தோற்றுப்போன உளவுத்துறை ஆபரேஷனுக்கு காரணமான துரோகியை கண்டுபிடிக்க உதவும் குடியிருப்புவாசி அமைப்பு!

 


 மை சீக்ரெட் டெரியஸ்
கே டிராமா
16 எபிசோடுகள்
எம்பிசி டிவி

தேசதுரோகி என்ற குற்றம்சாட்டப்பட்ட என்ஐஎஸ் ஏஜெண்ட், தோற்றுப்போன தனது ஆபரேஷன் பற்றி துப்பறிந்து துரோகியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே கதை.

தொடரின் நாயகன் டெரியஸ். அவனை உளவுத்துறை ஏஜென்ட் என பில்டப் செய்கிறார்கள். ஆனால், அவனை விட எதிரி பலசாலி. டெரியஸ் எத்தனை முறை தாக்கப்பட்டார், துப்பாக்கியால் சுடப்பட்டார் என்று கைவிரல்களை விரல் விட்டு எண்ணவேண்டும். அத்தனை முறை நாயகன் அடிபடுகிறார். பரிதாபம். தொடர் முழுக்க என்ஐஎஸ் அமைப்பை விட கிங் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் வாட்ஸ்அப் குரூப் சிறப்பாக இயங்குகிறது.

நாயகி இரண்டு குழந்தைகளின் தாய். அதேநேரம் அவளுக்கு டெரியஸ் மீதும், டெரியசுக்கு அவள் மீதும் காதல் வருகிறது. அதுபோன்ற காட்சிகள் நன்றாக உள்ளன. கணவர் இறந்தபிறகு இரு குழந்தைகளை வளர்க்க நாயகி ஆரின் படும்பாட்டை நன்றாக காட்டியிருக்கிறார்கள். சில நேரம் ஆரின் பாத்திரம் நடிப்பது மிகை நடிப்பாக மாறுகிறது. அனிமேஷன் பாத்திரத்தின் நடிப்பை பின்பற்றுகிறாரோ.... நாயகனைப் பொறுத்தவரை அதிக உணர்ச்சிகளை கொட்டி நடிப்பவரல்ல. டெரியஸ் பாத்திரமே சிந்தனை செய்து திட்டங்களை வகுத்து பிறருக்கு ஆணையிடும் திறமை கொண்டது. கிங் கேஸ்டில் அடுக்குமாடி குடியிருப்பில் மறைந்து வாழ்ந்தாலும் அவரைப் பற்றிய சில தகவல்களை ஆரின் போகிற போக்கில் சொல்லி திகைக்க வைக்கிறார்.

டெரியஸ் அந்த நேரம் ஆரின் தன்னைக் கண்காணிக்கிறாரோ என்று நினைக்கிறார். பெண்கள் இயல்பாகவே விஷயங்களை கவனிப்பார்கள். அவ்வளவுதான். ஆரினுக்கு தொடரில் இரு காதல் வாய்ப்புகள் வருகிறது. ஒன்று டெரியசிடமிருந்து... அடுத்து ஜே இன்டர்நேஷனல் யங் டேவிடமிருந்து... அவர் பாத்திரம் கேங்ஸ்டர் போல இருந்தாலும். அவர் இயல்பிலேயே ஒரு பயந்தாங்கொள்ளி. அதை வசனம், பின்னணி இசை மூலமே சொல்லிவிடுவது நல்ல ஐடியா.

டெரியஸ் மீது என்ஐஎஸ் பெண் தலைவர் கொள்ளும் அதீத வெறுப்புக்கு என்ன காரணமோ புரியவில்லை. எரிச்சலூட்டுகிற பாத்திரம்.

தொடரில் என்ஐஎஸ் அமைப்பை விட கேஐஎஸ் எனும் குடியிருப்பு வாசி அமைப்பு சிறப்பாக இயங்குகிறது. ஒரு தகவலை குடியிருப்பு வாசிகள் வேகமாக பகிர்ந்து குழந்தை கடத்தல்காரனை பிடிப்பது அசத்தலான காட்சி. அந்த அமைப்பு மூலம் பெறும் தகவல்களை என்ஐஎஸ் ஆட்கள் மிகவும் தாமதமாகவே கண்டுபிடிக்கிறார்கள்.

கேஐஎஸ் கேலக்சி ஷிம், சாங் ரியோல் ஆகிய பாத்திரங்கள் நன்றாக எழுதப்பட்டுள்ளன. நகைச்சுவைக்கு இவர்கள் உறுதி அளிக்கிறார்கள். சாங் ரியோல் பாத்திரத்தில் நடித்த நடிகர் தற்பெருமை கொண்டவராக, வீட்டில் இருக்கும் கணவராக நன்றாக நடித்திருக்கிறார்.

நாயகன், நாயகி என அனைவருமே காமெடி செய்வதால் ஒருகட்டத்தில் முழு தொடருமே எதையும் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்ற மனநிலைக்கு பார்வையாளர்களை கொண்டு வந்து விடுகிறது. தொடரின் இறுதியில் என்ஐஎஸ் இயக்குநர் கூட கிங் கேஸ்டில் குடியிருப்புகளில் ஒன்றை வாடகைக்கு பேசி அங்கு குடிவருகிறார். ரகசிய ஆபரேஷன்களுக்காக உளவுத்துறையின் மற்றொரு இடமாக கிங்ஸ் பேக் கடை மாறுகிறது. அடுத்த வேலைக்காக டெரியஸ், ஆரின் இருவரும் அமெரிக்கா செல்வதோடு தொடர் நிறைவு பெறுகிறது.

குடும்ப வாழ்க்கை, அதிலுள்ள மகிழ்ச்சி, காதலிப்பவர்களை இழந்தாலும் அதைக் கடந்து வருவது, மனதிற்கு பிடித்தவர்களை கண்டுபிடித்து ஒன்றாக சேர்ந்து வாழ்வது என நிறைய விஷயங்களை பேசுகிற தொடர். ஆரினுக்கு ஆபத்துகள் வந்தாலும் கேலக்சி ஷிம் அவளை விட்டுக்கொடுப்பதில்லை. குழந்தைகளை பார்த்துக்கொள்கிறார். வேலைக்கு ஏற்பாடு செய்கிறார். அவரோடு சேர்ந்த நண்பர்களும் ஆரினுக்கு உதவுகிறார்கள். அவருக்கு பிரச்னை வரும்போது ஆரின் உதவுகிறாள். இப்படியான நண்பர்களே, கணவர் இழப்பிலிருந்து அவளை மீட்கிறார்கள். சந்தோஷம், துக்கம் அனைத்திலும் உறுதுணையாக நிற்கிறார்கள். இக்காட்சிகளை பார்க்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது.

அனைவரும் ஜாலியாக அமர்ந்து பார்க்கவேண்டிய தொடர். அவ்வளவுதான். அதற்கு மேல் சொல்ல ஏதுமில்லை.

கோமாளிமேடை குழு








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!