நாளிதழ் விநியோகம் செய்யும் சிறுவன் கற்றுக்கொள்ளும் தொழில்பாடங்கள்!
ரெயின்
ஜெப்ரி ஜே ஃபாக்ஸ்
சுயமுன்னேற்ற நூல்
கதைநூல் போல அமைந்துள்ள கட்டுரை நூல். நூலில், ரெயின் என்ற சிறுவன் தி கெசட் பத்திரிக்கையை வீடுகளுக்கு போடும் வேலையை செய்கிறான். அதில் என்னென்ன நுட்பங்களை செய்கிறான். அது பத்திரிக்கைக்கும் அவனுக்கும் என்னவிதமான பலன்களைக் கொடுத்தது என கதை விவரிக்கிறது. நூல் இரண்டு பகுதிகளாக உள்ளது. ஒன்று, ரெயின் என்ற சிறுவனின் பனிரெண்டு ஆண்டு கால பத்திரிக்கை விநியோகம் பற்றியது. அடுத்து, அவனது அனுபவங்களிலிருந்து நாம் என்னென்ன விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதை இரண்டாவது பகுதியாக கூறியிருக்கிறார்கள்.
பத்திரிக்கை விநியோகம் செய்வது மேற்கு நாடுகளில் அந்தளவு இழிவாக பார்க்கப்படுவதில்லை. அத்தொழிலை செய்து சாதித்து தொழிலதிபர்களாக பெரும் ஆளுமைகளாக வளர்ந்தவர்கள் பலருண்டு என நூலை வாசித்தால் அறிந்துகொள்ளலாம். எந்த தொழிலை செய்தாலும் அதில் முன்னேற புதுமைத்திறன்களை பயன்படுத்த வேண்டும். அந்த வகையில், ரெயின் தனது தொழிலை மேம்படுத்த சில யோசனைகளை செயல்படுத்துகிறான். அதற்கு டக்ளஸ், வெர்ன் ஆகிய நாளிதழ் நிர்வாகத்தினர் உதவுகிறார்கள். நூலில் ரெயினுக்கு எதிரியாக வருபவர்கள் இரண்டு பேர் ஒருவர் பள்ளியில் படிக்கும் மூத்த மாணவர். அடுத்து, படித்த நாளிதழுக்கு காசு கொடுக்க கணவன், மனைவி இருவர். மற்றபடி அவருக்கு வாழ்க்கையில் பெரிய தடைக்கற்கள் ஏதுமில்லை.
வானிலை சிக்கலாக இருந்தாலும் அதற்கேற்ப திட்டங்களை வகுத்து ரெயின் சாதிக்கிறான். நாளிதழ் விநியோகிப்பதில் சாதித்து விருதும் வாங்குகிறான். தி கெசட் நாளிதழ் நிறுவனம், ரெயின் மூலம் நிறைய சீர்திருத்தங்களை நிறுவனத்தில் செய்து வணிகத்தில் வெல்கிறது. அவை இயல்பானவையாக எளிமையாகவும் இருக்கின்றன.
தான் எழுதிய நூல் ஒன்றில் பேப்பர் போடும் பையன்களைப் பற்றி எழுத்தாளர் செல்வேந்திரன் விளக்கமாக ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதுவே ரெயின் என்ற நூலை வாங்கிப்படிக்க காரணமாக அமைந்தது. ரெயின் செய்யும் செயல்கள் அனைத்துமே அந்த தொழிலில் அவனுக்கு பணம் கூடுதலாக வரவேண்டியே. அதில் அவன் சாதிக்கும் விதம், பிறருக்கும் பயன் கொடுப்பதாக அமைகிறது. ரெயினுக்கு அந்தளவு ஆதரவாக இருக்கும் வெர்ன் இறந்துபோகிறார். ஆனால் அவரின் வீட்டுக்கு கூட இரங்கல் தெரிவிக்க அவன் செல்லாதது ஏன் என்று தெரியவில்லை. அவர் தனது வாட்சை கூட ரெயினுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்திருக்கிறார். அன்பு பெறுவது அல்ல. முழுமையாக அள்ளிக் கொடுப்பது என புரிந்துகொள்ள வெர்ன் பாத்திரம் உதவுகிறது.
ரெயின் தன்னுடைய நாளிதழ் விநியோகத்தில் கற்ற விஷயங்களைக் கட்டுரையாக எழுதி கல்லூரிகளுக்கு அனுப்புகிறான். அதில் அவன் தேர்வாகி ஏம்பிஏ படித்து பட்டம் பெறுவதோடு கதை முடிகிறது. நூலில் கதை முடியும்போதே நூலை முடித்திருக்கலாம். அதிலேயே நமக்கு ரெயின் செய்த விஷயங்கள் தெரிகிறது. ஆக்டிவிட்டி என்பதை தனியாக கொடுத்தாலே போதும். எதற்காக திரும்ப ரெயின் செய்த விஷயங்களை விளக்கி நாற்பது பக்கங்கள் எழுதவேண்டும். கதையின் போக்கிலேயே வாசிப்பவர்கள் ரெயின் செய்யும் விஷயங்களை, அவன் தயார்படுத்தல்களை புரிந்துகொள்ள முடிகிறது.
நன்றி
எழுத்தாளர் செல்வேந்திரன்
கோமாளிமேடை குழு

கருத்துகள்
கருத்துரையிடுக