இந்தியர்களுக்கு உண்மையை விட சாதியே பெரிது!
இந்தியாவின் ஆளும் வர்க்கத்தினராக உள்ள பத்து சதவீதம் பேர் மீதியுள்ள பெரும்பாலான மக்களை வறுமையிலும், நோயிலும், அவலத்திலும் உழலுமாறு மாற்றியுள்ளதை வெளிப்படுத்தும் கட்டாயம் நமக்குள்ளது. வெளியே உள்ள உலகம், இங்குள்ள மூன்றாயிரம் ஆண்டு தீண்டாமை என்ற பிரச்னையை பற்றி அறியமாட்டார்கள். இதுபற்றிய உண்மைகளை நீங்கள் அறிய நேர்ந்தால், உங்களுக்கு கண்ணீர் வரக்கூடும். தடுக்காமல், அதை இனிமேல் சிந்தலாம்.
இந்தியாவின் மீது இரக்கம் கொண்டுள்ள வெளிநாட்டினர், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் உள்ளனர். தொன்மை குடியேற்ற நாடு என பெருமை கொண்ட இந்தியா எப்படி உலக நாடுகளிடையே நோயாளியாக உள்ளது என அவர்களும் புரிந்துகொள்ள உதவும்.
இந்திய அதிகார வர்க்கத்தில் அரசு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், கலாசார, மதவாத தலைவர்கள், சாமியார்கள், இந்துமத தலைவர்கள், நிதித்துறை நபர்கள், காந்தியின் அகிம்சையைப் போற்றுபவர்கள், உண்மை, சகிப்புத்தன்மை, நீதி, சுதந்திரம்,சமத்துவம் பற்றி பேசுபவர்கள் உள்ளடங்குவார்கள். நாடாளுமன்ற ஜனநாயகம் உலகிலேயே சரியாக இயங்குவது எந்த நாட்டில் என்றால் இந்தியாவை சுட்டிக்காட்டலாம். குறிப்பாக சோசலிசம், மதச்சார்பின்மை ஆகிய கருத்துகள் கடைபிடிக்கப்படுகிற தேசம். காந்தி, பௌத்தர் ஆகியோரது கருத்துகளை தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டு மேற்சொன்னவர்களின் சுய பிரதிநிதியாக மாறி உள்நாடு, வெளிநாடுகளிலும் இயங்கி வருகிறது. மனித உரிமைகளுக்கு எதிரான அநீதிகளை பொறுத்துக்கொள்ளாமல் போராடி வருகிறது.
1978-79ஆம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த வாஜ்பாய், ஐ.நாவிற்கு சென்று இந்தி மொழியில் உரையாற்றினார். அதில், அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளில் உள்ள இனவெறியை சுட்டிக்காட்டினார். உலக நாடுகளில் எங்கு மனித உரிமைகளுக்கு எதிராக அநீதி நடைபெற்றாலும் அதை எதிர்த்து கண்டனம் தெரிவித்தவர்களில் பிரதமர்களாக இருந்த நேரு, மொரார்ஜி தேசாய், இந்திராகாந்தி ஆகியோர் முக்கியமானவர்கள். இந்தியா மிகப்பெரிய புனிதர்களைக் கொண்டது. இங்கு, ஏராளமான புனித நூல்கள் எழுதப்பட்டுள்ளன, ஏராளமான சாமியார்கள் உண்டு. எனவே, உலகில் எங்கு அநீதி நடந்தாலும் இந்தியாவின் இதயத்தில் ரத்தம் கசியும். எனவேதான், இந்த நாட்டில் பசு கொல்லப்படுவதை தடை செய்துள்ளனர். ஏனெனில் அது புனிதமான விலங்கு. ஒரு பூச்சி செத்தால் கூட அதற்கு அஞ்சலி செலுத்தக்கூடிய நாடு இந்தியா. இந்தியா என்றால் அகிம்சை, அகிம்சை என்றால் இந்தியா.
இந்தியாவில் உள்ள தீண்டாமை பற்றி அயல்நாட்டினர் குறைவாகவே அறிவார்கள். மாமேதை அம்பேத்கர், இந்தியர்கள் தீண்டாமை பற்றி எழுதாமல் இருப்பதன் காரணம், துணிச்சலும் நேர்மையும் இல்லாததே. வெளிநாட்டினர் தீண்டாமையைப் பற்றி எழுதாமல் தவிர்ப்பதன் நோக்கம், மரபான பெரும்பான்மை மக்களை காயப்படுத்தக்கூடாது என்ற காரணத்தினால் என்று எழுதினார். கிறித்தவ மிஷனரிகள் தீண்டாமை பற்றிய ஆய்வுகளை செய்துள்ளனர்.சோவியத் கம்யூனிச கல்வியாளர்கள் தீண்டத்தகாதவர்களை பற்றி முழுமையாக புறக்கணித்தனர். இதற்கு காரணம், இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தலைமை பார்ப்பனர்களிடம் இருந்ததுதான். சீனாவைச் சேர்ந்த மார்க்சியர்களும் இந்த விவகாரத்தில் அமைதியை கடைபிடித்தனர். தி அன்டச்சபிள்ஸ் இன் கான்டம்பரி இந்தியா என்ற நூலை அமெரிக்கர் எழுதி தொகுத்தார். இதில், தீண்டத்தகாதவர்கள் பற்றிய முக்கியமான கட்டுரைகள் இடம்பெற்றிருந்தது. இந்த நூலை இந்தியர்கள் வாசித்தால், வெளிநாட்டு ஆய்வாளர் எந்தளவு ஆழமாக தீண்டாமையைப் பற்றி புரிந்துகொண்டு எழுதியிருக்கிறார் என வெட்கித் தலைகுனிவார். ஆனால், இந்தியர்களுக்கு இதுபற்றிய வெட்கம், கூச்சம், அவமானம் இருக்குமா? அவர்களைப் பொறுத்தவரை உண்மையைவிட சாதியே பெரிது. இந்திய அறிவுடைமைச்சமூகம் ஊழல் கறைபடிந்த, சாதிய மனப்பான்மை கொண்டது. உண்மையில் அவர்கள் ஆபத்தான வர்க்கம் கூட. சுயமாகவே நேர்மையாக நடந்துகொள்ளாதவர்கள் பிறருக்கு மட்டும் எப்படி நேர்மையானவர்களாக இருக்க முடியும்? எனவே, இந்து சிந்தனையாளர்கள் தீண்டத்தகாதவர்கள் பற்றி எந்த ஆய்வு செய்தாலும் அதன் மீது அணுவளவு நம்பிக்கையும் வைக்க முடியாது. இந்திய சிந்தனையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் தீண்டத்தகாதவர்கள் வெறுப்பதால், அவர்களுக்கு சேவை புரிய விரும்பவில்லை.
ஒருவருக்கு உதவி செய்ய வேண்டுமென்றால், அவரை உங்களுக்கு பிடித்திருக்க வேண்டும். பிடிக்காத, விரும்பாத ஒருவருக்கு உதவிகளை வழங்குவது சாத்தியம்தானா? இந்து சிந்தனையாளர்களுக்கு தீண்டத்தகாதவர்களை பிடிக்காது. எனவே, அவர்கள் எந்த செயல்பாட்டையும் செய்வதில்லை. எளிமையானதுதான். எனவே, அவர்களிடம் நாம் எந்த நீதியையும் எதிர்பார்க்க முடியாது.
இந்தியாவில் துணை பிரதமராக இருந்த ஜகஜீவன்ராம், இந்தியாவில் உள்ள சாதிமுறை, அமெரிக்காவில், மார்ட்டின் லூதர்கிங் போராடிய இனவெறியை விட மோசமானது என்று கூறினார். தீண்டாமை என்பது இனவெறி பிரச்னையல்ல. அது மனநலன் சார்ந்த குறைபாடு. வரலாற்று, சமூக, அரசியல் சூழல் சார்ந்து தீண்டத்தகாதவர்களைப் பார்க்கவேண்டும். அரசின் கோப்புகளில் தீண்டத்தகாதவர்களை பட்டியலினத்தவர் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்துகளால் நாட்டின் தந்தை என பாராட்டப்பட்ட எம் கே காந்தி, அம்மக்களை ஹரிஜன் என்று அழைத்தார்.
1982ஆம் ஆண்டு, டெல்லியில் ஸ்வீடனைச் சேர்ந்த மாணவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் தீண்டத்தகாதவர்கள் பற்றிய எனது நூலைக் கொடுத்தேன். அக்குழுவில் இருந்த பேராசிரியர் ஒருவர், நாங்கள் ஒருமாதமாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துகொண்டிருக்கிறோம். யாருமே இந்தியாவில் கடைபிடிக்கப்படும் தீண்டாமை பற்றி கூறவில்லையே என கேள்வி எழுப்பினார். அவர்கள் செல்லும் இடங்களில் மேல்சாதி இந்துகள் வருகை தந்து, முப்பது ஆண்டுகளுக்கு முன்னமே தீண்டாமையை ஒழித்துவிட்டதாக கூறியிருக்கிறார்கள். ஆக, அனைத்துமே கடந்தகாலத்தில் உள்ளது. அவர்கள் சொன்னதை ஸ்வீடன் நாட்டினரும் அப்படியே நம்பிவிட்டனர். வெளிநாட்டினர் மட்டுமல்ல. பணக்கார இந்தியர்களும் கூட தீண்டாமை இந்தியாவில் இல்லை என்றே நம்புகிறார்கள். சரிதான். தீண்டாமை என்பது மனநலன் சார்ந்த குறைபாடு. அதை எப்படி பிறர் பார்க்க முடியும்? அதை உணரத்தானே முடியும்? செருப்பை அணிகிறவர்தானே அது காலை கடிப்பதை புரிந்துகொள்ள முடியும். அவருக்கு அந்த வலி தெரியும். இந்தியாவில் வாழும் தீண்டத்தகாதவர்கள், தீண்டாமை ஏற்படும் வலியை தனியாக அனுபவிக்கிறார்கள். அது பிறருக்கு தெரியாது.
கல்வி கற்றால் தீண்டாமை அழிந்துவிடும் என பொதுவாக நம்பப்படும் வாதம் ஒன்றுண்டு. ஒருமுறை கல்வி கற்றால் தீண்டாமை அழிந்துவிடும் என வாதிடுபவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் அக்கருத்திலிருந்து வேறுபடுகிறோம். கல்வி கற்றவர்கள், பாமர மக்களை விட தீவிரமாக சாதிய மனப்பான்மை கொண்டவர்களாக செயல்படுகிறார்கள் என்பதே உண்மை. பல்கலைக்கழகங்கள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள் என அனைத்திலும் இந்துமதம நம்பிக்கை, கொள்கை, விதிகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அனைத்து இந்தியர்களுமே மேலாதிக்க பார்ப்பன கருத்தியலால் தாக்கம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். இதில் தீண்டத்தகாதவர்கள் கடுமையாக ஒடுக்கப்படுபவர்களாக உள்ளனர்.
பல நூற்றாண்டுகளாக தவறான கல்விமுறை வழியாக அரசியல் ரீதியாக விழிப்புணர்வு பெறாதவர்களாகவே தீண்டத்தகாத இளைஞர்கள் உள்ளனர். இந்து மத ஊடகங்கள், தீண்டத்தகாத இளைஞர்களை மூளைச்சலவை செய்து அவர்களை அரசியல் ரீதியாக ஒன்று திரட்ட முடியாமல், குழுவாக இணைக்க முடியாதபடியான செயல்களை செய்கிறது. அவர்கள் மீது தொடர்ச்சியாக உளவியல் ரீதியான போர் தொடுக்கப்படுகிறது. அவர்கள் சாதி மேலாதிக்கத்தை, சுரண்டலை ஏற்றுக்கொண்டு இருக்குமாறு பிரிவினை ஏவப்படுகிறது. சாதிய சமூகம் தீண்டத்தகாதவர்களின் வளங்களை பறித்துக்கொண்டு அவர்களின் உழைப்பையு்ம சுரண்டுகிறது. அவர்களின் சமூக கலாசார காரணிகளை முற்றாக புறக்கணித்துவிட்டு வெற்றிகரமாக இரு, பணக்காரனாக மாறு என போலியான லட்சியங்களை எதிரிகள் கூறுகிறார்கள்.
மூலம்
தலித் தி பிளாக் அன்டச்சபிள்ஸ் - வி டி ராஜசேகர்

கருத்துகள்
கருத்துரையிடுக