மனித உரிமைகளை நசுக்கும் சவுதி அரேபியா- கொல்லப்படும் ஏமன் மக்கள்
சவுதி அரேபிய படைகள், ஏமன் நாட்டைச் சேர்ந்த மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகின்றனர்.இதன் விளைவாக கடந்த ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை 47 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டிலிருந்து இன்றுவரை நடந்த ஐந்து தாக்குதல்களில் ஹெலிகாப்டர்கள் வரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் மீனவர்களின் படகுகளில் இருந்த சிறுவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சவுதி சிறையில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை வெளியாகி உள்ளது.
வயிற்றுப்பிழைப்புக்காக மீன் பிடிக்கும் மீனவர்களை எதற்கு ராணுவ எதிரிகள் போல கனரக ஆயுதங்களை வைத்து சவுதி ஆதரவுப்படைகள் தாக்குகின்றன என்பது புரியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இயக்குநரான பிரியங்கா மோடாபர்த்தி.
சவுதி - ஏமன் போருக்கு முன்பு மீன்பிடித்தொழில் நன்றாக நடந்துவந்திருக்கிறது. போர் தொடங்கிய பிறகுதான் நிலைமை மாறியிருக்கிறது. சிறையில் அகப்பட்ட 115 மீனவர்கள் மருத்துவ வசதி, சட்ட உதவி என எதையும் பெற அனுமதிக்கப்படவில்லை. தற்போது பெருமுயற்சி செய்து விடுதலை ஆகியுள்ளவர்களும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் சித்திரவதையை அனுபவித்து வந்துள்ளனர்.
ஹூதி புரட்சியாளர்கள் கடற்பகுதியில் எண்ணெய் கப்பல்களை தாக்கி வருவது இதற்கு காரணம் எனக்கூறப்படுகிறது. மக்கள் மீது தாக்குதல் நடைபெற்றால் அதனைக் காரணமாக வைத்து ஐ.நா பாதுகாப்பு கௌன்சில் நாடுகள் மீது தடைகளை விதிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இதிலும் ஏமன் மக்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பு குறைவு. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வல்லரசு நாடுகள் சவுதிக்கு உறுதுணையாக நிற்கின்றன. இந்நிலையில் இதுதொடர்பான வழக்குகள் எந்தளவு நியாயமாக விசாரிக்கப்படும் என்று தெரியவில்லை.
நன்றி: மனித உரிமைகள் கண்காணிப்பகம்.