சீனாவின் கல்வி சீர்திருத்தம் - கல்வியில் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு!





வாழ்ந்து கெட்டுப்போன நாட்டிற்கு அதன் கடந்தகாலமே எதிரி. சீனாவில் காலத்திற்கேற்ப கொண்டு வரப்படும் மாற்றங்களை தடுப்பதும் இப்படியான கடந்தகால பெருமைகள்தான். சீனாவில் குடி அரசு செயல்படுத்திய கல்வி சீர்திருத்தங்கள் நாட்டின் மேற்கு, மத்தியப் பகுதிகளில் உள்ள பள்ளியில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. நகரம், கிராமம் ஆகியவற்றிலுள்ள மாணவர்களிடையே திறன் இடைவெளி அதிகரித்தது. அரசின் சீர்திருத்தம் அதை அடையாளம் கண்டு குறைக்கவில்லை. மேம்படுத்தவுமில்லை.




சீனா, தனது சீர்திருத்தங்களுக்கு முன்னதாகவே தேர்வுமுறை, மதிப்பெண் என தனது நடைமுறை கல்விமுறையில் பிரச்னை இருப்பதை அடையாளம் கண்டுகொண்டது. பிறகே, மேற்குலக நாடுகளில் உள்ள கல்வித்தரத்தை புரிந்து அக்கொள்கைகளை நகல் எடுத்து தனது கல்விமுறையில் கொண்டுவர முயன்றது. தொடக்கத்தில் புதுமைத்திறனோ, கண்டுபிடிப்பு ஊக்குவிப்போ சீன கல்விமுறையில் கிடையாது. எனவே, மேற்கு நாடுகளிடமிருந்து இப்படியான புதுமையான அம்சங்களை கடன் பெற்றது.













பாடத்திட்டங்களை ஆசிரியர்கள் ஏற்று புரிந்துகொண்டால் மட்டுமே அது மாணவர்களை சென்றடையும். ஆசிரியர்கள் சொல்லித்தருவதை மாணவர்கள் புரிந்துகொண்டு தேர்வெழுதி மதிப்பெண் பெற்றால் மட்டுமே நிரூபணம் கிடைக்கும். இத்தகைய சூழலில் ஆசிரியரின் ஊதிய, பணி உயர்வு அனைத்துமே மாணவர்களின் மதிப்பெண் சார்ந்துதான் இருக்கிறது. தேர்வை அடிப்படையாக கொண்டு இயங்கும்போது, வாழ்க்கையை புரிந்துகொள்ளும் அடிப்படை கல்வியை மாணவர்கள் கற்பார்களா என்பது சந்தேகமே.




ஆசிரியர்களின் தகுதி பற்றி பார்ப்போம். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்கும் முன்னர் 120 மணி நேரம், வகுப்புகளை வெற்றிகரமாக நடத்தியிருக்கவேண்டு்ம். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் 360 மணிநேரம் வகுப்புகளை நடத்தி தங்களின் ஆசிரியர் தகுதியை நிரூபணம் செய்யவேண்டும். ஆசிரியர் பற்றிய புதிய சீர்திருத்தங்களிலும் பெரிய மாற்றமில்லை. மாதம்தோறும் மூன்று முறை, மாணவர்களின் பெற்றோர் வகுப்பறைக்கு வந்து அமர்ந்து ஆசிரியர்களின் வகுப்பை பார்த்து, கேட்டு ஆய்வு செய்வார்கள். அவர்கள் கேட்கும் கேள்விக்கு ஆசிரியர் பதில் கூற வேண்டும்.




ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் தங்கள் கலாசார தன்மையை தக்க வைத்துக்கொண்டு மாறிவரும் காலச்சூழ்நிலைக்கு ஏற்ப பாடத்திட்டங்களை நவீனப்படுத்தி வென்றுள்ளன. சீனாவில் புதிய சீர்திருத்த கல்விமுறையை தொன்மையான கலாசாரம், நம்பிக்கை, உலகமயமாக்கம், நவ தாராளமயமாக்கம் என நிறைய விஷயங்கள் பாதிக்கின்றன. அதேசமயம், கல்வியை முழுமையாக தாராளமயம் ஆக்குவது தனியார் கல்வி வணிகத்தை ஊக்குவிக்கும். ஆனால், சமூகத்தில் மக்கள் வர்க்கங்களிடையே இடைவெளி கூடும்.




2008ஆம் ஆண்டு சீனாவில் இருபது சதவீத தனியார் பள்ளிகளே இருந்தன. இதில் தொடக்க, உயர்நிலை, பல்வேறு கலைகளைக் கற்றுத்தரும் நிறுவனங்களும் உள்ளடங்கும். 2016ஆம் ஆண்டில் நாடெங்கிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பள்ளிகள் உருவாகி இயங்கி வந்தன. இதில் ஐம்பது மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வந்தனர்.











சீனாவில் கல்வி என்பது பெரிய வணிகம். அதில், மாணவர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். பள்ளி முடிந்தபிறகு தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பி பல்வேறு கலைகளைக் கற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். வார இறுதியிலும் ஓய்வெல்லாம் கிடையாது. அப்போது கற்கவென தனி பயிற்சிகள் உண்டு. இதற்கென தனி கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. தினசரி மாலைவேளை பயிற்சி




கல்வி என்ற ஓட்டப்பந்தயத்தில் தனது பிள்ளை களைத்துவிடக்கூடாது என பெற்றோர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அவன்/அவள் பந்தயத்தில் பங்கேற்க விரும்புகிறார்களா இல்லையா என கேள்வி கேட்பதில்லை. அவர்களது விருப்பத்தையும் அறிவதில்லை.




சாதாரணமாக ஒரு சீனக்குடும்பத்தில் கல்விக்கான செலவு என்பது மிக அதிகம். 1949ஆம் ஆண்டு தனியார் கல்வி நிறுவனங்கள் ஒழிக்கப்பட்டு, அவை அரசின் உடமைகள் ஆக்கப்பட்டன. பிறகு, 1978ஆம் ஆண்டு மீண்டும் தனியார் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின.




சீனாவில் 2005க்குப் பிறகு தனியார் பல்கலைக்கழகங்கள் அதிகரிக்கத் தொடங்கின. இவற்றுக்கு நிதி ஆதாரத்தை வெளிநாடுகளில் வாழும், ஹாங்காங்கில் வாழும் சீனர்கள் வழங்குகிறார்கள். தேசிய தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் வாங்கும் மாணவர்களை சேர்த்துக்கொண்டு கல்வியை வழங்குகிறார்கள். இவற்றில் கல்விக்கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.




2005 தொடங்கி 2015 வரையிலான காலகட்டத்தில் தனியார் கல்விநிறுவனங்களின் தொடக்கம் என்பது முப்பது சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டு கல்வி கவுன்சில், தனியார் நிறுவனங்களின் கல்வி முதலீடுகளுக்கான தடையை நீக்கிவிட்டது. இந்த நிறுவனங்கள் சொந்த முதலீடு, அதிக லாபம் என்றுதான் இயங்கி வந்தன. அரசின் நிதி முதலீட்டைப் பற்றியெல்லாம் கவலையே படவில்லை. அதைச் சார்ந்தும் இயங்கவில்லை.




வெளிநாடுகளில் கல்வி பயின்று சீனா திரும்பியவர்கள், வெளிநாட்டினர் என பலரும் பள்ளிகளை, கற்றல் மையங்களை தொடங்கினர். சீன அரசு, முன்னர் போல கல்வியில் முதலீடு செய்வதற்கு தடைகளை விதிக்கவில்லை. அவற்றை இலகுவாக மாற்றியது. சீனாவில் அதிக பள்ளி, கற்றல் மையங்களை நியூ ஓரியன்டல் என்ற பெருநிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் உலகளவில் கல்விச்சேவைகளை வழங்குவதில் மூன்றாவது இடத்தில் உள்ளது.











தனியார் பள்ளிகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சீன கலாசாரம், சிந்தனையாளர்களின் கருத்தை கற்றுத்தரும் 'சிசு' என்ற பள்ளிகளும் உள்ளது. இப்பள்ளியை தனியார் நிறுவனங்கள் நடத்துகின்றன. இப்பள்ளி, சீனாவின் தொன்மை கலாசாரம், பண்பாட்டை கற்றுத்தருகிறது. சுருக்கமாக அரசுக்கு ஆதரவான தேசப்பற்றை மாணவர்களுக்கு ஊட்டிவிடுகிறது.




நிறைய பெற்றோர் சீன அரசின் தேர்வை மையமாக கொண்ட கல்வியை விரும்புவதில்லை. அரசின் கட்டாயக்கல்வி காலம் முடிந்தவுடன் பிள்ளையை வெளிநாட்டுக்கு கல்வி கற்க அனுப்பிவிடுகிறார்கள்.




2005ஆம் ஆண்டு நாட்டிங்காம் பல்கலைக்கழகம் தங்களுடைய கிளையை சீனாவில் தொடங்கியது. இதற்கு இரு ஆண்டுகள் முன்னதாகவே சீன அரசு, வெளிநாட்டு கூட்டுறவை கல்வித்துறையில் அனுமதிக்க தொடங்கிவிட்டது. நியூயார்க் பல்கலைக்கழகம், லிவர்பூல் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்கள் சீனாவில் வெற்றிகரமாக கிளையைத் தொடங்கி இயங்கி வருகின்றன.




மாணவர்கள் கடுமையாக உழைத்தால் அவர்கள் உயர்வதற்கு வாய்ப்புண்டு. இதை பொதுவான வாதமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் சீனாவைப் பொறுத்தவரை அதிகாரம், பணம் ஆகியவையும் கூடுதலாக தேவை. எதிர்காலத்தில் இந்த பிரச்னைகள் நாட்டின் நே்மை,சிறந்த அரசு செயல்பாடு, நிலைத்தன்மை ஆகியவற்றை பாதிக்கக்கூடும்.




1978ஆம் ஆண்டு முதல் கல்வி கற்கும் உள்நாட்டு மாணவர்களை வெளிநாட்டிற்கு அரசு திட்டங்கள் வழியாக பரிமாற்றம் செய்துகொள்வது அதிகரித்து வருகிறது. அந்தவகையில், 1978-2016 காலகட்டத்தில் 4 மில்லியன் சீன மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்றனர். சீனாவில் தங்கள் கிளையை தொடங்கியுள்ள வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், கூட்டுறவு முறையில் உள்நாட்டு பள்ளி, பல்கலைக்கழகங்களோடு இணைந்துள்ள கல்வி அமைப்புகள் சீன மாணவர்களை படிக்க வைக்கும் பொறுப்பை ஏற்கின்றன. இப்படி மாணவர்கள் வெளியே சென்று படிப்பது, சீனாவுக்கு புதிய திறன்களை, அறிவை கொண்டு வரும் திட்டமாக உள்ளது.




தற்காப்புக்கலையில் ஒரு பழமொழி ஒன்றைக் கூறுவதுண்டு. ஒரு சிறந்த வீரனை வெல்ல அவர் செய்வதை அப்படியே நகல் செய்யுங்கள். அதேதான் சீனா கல்விமுறையில் செய்கிறது. தனது கருத்தியல், பொருளாதார ரீதியான எதிரிகளை எதிர்கொள்ள கல்வியை முதன்மையான கருவியாக கொண்டுள்ளது.




2010ஆம் ஆண்டு உலகமெங்கும் உள்ள அறிவியல் இதழ்களில் சீன ஆராய்ச்சியார்களின் கட்டுரைகள் வெளியான அளவு 11 சதவீதம் என்றால், 2014ஆம் ஆண்டு, இந்த எண்ணிக்கை 18 சதவீதமாக அதிகரித்தது. ஆராய்ச்சி அறிக்கை வெளியீட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளே முன்னிலை வகித்து வந்தன. சீனா, இப்போது இங்கிலாந்தை பின்னே தள்ளினாலும் அந்நாடு அறிவியல் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சிகளில் நெடுந்தொலைவு செல்லவேண்டியுள்ளது.




சயின்ஸ், நேச்சர், எகனாமிஸ்ட் ஆகிய இதழ்கள் செய்த ஆராய்ச்சியில் சீனாவில் செய்த பல்வேறு ஆராய்ச்சி அறிக்கைகள் பணம் கொடுத்து வெளியிடப்பட்டவை அல்லது சீனமொழியில் வெளியானதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுபவை, அறிவியல் எழுத்தாளர்களை காசு கொடுத்து அறிக்கை எழுதக்கூறுவது என நிறைய பிரச்னைகள் அடையாளம் காணப்பட்டன. ஆக, எண்ணிக்கை உயர்ந்திருந்தாலும் தரம் உயரவில்லை என்று விமர்சனங்கள் கூறப்படுகிறது.




சீனாவில் 2017ஆம் ஆண்டு கேம்பிரிட்ஸ், ஸ்பிரிங்கர் என பல்வேறு பதிப்பு நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட கட்டுரைகளை நீக்குமாறு சீன அரசு உத்தரவிட்டது. தியானன்மேன் சதுக்கம், கலாசார புரட்சி, தைவான், திபெத் ஆகிய வார்த்தைகள் இருந்தால் கட்டுரைகளை சீன மக்கள் படிக்க அனுமதி கிடையாது. இதை சீன அரசு, தனது ஆதிக்கத்திற்கு உள்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களை வைத்து ஒழுங்குபடுத்தி தணிக்கை செய்கிறது. சீனாவின் ஃபயர்வால் வசதி உலகளவில் புகழ்பெற்றது. தடை செய்யப்பட்ட வசதிகளைக் காண உதவும் விபிஎன் வசதியைக் கூட தடை செய்துவைத்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!