வளர்த்த அப்பாவைக் காப்பாற்ற, பெற்றெடுத்த அப்பாவிடம் பணத்தை கொள்ளையடிக்கும் மகன்!



 மா நானா சூப்பர் ஹீரோ
சுதீர்பாபு, சாயாஜி ஷிண்டே
தெலுங்கு

எப்போதுமே ஜிம் பாய் போல உலாவும் சுதீர்பாபு, இம்முறை சண்டைக் காட்சிகளே இல்லாத படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், படத்தில் நெகிழ்ச்சியான எந்த ஒரு காட்சியும் இல்லை. அனைத்துமே மிக மேலோட்டமாக உள்ளது.

ஒரு தந்தை கையில் காசு இல்லை என்பதால் பிள்ளையை மதர்தெரசா என்ற அனாதை இல்லத்தில் விட்டுவிட்டு சிறைக்கு சென்றுவிடுகிறார். அந்த குழந்தையை இன்னொருவர் எடுத்து வளர்க்கிறார். அவர்தான் வளர்ப்புதந்தை சாயாஜி ஷிண்டே. ஆனால் என்ன துரதிர்ஷ்டமோ, அவர் வாழ்க்கை குழந்தை வந்த பிறகு தலைகீழாகிறது. மனைவி இறக்கிறார். வேலை போகிறது. பங்குச்சந்தை வீழ்ச்சியடைய கடன்காரராகிறார். வளர்ப்பு பிள்ளை ஜானியை கரித்துக்கொட்டுகிறார். மகன்தான் அப்பா செய்யும் பித்தலாட்டங்களுக்கு கடன் வாங்கி காசு கட்டுகிறார். ஜானி மெக்கானிக் கடை ஒன்றை வைத்திருக்கிறார். அதை வைத்தே பிழைப்பு ஓடுகிறது.

இந்த நிலையில் பெற்ற அப்பா, மகன் ஜானியைத் தேடி வருகிறார். அப்போது ஜானி, அவர் தனது அப்பா என தெரியாமலேயே அவருக்கு கார் ஓட்டுகிறார். சில நூறு மைல்கள் ஒன்றாக பயணிக்கிறார்கள். அந்த சமயம், வளர்த்த அப்பா சீனிவாசை காவல் நிலையத்தில் வைத்து அடித்து உதைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர், கந்துவட்டிக்காரரை பங்குச்சந்தையில் முதலீடு செய்யச்சொல்லி இருபத்து நான்கு லட்சம் ரூபாய் பறிபோகிறது. அதற்கு வட்டியோடு சேர்த்து ஒரு கோடு பணம் கட்ட வட்டிக்காரர் தரப்பு மிரட்டுகிறது. காரில் தன்னோடு வருபவரிடம் லாட்டரிச்சீட்டு இருப்பதைப் பார்க்கிறார் ஜானி. அந்தப் பணத்தை திருடி, வளர்ப்பு அப்பாவை மீட்க திட்டமிடுகிறார். அந்த முயற்சி நடந்ததா, வளர்ப்பு அப்பா ஜானியின் அன்பை புரிந்துகொண்டாரா, பெற்றெடுத்தவர் ஜானிதான் தன் பிள்ளை என உணர்ந்தாரா என்பதை போகிறபோக்கில் சொல்லி வறட்சியாக கடந்துபோகிறது காட்சிகள்.  

அப்பா, மகன் காட்சிகளை வலுவாக வைக்க ஏற்கெனவே நாயகன் காதலித்துக்கொண்டிருப்பது போல காட்டுகிறார்கள். அப்படியிருந்தும் ஆர்னா வோரா என்ற நடிகையின் நடிப்பில் எந்த வலுவும் இல்லை. அந்த பாத்திரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கதையில் பெரிய பாதிப்பு ஒன்றுமில்லை. பரிதாபம்.

இரண்டு அப்பாக்கள் - ஒரு மகன். ஒருவர் வளர்த்தவர், இன்னொருவர் பெற்றெடுத்தவர் என உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு நிறைய இடம் இருந்தும் காட்சிகள் அதற்கேற்ப உருவாக்கப்படவில்லை. நாயகனும் மெனக்கெட்டு நடிக்கவில்லை. செட் பிராப்பர்டி போல தூணாக சமைந்து நிற்கிறார். அப்படி நிற்பதுதான் நடிப்பு என யாரோ சொல்லி அவரது வாழ்க்கையை கெடுத்திருக்கிறார்கள்.

இரு அப்பா பாத்திரங்களில் நடித்த நடிகர்களும் முடிந்தவரை நன்றாக நடிக்க முயன்றிருக்கிறார்கள். அவர்களைத் தவிர வேறு யாரும் கண்ணில் படவில்லை. வேறு யாருக்கும் எந்த வாய்ப்புமே இல்லை. இதை திரைப்படமாக அல்லாமல் வெப் சீரிசாக எடுத்திருக்கலாம்.நிதானமாக அழுத்தமாக கதை சொல்லியிருக்கலாம். சுதீர்பாபுவுக்கு அடுத்த பிளாப் படம் இது.

எந்த நம்பிக்கையில் அவர் இப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்தாரோ தெரியவில்லை. அவருடைய நம்பிக்கை, பார்வையாளர்களாகிய நமக்கு பாதகமாகிறது. இதே கதையை இன்னும் செம்மையாக்கி வேறு அறிமுகமற்ற நடிகர் நடித்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். இசை படத்தை தூக்கிப்பிடிக்க முயன்றாலும் காட்சிகள் பாதாளத்திற்கு செல்வதால் ஒன்றும் செய்வதற்கில்லை.

கோமாளிமேடை குழு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!