உண்மை ஆய்வாளரின் குற்றவழிப் பயணம்- பியோம்கேஷ் பக்சி
பியோம்கேஷ்
ஹோய்சோய் ஒரிஜினல்ஸ்
தமிழில்...
இயக்கம் - சயானந்தன் கோசல்
மூலக்கதை - சராதிந்து பந்தோபாத்யாய
பியோம்கேஷ் - அனிர்பன் பட்டாச்சார்யா
அஜித் - சுப்ரதா தத்
ஷெர்லாக் ஹோம்ஸின் தமிழ் வடிவம் என்கிறார்கள். நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பியோம்கேஷ், உண்மை ஆய்வாளர். தன்னை டிடெக்டிவ் என்று கூட சொல்லிக்கொள்வதில்லை. அவருடன் எழுத்தாளர் அஜித் உடன் இருக்கிறார். அவர் அவ்வளவு சுதாரிப்பான புத்திசாலி அல்ல; ஆனால் பியோம்கேஷ் சொல்வதைச் செய்வார்.
கதை 1
முதல் கதை போதைப்பொருட்களை விற்கும் மருத்துவர், தன்னை தெரிந்துகொண்ட சிலரைக் கொலை செய்கிறார்.இதனைக் கண்டுபிடிக்கும் பியோம்கேஷ், அவரை கத்தியும் கையுமாக பிடித்து போலீசில் ஒப்படைக்கிறார். கதை நடப்பது 1930 ஆம் ஆண்டு. வேட்டி கட்டிக்கொண்டு ஓடுவது, உதைப்பது, நொடிக்கொருமுறை தீப்பெட்டியை தொடையில் தட்டி யோசிப்பது என அனிர்பன் பட்டாச்சார்யா நடிப்பில் பிரமிக்க வைக்கிறார்.
வயதான நிறைய சொத்துக்களை வைத்துள்ள பெருசுகளை வரிசையாக போட்டுத் தள்ளுகின்றனர். யார் காரணம் என்று தேடுகிறார்கள். ஆனால் பிடிக்க முடியவில்லை. அதி புத்திசாலி கொலைகாரன் அவன். கிராம போன் முட்களைத் திருடி அதில் விஷம் தடவி ஆட்களைக் கொல்கிறான் கொலைகாரன். அதுவும் மக்கள் கூடும் தெருவில். எப்படி சாத்தியம்? ஆம். அதைத்தான் பியோம்கேஷ் பக்சி கண்டுபிடிக்கிறார்.
எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை நாமும் கூடவே சேர்ந்து கண்டுபிடிப்பது போல இருப்பதுதான் இந்த வெப் சீரிசின் சிறப்பு. குற்றவாளியைக் கண்டுபிடித்தும் பயனில்லாமல் போகிறது ஏன் என்பதை கிளைமேக்ஸ் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
ஆனால் குற்றவாளியின் புத்திசாலித்தனம் பியோம்கேஷை வியக்க வைக்கிறது.
கதை 2
இதில் இரண்டு கதைகள். முதல் கதை சிலந்தி விஷத்தை தனக்குத்தானே சாப்பிட்டுக்கொண்டிருக்கும் எழுத்தாளர் ஒருவரின் கதை. இரண்டு கொலை வழக்கு ஒன்று.
கொலை வழக்கில் பெரியவர் ஒருவருக்கு மூன்று மகன்கள். அவருக்கு யார் மேல் பிரியம் இருக்கிறதோ அந்த சமயம் ஒரு உயில் எழுதுவார். பின் அதனை அடுத்த நாளே மாற்றி இரண்டாவது அல்லது மூன்றாவது மகனுக்கு எழுதுவார். இப்படிப்பட்ட குணமுடையவர் திடீரென படுக்கையில் இறந்து கிடக்கிறார். மரணம் சிறிய ஊசியால் சம்பவித்திருக்கிறது.
அனைவரின் சந்தேகமும் அவரோடு முன்தினம் சண்டை போட்ட கடைசி மகன் மீது திரும்புகிறது. அவரின் மருத்துவ நூலில் அப்பாவை கொலை செய்த முறை குறித்து வைக்கப்பட்டிருக்கிறது. பெரியவரின் தங்கை மகள் தைக்கும் ஊசி கொலைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. முதல் மகன் போதை அடிமை, இரண்டாவது மகனின் கால் ஊனம். இவைதான் அங்குள்ள நிலைமை. இதை வைத்து எப்படி பியோம்கேஷ் குற்றவாளியைக் கண்டுபிடித்தார்? என்பதுதான் சுவாரசியம்.
இதில் பியோம்கேஷின் திருமணமும் உறுதியாகிறது. யாருடன் என்பதையும், எட்டுக்கால் பூச்சி விஷத்தை யார் எழுத்தாளருக்கு தருகிறார்கள், கொலைக்குற்றவாளி யார் என்பதையும் நிதானமாக, பகடி எழ கூறியிருக்கிறார்கள்.
இந்தி, வங்காள மொழியில் வந்த வெப் சீரிஸ் தமிழிலும் கிடைக்கிறது. சோனி டிவியில் சிஐடி தொடர் பார்த்து ஆகா என்றவர்களுக்கு இதுவும் பிடிக்கலாம். பார்த்து மகிழுங்கள்.
கா.சி.வின்சென்ட்