின் அன்றைய முடிவால்தான், ஏழைமக்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக சேமிக்க முடிந்தது என்பது நடைமுறை நிஜம்.
வெளியீட்டு அனுசரணை - தினமலர் பட்டம்
நன்றி- பாலகிருஷ்ணன்
தகவல் உதவி - டைம்ஸ் ஆப் இந்தியா
படம் - தெலங்கானா டுடே, ரைட்லாக்.ஆர்க், ஃபினான்சியல்வியூஸ்.காம்