கையால் எழுதுவதற்கும், மூளையின் சிந்தனைத்திறனுக்கும் தொடர்பு உண்டு!
கையால் எழுதினால் சிந்தனைத்திறன் கூடும்!
அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் கோப்புகளில் கையெழுத்திடும் புகைப்படங்களை நாளிதழ்களில், தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். உண்மையில் அமெரிக்க நாட்டினர், அதிபர் கையெழுத்தை பதிவு செய்து வைத்து அதை கோப்புகளில் பயன்படுத்தவென ஆட்டோபென் என்ற கருவியை தொண்ணூறுகளிலேயே உருவாக்கிவிட்டனர்.
இதைக் கேட்கும்போது, எந்திரம் கையெழுத்திடுவதைப் பற்றிய சந்தேகம் மனதில் தோன்றலாம். ஆட்டோபென் கருவி, இன்றும் பயன்பாட்டில் உள்ளது. கையால் எழுதுவது என்பது ஒருமுறை எழுதியது போல மறுமுறை இருக்காது. எந்திரம் கையெழுத்தை அப்படியே நகல் செய்துவிடும். கோப்புகளில் எழுதுவது, கையெழுத்திடுவது இன்றும் சமூக, அரசியல், பொருளாதார வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கையால் எழுதுவது இளையோரிடம் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.
2012ஆம் ஆண்டு, அமெரிக்க பள்ளி நிர்வாக சங்கம் ஆய்வொன்றைச் செய்தது. அதில், 33 சதவீத அமெரிக்க மாணவர்கள் பெரிய, சிறிய ஆங்கில எழுத்துகளை எழுதுவதில் தடுமாறுவது தெரிய வந்தது. இளையோரும் தாளில் தங்களது கருத்தை நண்பர்களுக்கு எழுதக்கூட திணறினர்.
தட்டச்சு எந்திரம் தொடங்கி மேசைக்கணினி, மடிக்கணினி, டேப்லட், ஸ்மார்ட்போன் என டிஜிட்டல் உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். இங்கு, கையால் எழுதுவது என்பது பயனற்ற ஒன்று என்ற எண்ணம் வலுவாகி வருகிறது.
சீனமொழியில், 'டிபிவாங்ஸி '(tibiwangzi)என்ற வார்த்தை உண்டு. இதன் அர்த்தம், பேனாவைக் கையில் எடுத்து, எழுதவேண்டிய வார்த்தையை மறந்து போவது எனலாம். சீன குழந்தைகள், டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன்களை தட்டி பழகி சீனமொழி எழுத்துகளை மறந்து வருகிறார்கள் என்பதைக் குறிக்கிற வார்த்தை அது. சீன இளையோர் நாளிதழ் சமூக ஆய்வில், அந்நாட்டிலுள்ள நான்கு சதவீத இளைஞர்கள் கையில் பேனா பிடித்து எழுதும் பழக்கத்தை மறந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று சுட்டிக்காட்டியிருந்தது.
கையால் எழுதும் பழக்கத்தை மறக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? பேனாவையும், தாளையும் கொடுத்து ஏதாவது எழுதக்கூறும் வரையில், நாம் எதை இழந்துவிட்டோம் என்று மாணவர்களும், இளைஞர்களும் அறியப்போவது இல்லை. இரங்கல் கடிதம், திருமண அழைப்பு என குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே மக்கள், கையில் பேனாவை எடுத்து எழுதி வருகிறார்கள். தினசரி வாழ்க்கை நிகழ்ச்சிகளை பதிவு செய்யும் வகையில் சிலர் நாட்குறிப்பு போன்றவற்றை எழுதி வருகிறார்கள். மற்றபடி கையால் எழுதுவது வெகுவாக குறைந்துவிட்டது.
கையில் பேனாவை பிடித்து மனதில் தோன்றும் கருத்தை தாளில் எழுதுவது, வெறும் பழக்கம் மட்டுமல்ல. அது சிந்தனைக்கான பயிற்சியும் கூட. கையில் எழுதும் பழக்கத்தை மறப்பது என்பது, இப்பயி்ற்சியையும் மறக்கிறோம் என்று புரிந்துகொள்ள வேண்டியதுதான்.
டிஜிட்டல் உலகி்ல், உடலின் இயக்கம் என்பது குறைவுதான். பல்வேறு டிஜிட்டல் கருவிகளில் விரலால் தொட்டு நகர்த்துவது, மேலே கீழே தள்ளுவது ஆகியவை மட்டும்தான் நடைபெறுகிறது. அதுவே நவீனகால செயல்பாடுகளுக்கு போதுமானதாக உள்ளது. மனம், உடல் என்பதன் ஒத்திசைவு ஒன்றுபோல இருப்பதில்லை.
நார்வேஜியன் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், பத்து ஆண்டுகளாக முல்லர், ஓப்பன்ஹெய்மர் ஆகிய இரு ஆராய்ச்சியாளர்கள் மூளையின் சிந்தனைத் திறன் பற்றிய ஆய்வை செய்து வந்தனர். இதில், கல்லூரி மாணவர்கள் மடிக்கணினி பயன்படுத்துபவர்கள், கையால் எழுதுபவர்கள் என இரு பிரிவினரை ஆய்வில் ஈடுபடுத்தி கண்காணித்தனர்.
சோதனை முடிவில், கையால் எழுதுபவர்களுக்கு மூளையில் செயல்பாடுகள் அதிகரிப்பதும், நினைவுகள் சேமிப்பது, புதிய செய்திகளை அறிவது ஆகியவற்றில் மேம்பாடு அடைவதையும் கண்டறிந்தனர். இவர்களது ஆய்வு, ஃபிரான்ட்டியர்ஸ் இன் சைக்காலஜி(2024) இதழில் வெளியானது.
கையால் எழுதும்போது மொழியிலுள்ள எழுத்துகளை மறக்காமல் நினைவில் கொள்கிறோம். எழுதும் மொழி மீதும் கவனம் பிறக்கிறது. யோசித்து பிறகு காட்சிபடுத்தியபிறகு, அதை தாளில் எழுதுகிறோம். ஆனால், கையால் எழுதுவதற்கு பொறுமை தேவை. அமெரிக்கர்கள் ஒரு நிமிடத்திற்கு நாற்பது வார்த்தைகளை தட்டச்சு செய்கிறார்கள். ஆனால், அதே கால அளவில் பதிமூன்று வார்த்தைகளையே கையால் எழுதுகிறார்கள் என ஆய்வுத்தகவல் கூறுகிறது.
டிஜிட்டல் உலகில் தள்ளுவது தட்டுவது ஆகியவை முக்கியமான அம்சங்களாக உள்ளன. இவற்றுக்கு எதிர் திசையில் பேனாவால் எழுதுவது உள்ளது. நவீன அறிவியலுக்கு எதிராக நின்று கையால் எழுதவேண்டும் என்று கூறுவதில் ஆக்கப்பூர்வமான நோக்கம் இல்லை. குறைந்தபட்சம், சிந்தனைத்திறன் வளர்ச்சி, மேம்பாட்டிற்காக தினசரி நாட்குறிப்பையேனும் கையால் எழுதுவது எதிர்கால தலைமுறையினருக்கு உடல், மனம் ரீதியாக உதவியாக இருக்கும்.
Source
The writing on the wall by christine rosen(discover magazine)
ச.அன்பரசு



கருத்துகள்
கருத்துரையிடுக