சாதி என்பது ஒருவகையான இந்து மனநல நோய்!
இந்து பார்ப்பன கருத்தியல் என்பது, லாபத்தை அதிகரித்து மேல்சாதியினரை வைத்து சொத்துக்களை கட்டுப்படுத்தி தங்களது அந்தஸ்து, பிற சாதிகளுக்கு இடையிலான உறவைக் காப்பாற்றிக்கொள்வதாக இருக்கிறது. பார்ப்பன சமூகம், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டி, சமூகத்திலுள்ள பிற சாதி இளைஞர்களை தவறாக வழிநடத்தி தங்களது கருத்தியலை பாதுகாக்க போரிடுமாறு செய்கிறார்கள். இந்த வகையில் அவர்கள் மக்களையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
கல்வி என்பது இந்தியாவுக்கு எந்த தீர்வையும் கொண்டு வராது. சாதி, தீண்டாமை என்பது இந்தியாவில் பரவலாக கடைபிடிக்கப்பட காரணமே படித்த மக்கள்தான். சாதி என்பது அவர்களின் மூளையில் உள்ளது. இது ஒருவகையான இந்து மனநல நோய். இந்து மதம் என்பது அமைப்பு என்பதையும் கடந்தது. இ்ங்கு வாழும் ஒவ்வொரு இந்துவும் சாதி, தீண்டாமையை கடைபிடிப்பதை தனது மதக்கடமையாக கருதுகிறான். இதில் பொருளாதார அமைப்பும் உண்டு. முதலாளி, தனது அடிமையை நன்றாக சோறு போட்டு, உடை உடுத்த வைத்து, தங்குவதற்கு இடம் கொடுத்து சந்தைமதிப்பு குறையாமல் பார்த்துக்கொள்வாரோ அதுபோலத்தான் இங்கும் நடைபெறுகிறது. தீண்டாமை என்பதைப் பொறுத்தவரை இந்துக்கள் அதை பராமரிக்க எந்த பொறுப்பையும் எடுத்துக்கொள்வதில்லை. பொருளாதார அமைப்பாக, சுரண்டுவதற்கு எந்த வித எதிர்ப்பையும் தெரிவிக்காத வகையில் இந்திய சமூகம் இயங்குகிறது என்றார்.
தீண்டாமையை பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடைபிடிக்கிறார்கள். மாணவர் சங்கத் தேர்தலிலும் கூட சாதி ரீதியான போக்கு காணப்படுகிறது. ஆசிரியர் பணியிடங்களுக்கு தீண்டத்தகாதவர்கள் நுழையவிடாதபடி பார்த்துக்கொள்கின்றனர். எனவே, கல்வி மட்டுமே தீண்டாமையை விலக்கிவிடமுடியாது. சம பந்தி விருந்து, சாதி மறுப்பு திருமணம் மட்டுமே தீண்டாமையை ஒழிக்காது. சாதி என்பது மனநிலை. இங்கு நான் கூறுபவை, இந்தியாவில் உள்ள தீண்டத்தகாதவர்கள் பற்றிய சித்திரம். இதை உருவாக்காதவரை பிறர், இந்தியாவை நேர்த்தியாக அமைந்த ஜனநாயக நாடு என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள்.
பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு, தீண்டத்தகாதவர்களைப் பற்றிய செய்தியை படம்பிடிக்க வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனமான தேம்ஸ் தொலைக்காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை. ஏனெனில் உண்மையான செய்தி வெளியே வந்தால் இந்தியாவைப் பற்றிய உண்மை வெளியே தெரிந்துவிடும் என்ற காரணமாக இருக்கலாம். இந்திய ஆளும் வர்க்கம், உள்ளுக்குள் அழுகி நாற்றமடிப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால், அந்த வாசனை வெளியே தெரிந்துவிடக்கூடாது என்ற கவனமாக இருக்கிறது. எனவே, செய்திக்கான படப்பிடிப்பு தடுக்கப்பட்டது. பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், இந்திய அரசின் இரட்டை நிலைப்பாடு பற்றி கேள்வி எழுப்பி போராடினார். அவரைத் தவிர மற்றவர்கள் அரசுக்கு ஆதரவாக மௌனமாக இருந்தனர்.
தீண்டத்தகாதவர்கள் யார்?
வெளிநாட்டினருக்கு தீண்டத்தகாதவர்கள் யார், இப்படியான வினோதமான பிறவிகள் எங்கே இருக்கிறார்கள் என யோசித்துக்கொண்டிருப்பார்கள். தீண்டத்தகாதவர்களுக்கு இந்தியாவில் தலித் என்று பெயர். இப்பெயரை அவர்களே தங்களுக்கு சூட்டிக்கொண்டனர். தல் என்ற ஹீப்ரு சொல்லுக்கு முறிவு, நொறுங்கியது என்று பொருள். இந்தியாவில் 800 மில்லியன் மக்கள் என்றால் அதில் பழங்குடியினரோடு சேர்ந்து தலித்துகள் முப்பது சதவீதம் இருப்பார்கள்.
தலித்துகள் இந்தியாவின் பூர்விக குடிகள். இவர்கள் ஆப்பிரிக்கர்களின் உடல் அமைப்பு சாயலைக் கொண்டவர்கள். ஆப்பிரிக்காவும் இந்தியாவும் ஒன்றாக இருந்து பிறகு கடலால் பிரிந்ததை படித்திருப்போம். அந்த வகையில் ஆப்பிரிக்கர்களுக்கும் இந்தியாவிலுள்ள தீண்டத்தகாதகவர்களுக்கும் பழங்குடியினருக்கும் பொதுவான முன்னோர்கள் இருந்திருக்கலாம். சிந்து சமவெளி குடியேற்றம் பற்றிய தொல்லியல் ஆய்வில் இத்தகைய தகவல்கள் வெளியே வந்தன. இந்திய பூர்விக குடிகளான இவர்களே, வெளிநாட்டிலிருந்து வந்த ஆரியர்களை எதிர்த்தவர்கள். இவர்களே தொன்மை நாகரிகத்தை கட்டமைத்தவர்கள். ஆரியர்களோடு போரிட்டு தோற்றபிறகு, கிராமத்திற்கு வெளியே பூர்விக குடிகள் குடிவைக்கப்பட்டு தீண்டத்தகாதவர்கள் என்று கூறப்பட்டனர். இவர்களை பட்டியலினத்தவர் எனலாம். இவர்களில் காட்டுக்குள் சென்று மலைக்குள் சென்று குடியேறியவர்களை பட்டியலின பழங்குடிகள் எனலாம்.
இந்தியாவிற்குள் புகுந்த ஆரியர்களுக்கு குடியேற்ற நாகரிகம் தெரியாது. அவர்கள் நாடோடிகள், காட்டுமிராண்டிகள். அவர்கள் பூர்விக மக்களை குறிப்பாக பெண்களை அடிமையாக்கி சிந்து சமவெளி நாகரிகத்தை அழித்தனர். மேலாதிக்க கடவுள்களை அறிமுகம் செய்தனர். முதலில் இங்கு தாய்வழி சமூகமே அதிகாரத்தில் இருந்தது. சாதிய அமைப்பை வலுக்கட்டாயமாக திணித்து வெள்ளை நிறம் கொண்டவர்கள் மேலே, கலப்பு இனத்தவர் நடுவில், கருப்பு நிறமுடைய தீண்டத்தகாதவர்கள் இறுதியில் என சமுதாயத்தை கட்டமைத்தனர்.
தீண்டத்தகாதவர்கள் முழுக்க ஆரிய நாகரிகத்தை ஏற்கவில்லை. அதற்கு உடன்படவும் இல்லை. இன்றும் கூட இந்தியா முழுக்க அவர்களுக்கென தனி கோவில், கடவுள், உணவுமுறை, கலாசார அடையாளங்கள் உண்டு. இன்று பலரும் இந்து மத கடவுள்களை வணங்கத் தொடங்கிவிட்டனர். வெளியில் இருந்து வந்த ஆரியர்களுக்கும், இந்தியாவின் மண்ணின் மைந்தர்களான தீண்டத்தகாதவர்களுக்கும் இடையே வெறுப்பும், வன்முறையும் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருக்கிறது. இரு இனங்களுக்குமான போர் நிற்காமல் இன்று வரை தொடர்ந்து வருகிறது.
மக்கள் தொகை
தீண்டத்தகாத மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பை ஆளும் வர்க்கம் கீழே அழுத்துகிறது என கூறி வருகின்றனர். இந்தியாவின் அரசியலில் மக்கள்தொகை கணக்கெடுப்பு எண்கள் முக்கிய இடத்தை வகிக்கிறது. இவற்றை வைத்தே கட்சிகளின் அரசியல் அடிப்படைகள், கொடுக்கும் அழுத்தம் ஆகியவை மாறுகிறது. தீண்டத்தகாத மக்கள் முன்வைக்கும் புகார்களை இஸ்லாமியர்களும் வழிமொழிகிறார்கள்.
இப்பிரச்னைக்கு முக்கியமான காரணம், மக்கள்தொகை கணக்கெடுப்பில் தீண்டத்தகாத மக்கள் பட்டியலினத்தில் சேர்க்கப்படாம் இந்து மதத்தில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இந்தியாவில் இந்துமதம் ஒற்றை பெரும்பான்மை கொண்டது. எனவே, தீண்டத்தகாதவர்களைப் பற்றிய சரியான சித்திரத்தை மக்கள்தொகை கணக்கெடுப்பு கொடுப்பதில்லை. தீண்டத்தகாதவர்கள் பௌத்தம், கிறித்தவம், சீக்கியம் என பல்வேறு மதங்களை தழுவி வாழ்ந்து வருகிறார்கள். அதேசமயம், தீண்டாமையால் வலியும் வேதனையும் கொண்டிருக்கிறார்கள்.
ராமன், கிருஷ்ணன், சிவன் ஆகியோரை ஆரியர்கள் வணங்குகிறார்கள். உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பசு வளையப்பகுதி எனப்படுகிறது. இங்கு வாழும் வெள்ளை நிறத்தோலுடையவர்கள், ஆரியர்கள். இவர்கள் ராமரை வழிபடுகிறார்கள். மேற்சொன்ன மாநிலங்களில் இந்து நாஜி தீவிரவாதம் வளர்ந்து வருகிறது.
இந்து அல்லாதவர்களின் மக்கள்தொகை அதிகரிப்பது, ஆளும் வர்க்கத்தை அச்சத்தில் ஆழ்த்துகிறது. எனவே, அவர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பில் பழங்குடியினர், தீண்டத்தகாதவர்கள், இஸ்லாமியர், கிறித்தவர்கள், பட்டியலின பழங்குடிகள் ஆகியோரின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுகிறார்கள். கிராமங்களில் இருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ள தீண்டத்தகாதவர்கள், அரசு செய்யும் துரோகச்செயலால் தங்களது அடிப்படை உரிமையைப் பெற முடியாதவர்களாகிறார்கள். இதில் கூடுதலாக வறுமை, கல்வி அறிவின்மை சேரும்போது நிலைமை மேலும் பாதகமாகிறது.
வி டி ராஜசேகர் - தலித் வாய்ஸ்
மூலம் தலித் தி பிளாக் அன்டச்சபிள்ஸ் ஆப் இந்தியா


கருத்துகள்
கருத்துரையிடுக