வீழ்ச்சியில் சிக்கிய இந்திய ஆட்டோமொபைல் துறை!- பிரச்னை என்ன?
பொருளாதாரம்
வாகனத்துறை சரிவிலிருந்து மீளுமா?
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை உற்பத்தி மற்றும் விற்பனையில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இதற்கு இந்திய அரசு உயர்த்திய ஜிஎஸ்டி வரியும், வாகனங்களின் பதிவுக்கட்டண உயர்வும் முக்கிய காரணமாக உள்ளது.
பத்து முதல் இருபது லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்களுக்கு பத்திரப்பதிவுக்கட்டணம் 8-16 சதவீதம் உயர்ந்துள்ளது. வாகனத்துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3கோடியே 20 லட்சம்பேர் பணியாற்றி வருகின்றனர். இத்துறையின் மதிப்பு 8.3 லட்சம் கோடியாகும். 2021ஆம் ஆண்டில் உலகளவில் மூன்றாவது பெரிய வாகனத்துறையாக இந்தியா மாறும் என்று ஆய்வுகள் கூறிவந்த நிலையில்தான் பெரும் சரிவு நடந்துள்ளது.
அதிகரிக்கும் வேலை இழப்பு!
விழாக்காலங்களில் அதிகரிக்கும் கார் மற்றும் பைக் விற்பனை கூட இந்த ஆண்டு மந்தமானதால், வேலையிழப்பு அபாயமும் ஏற்பட்டுள்ளது. ”ஆட்டோமொபைல் துறையில் முதலீடு இல்லை; தேவையும் இல்லை. வளர்ச்சி வானத்திலிருந்தா வரும்?” என்கிறார் பஜாஜ் ஆட்டோ நிறுவனரான ராகுல் பஜாஜ். இவரின் கூற்றை ஆமோதிக்கும் விதமாகவே கார் மற்றும் பைக் விற்பனை நிலவரங்கள் திகிலூட்டுகின்றன.
வாகனங்கள் விலை குறைந்தாலும் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால்தானே துறை வளரும்? 2008 முதல் 2012 வரை கிராம மக்களின் பொருளாதாரம் அதிகரித்து வந்தது. ஆனால் அதற்குப்பின்னர் ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மையால் இப்பிரிவினரின் வருமானம் சரிந்துவிட்டது. வங்கியல்லாத நிதிச்சேவை வழங்கும் நிறுவனங்களின் (NBFC) சீர்குலைவு, வாராக்கடன்கள் ஆகியவை தவணை முறையில் வண்டிகளை வாங்குவதையும், முதலீட்டாளர்கள் கடன் பெறுவதையும் சிக்கலாக்கிவிட்டன.
இந்திய அரசு தடாலடியாக அறிவித்த மாசுக்கட்டுப்பாட்டு நிலையான பிஎஸ்6 (BS6), ஆன்டி லாக் பிரேக்குகள், ஏர்பேக் ஆகிய வசதிகள் உற்பத்தியாளர்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளன. இதனால், வாகனங்களின் விலையை 8 சதவீதம் உயர்த்தும் இக்கட்டு உருவாகியுள்ளது.
என்ன தீர்வு?
"சிறிய மற்றும் எஸ்யுவி வரையிலான கார்களுக்கு ஜிஎஸ்டி வரி 22 சதவீதம் வரை விதிக்கப்படுகிறது. இதில் சிறியவகை கார்களுக்கு விதிக்கப்படும் வரியை முழுமையாக நீக்கிவிட்டு, பிறவகை கார்களுக்கு 17 சதவீத வரியை மட்டுமே விதிக்கலாம் "என்கிறார் மஹிந்திராவின் நிர்வாகத் தலைவரான கோயங்கா.
"வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் பிரச்னையைத் தீர்த்து வாடிக்கையாளர்களுக்குக் கடன் தருவதை அரசு உறுதிப்படுத்துவது முக்கியம். இதன்மூலம் வாகன விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வரி குறைத்தாலும், உடனே உற்பத்தியாளர்கள் அதற்கு மாறுவது கடினம்" என்கிறார் பஜாஜ் ஆட்டோ தலைவரான ராஜீவ் பஜாஜ். ரிசர்வ் வங்கி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக குறையும் என்று கூறியுள்ளது. முதலீடும், உற்பத்தியும் அதிகரிக்காமல் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்காது.
கா.சி.வின்சென்ட்
வெளியீட்டு அனுசரணை- தினமலர் பட்டம்
படம் - ரெட்டிஃப்.காம்