மயிலாப்பூர் டைம்ஸ் - அப்லோடை விட டவுன்லோடு முக்கியம்!






Related image
பிரம்மானந்தம் நாயக் படத்தில் ஜிலேபியாக....


மயிலாப்பூர் டைம்ஸ் -- இனிப்பு பரிதாபங்கள்!


Image result for nayak comedy scenes



ஆபீஸ் செல்வது பெரிய சிரமம் இல்லை. புதன்கிழமை தாண்டினால் போதும். விகடன் வியாழன் வரும். படித்து சமாளித்தால் வெள்ளி குங்குமம். அதில் ரத்தமகுடம் குஜாலாக படிக்கலாம் என்பதுதான் பெரும்பாலான நேர நினைப்பு. ஆனால் நடப்பது அப்படியே தலைகீழாக இருக்கும். வாசிப்பு வெறி, ஐலைக் காமிக்ஸ் வலைத்தளத்தில் கூட முடியும். ஆனால் ஸ்நாக்ஸ் வெறி இருக்கிறதே? சென்னகேசவா காப்பாற்று என்றாலும் நாக்கு அத்தனை தந்திரங்களையும் வீணாக்கிவிட்டது. வீக் எண்டில் முளைத்த வில்லங்கம், என்னுடைய வயிற்றை களேபர பூமியாக்கியது.

நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் மண்டையன் கடையை நெருங்கும்வரை. பஜார் தெருவிலுள்ள புகழ்பெற்ற கடைதான் அது. லட்டு, மிக்சர், பாதுஷா என மனசைக் கலைக்க அப்படியே நின்றேன். படியேறினால் கடை ஓனருக்கு என் முகம் தெரியும். ஏறினேன். லட்டு கால்கிலோ குடுங்க என்றேன். புன்சிரிப்புடன் பார்த்தவர், ஒருமணிநேரம் கழிச்சு வாங்கிக்கலாமே என்றார். என்னடாது, லட்டு கண்ணு முன்னால வெச்சுக்கிட்டு எதுக்கு ஒருமணிநேரம் என குழப்பமாக பார்த்தேன். அவரும் அண்ணாச்சி கடை ஓனரைப் போல மாறாத சிரிப்புடன் நின்றார்.

 கீழேயிருக்கிற லட்டை எடுத்துக்கொடுங்க என்றேன். அது கெட்டியாக இருக்கும்பா. இப்பத்தான் பூந்தி போட்டுகிட்டு இருக்காங்க. சீக்கிரம் வேணும்னா பூந்தியா வாங்கிக்கிறியா என்றார். வேண்டாம்  அப்புறம் வந்து வாங்கிக்கிறேனுங்க என்று சொல்லிவிட்டு சந்தில் புகுந்து ரங்கநாதன் நெஸ்டில் செட்டிலானேன். அமைதியாக இருந்தாலும் இந்த நாக்கு சும்மா இருக்கிறதா, சாப்பிட போனவன் சில்லறை முறித்துக்கொண்டு வழுக்கைத் தலையர் கடைக்கு வந்தேன். இம்முறை பத்து நிமிடங்கள் காத்திருக்க, வட இந்தியர் ஸ்டைலாக போனில் பேசியபடி வெளியே வந்தார் கை முழுக்க எண்ணெய். அப்படியே பூந்தியை லட்டாக பிடித்தும் பிடிக்காமல் ஒற்றைக்கையில் எடுத்து வந்துவிட்டார்.  எடைபோட்டடால் 50 கிராம் அதிகம். 300 கிராமுக்கு வைத்து எழுபது ரூபாய் கொடு என்றார். கால்கிலோ போதுங்க. 60 ரூபாய்தானே என்றேன். எடை அதிகமாக இருக்குது. அப்படியே வாங்கிக்குங்க. நல்லாயிருக்கும் என்றார். பேச்சு மாறுதே பிரச்னை ஆகுமோ என மனசுக்குள் சொல்லிக்கொண்டே விறுவிறு என வாங்கி வந்தேன். உள்மனது சொன்னது ஊழ்வினையாய் காதில் கேட்டது. அதை கீழே தள்ளிவிட்டு லட்டைத் தின்றபடி குங்குமத்தைப் படித்தேன். நன்றாகத்தான் இருந்தது. லட்டு என்ன இவ்வளவு மென்மையாக இருக்கிறதே என ஒரு டவுட் எழுந்தது. மடக் மடக் என தண்ணீர் குடித்து சந்தேகத்தை காலி செய்து, ஷான் ஆப் தி டெத் படம் பார்க்கத் தொடங்கினேன். 

இரண்டே நாட்கள். வயிற்றுக்குள் இரண்டாம் உலகப்போர் டாங்கிகள் உருளும் சத்தம் கேட்டது. மதிய வேளையில் பிரிட்டன் கப்பல் ஜெர்மனியால் கவிழ்ந்தபோது, காலையில் மலம் கூட வரவில்லை. ஆகா, என்ன சாப்பிட்டேன். சாம்பார், தயிர் என சாப்பிட்ட உணவுகளில் லிஸ்ட் மனதில் ஓடியது. இதையெல்லாம் சாப்பிட்டா இப்படி பிரச்னை ஆகாதே என ஃபிளாஷ்பேக் போனேன். ஆ.. அவனேதான் என மிச்சமிருந்த ஒரு லட்டை எடுத்து பார்த்தேன்.  அல்ட்ரா டெக் சிமெண்டைப் போட்டு செயதமாதிரி அப்படியொரு ஸ்ட்ராங்க். சுவற்றில் அடித்தால் எம்பி எனக்கே வரும்போல.  லட்டு புடிக்கிறக்கும் சிமெண்டும் கலப்பாங்களோன்னு கூட வெகுளி கேள்வி மனசுக்குள்ள வந்தது.

அப்படியே எடுத்து குப்பையில போட்டுட்டு ஆபீஸ் கிளம்பினேன். காலை, மதியம், மாலை என மூன்று வேலையும் வயிற்றில் பசி என்ற விஷயமே வரவில்லை. என்னடா ஆச்சு, வரலாற்று நாயகனை லட்டைக் கொடுத்து சோலிய முடிச்சுப்புட்டாங்களா?ன்னு பயம் எனக்கு கண்ணைக் கட்டியது. ராயப்பேட்டை சேட்டன் கடையில்  திருப்தி மோரை மட்டுமே வாங்கி குடித்துக் கொண்டிருந்தேன். ஏழு நாட்களுக்குப் பிறகுதான் கொஞ்சம் வயிறு பொருமல்கள் அடங்கி ரெடியானது. இரவில் என்ன செய்தேன் என்கிறீர்களா? வாழைப்பழம்தான்.

மணிவண்ணன் கடை வாழைப்பழம் இருக்கிறதே அப்புறம் என்ன கவலை. பஞ்சாமிர்த பக்குவத்தில் இவர் கொடுக்கும் வாழைப்பழம் இருக்கிறதே.... வாங்கும்போதே விரல்களுக்கு இடையில் விழுந்துவிடக்கூடாதே என தீப்பாஞ்சாள் அம்மனை வேண்டிக்கொண்டுதான் வாங்குவேன். என்னை குழந்தையாக நினைத்த ஒரே ஆள் பஜாரில் இவர் ஒருவர்தான். நல்ல பழங்களை நாசுக்காக ஒதுக்கி நசிந்த அரிவாள் வீச்சில் வெட்டுப்பட்ட பாதி அழுகிய பழங்களை மிகச்சரியாக எனக்கு தேர்ந்தெடுத்துக் கொடுப்பார். அப்படி பழங்கள் தட்டுப்படாதபோது, பழம் இல்லை என்று கூறிவிடுவார்.பார்ச்சூன் 500 இல் மணிவண்ணன் அண்ணாச்சிக்கு இடம் கிடைத்திருக்க வேண்டும். கிடைக்கவில்லை. தமிழ்நாடு செய்த ஊழ்வினைதான் இதற்குக் காரணம். 

இரண்டாவது காரணம்!

வயிறு கலவரமானதற்கு மற்றொரு காரணம், ஆபீசில் கைக்காசு போட்டு தீனி தின்றே ஆகவேண்டும் என அடம்பிடிக்கும் தானாகச் சேர்ந்த கூட்டம். சமோசாவை இவ்வளவு சிறியதாக வெங்காயம் வைத்து சுடமுடியும் என அறிந்தபோது மூன்று சமோசாக்களை விழுங்கியிருந்தேன். குருடாயிலில் சுட்டு எடுத்து சாணி வரட்டி போன்று இருந்தது. கேரளத்து ரப்பரை தள்ளுபடி ஆபரில் வாங்கிச் செய்திருப்பார்களோ என்று கூட நினைத்தேன். ஆனால் பக்கத்து ஆபீஸ் நண்பர்களுக்கு கொடுத்தபோது, நான் நினைத்தது தவறு என உணர்ந்துகொண்டேன். ஆம். அதையும் அவர்கள் சாப்பிட்டு விட்டார்கள். ஆனால் அதற்கு முன்னால் தின்ற சமோசா கர்மாவை எப்படிக் கரைக்க?  இரண்டு நாட்கள் பசியைக் காவு கொடுத்தேன். 

இப்போதுதான் கமலாலய தோழர் சொன்னார். ஜி, என்ன அதெல்லாம் சாப்பிடக்கூடாது. பசி எடுக்காது. தொப்பை போட்டுடும் என தன் செல்லத் தொப்பையை ஆட்டிக் காண்பித்தார். எனக்கு உலகமே ஆடுகிறார்போல இருந்தது. அதிலிருந்து வலைத்தள தோழனுக்கு காசு கொடுத்து வாங்கிச் சாப்பிடும் தீனிகளை அப்படியே பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தள்ளிவிடத் தொடங்கினேன். விதி எனக்கு ஒத்துழைத்தது. அவர்களுக்கு கம்பெனி ஸ்நாக்ஸ்களுக்கான தொகையை கட் செய்திருந்தது. அப்ப அவங்களுக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கிறயாடா அயோக்கியப் பயலே என கம்யூனிச தோழர் விஷயம் தெரிந்து  பொங்கினார். யார் சொன்னது? என் ஓட்டைவாயால் நானேதான். எனக்கு வயிறு ஒத்துக்கலே, அதுக்குன்னு குப்பையில அதைப் போடணுமா? இதைத் தயாரிக்க எவ்வளவு மனித உழைப்பு போட்டிருக்கோம். பூர்ஷ்வா மனநிலையில் பேசாதீங்க தோழரே என கர்ஜித்தபின்தான் அந்த சீனா புலி அடங்கியது.  பேச்சுல எங்களை ஜெயிக்க முடியுமா?

ஆனால் வயிறு சொல்வதைத்தான் நாக்கு கேட்பதில்லை. வெள்ளியானால் போதும். கற்பகாம்பாள் கபாலி, அன்னப்பூர்ணா, சூர்யா ஸ்வீட்ஸ் என அலை பாய்கிறது. ஆனால் நான் மனதைக் கல்லாக்கி முத்து துறவி ரஜினியாய் பொரியும் பொட்டுக்கடலையும் வாங்கிக்கொண்டு அறை செல்கிறேன். தாட் ஆஃப் தி வீக் என்னதான் சொல்வது? அப்லோடைவிட டவுன்லோடு முக்கியம் ப்ரோ!

கா.சி.வின்சென்ட்