அப்பாவின் மீது மகனுக்கு உருவாகும் கொலைவெறி!
உளவியல்
மிஸ்டர் ரோனி
ஓடிபல் காம்ப்ளெக்ஸ் என்றால் என்ன?
அம்மா மீது ஏற்படும் ஈர்ப்பு எனலாம். சிக்மண்ட் பிராய்ட் இந்த கோட்பாட்டை உருவாக்கினார். இதற்கு சொந்த வாழ்க்கையிலேயே உதாரணம் இருந்தது. அவரின் பெற்றோர் இருபது ஆண்டுகள் தனியாக பிரிந்து வாழ்ந்தனர். அம்மாவிற்கு சிக்மண்ட் முதல் பிள்ளை. அந்த பாசம், ஈர்ப்பு அம்மா, மகன் இருவருக்கும் இடையே தீவிரமாக இருந்தது. அம்மா, 95 வயதில் காலமானார். மகன் சிக்மண்ட் அதற்குப் பிறகு ஒன்பது ஆண்டுகள் கழித்து இறந்தார்.
ஓடிபல் காலகட்டம் என்பதையும் அவர் வரையறுத்து கூறினார். நான்கு முதல் ஏழுவயது வரையிலான காலகட்டத்தில் மகனுக்கு தாய்மீது அதிக ஈர்ப்பு உருவாகிறது. இந்த எந்தளவுக்கு செல்கிறது என்றால், அப்பாவை எதிரியாக கருதி கொல்லவேண்டும் என்ற அளவுக்கு... அந்த கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டால் அவர்களது இளமைக்கால வாழ்க்கை நன்றாக இருக்கும். மகனின் கோபத்தை அப்பாவின் பலம் கட்டுப்படுத்துகிறது. பிறகு மகன் அக்காலகட்டத்தை கடந்தால் வளர்ந்து அவனுக்கென்று மனைவியைத் தேடி குடும்பத்தை உருவாக்கிக்கொள்கிறான். அவன் மனதில் இருந்த கோபம், அவனது மகனது மனதிற்கு குடியேறுகிறது.
கார்ல் ஜூங் யார்?
சிக்மண்ட் பிராய்டோடு இணைந்து பணிபுரிந்த உளவியல் ஆய்வாளர். பின்னாளில், அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனக்கென கொள்கை கோட்பாடுகளை உருவாக்கி புகழ்பெற்றார். ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். முழுப்பெயர் கார்ல் குஸ்தாவ் ஜூங். 1907ஆம் ஆண்டு பிராய்டை சந்தித்து இணைந்து வேலை செய்தவர்கள், 1913ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
தன்னுடைய கோட்பாடுகளுக்கு அனாலிடிகல் சைக்காலஜி என பெயர் வைத்து பிராய்டிலிருந்து வேறுபட்டவராக உலக அளவில் புகழ்பெற்றார் ஜூங். குடும்ப வழியில் மதத்தை நம்பினார் ஜூங். பிராய்ட் அதை ஆய்வுக்கானதாக கருதினாரே ஒழிய, அதன் மீது நம்பிக்கை வைக்கவில்லை. ஜூங், உளவியல் ஆய்விதழுக்கு ஆசிரியராக இருந்துள்ளார். சர்வதேச உளவியல் சங்கத்தின் தலைவராக பங்களித்துள்ளார்.
ஹியூமனிஸ்டிக் சைக்காலஜியை உருவாக்கியவர் யார்?
அமெரிக்க உளவியலாளரான ஆப்ரகாம் மாஸ்லோ. இதுதொடர்பாக நிறைய நூல்களை எழுதி தள்ளியிருக்கிறார். தாகம், பசி, கதகதப்பு பல்வேறு தேவைகளை தீர்த்துக்கொள்வதே அடிப்படையானது என கூறினார். இதற்குப் பிறகுதான் தன்னை உணர்தல், புதுமைத்திறன் என்பதெல்லாம் வருகிறது. ஒரு மனிதனின் வாழ்க்கை ஒற்றை தன்மையில் அமைவது இல்லை. பல்வேறு அம்சங்கள் வாழ்க்கையை முடுக்கிவிடுகிறது என்று கூறியவர்.
டி லவ், பி லவ் என்றால் என்ன?
டி லவ், என்றால் காதலில் பற்றாக்குறை கொண்ட ஆட்கள். இவர்களுக்கு எவ்வளவு காதலைக் கொடுத்தாலும் பற்றாது. காதலை, காதலனை, காதலியை பொறாமையுடன் பார்ப்பார்கள். இப்படியான காதலை பொறுத்துக்கொள்வது தொடர்வது கடினம். பி லவ், ஒருவர் எப்படி இருந்தாலும் தன்னிடம் இருப்பதையெல்லாம் வழங்குவது. இந்த வகையில் பி லவ் நிலைத்தன்மை கொண்டது, ஆரோக்கியமானதும் கூட.
உளவியல் சிகிச்சையில் கார்ல் ரோஜர்ஸின் பங்கு என்ன?
உளவியல் சிகிச்சையை கார்ல், அறிவியல் பூர்வமாக மாற்றினார். தான் அளிக்கும் கவுன்சிலிங் முறைகளை முதன்முதலில் பதிவு செய்யும் வழக்கத்தை தொடங்கியவர் கார்ல் ரோஜர்ஸ்தான். பரிசோதனைகளை, கவுன்சிலிங்குகளை செய்து அதை ஒப்பிட்டு பார்க்கும் முறையை உருவாக்கினார்.
நிபந்தனையற்ற அன்பு என்றால் என்ன?
கார்ல் ரோஜர்ஸின் கோட்பாடுகளில் இதுவும் ஒன்று. பெற்றோர் பிள்ளையை நிபந்தனை விதித்து அன்பு செலுத்தினால், அவர்களுக்கு சுயம் மீது நம்பிக்கை இருக்காது. வளராது. அதேசமயம் எந்த நிபந்தனையும் இல்லாமல் அன்பு செலுத்தினால் காலப்போக்கில் அவர்கள் தங்களை நம்புவார்கள். தன்னம்பிக்கை வளரும் என்று கூறினார். ஏறத்தாழ இது பி லவ், டி லவ் கோட்பாடுகளை ஒத்துப்போகிறது.


கருத்துகள்
கருத்துரையிடுக