சீனாவின் கல்வி சீர்திருத்தங்கள் - உயர்கல்வியை வளர்த்தெடுத்த தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள்!
சீனாவில், 1998 -2007 காலகட்டத்தில் மட்டும் 1022லிருந்து, 1912 கல்வி நிறுவனங்கள் என உயர்கல்விக்காக தொடங்கப்பட்டுள்ளன. வளர்ச்சி 2சதவீதம். பெய்ஜிங், தியான்ஜிங், கிழக்கு கடற்புற பகுதியான ஜியாங்சு ஆகியவற்றில் உயர்கல்வி பாராட்டும்விதமாக வளர்ந்துள்ளது. சீன அரசின் நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. சீன நகரங்களில் கல்வியில் ஒட்டுமொத்தமாக முன்னிலை பெறும் நகரமாக பெய்ஜிங் உள்ளது.
குறைந்த வளர்ச்சி கொண்ட மாகாணங்களைப் பார்ப்போம். ஷெஜியாங், குவாங்டாங் ஃப்யூஜியன், சான்டாங், ஹெனான், நிங்ஷியா ஆகியவை கல்வி வளர்ச்சியில் கீழே உள்ளன. பெய்ஜிங், சாங்காய், ஜியாங்சு ஆகிய மாகாணங்களில் ஒருவர் உயர்கல்வி கற்கும் வாய்ப்பு அதிகம். ஆனால், அதுவே ஹெனான், ஷெஜியாங், சான்டாங், குவாங்டாங் ஆகிய மாகாண மாணவர்களில் ஒருவர் கல்வி கற்க நினைத்தாலும் வாய்ப்பை பெறுவதற்கு ஏராளமான பிரயத்தனங்களை செய்யவேண்டியிருக்கும். வாய்ப்பே கிடையாது என்றல்ல. கடினம் என்று கூறவேண்டும்.
சீனாவில் உயர்கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டதே தொழில்மயமாக்கலை ஊக்குவிக்கவேண்டும் என சீன அரசு முடிவெடுத்ததால்தான். ஐம்பது எழுபதுகளில் தைவானில் உள்ள குவாமிங்டாம் அரசுடன் உள்நாட்டுப்போர் நடைபெற்றது.
தனியார் கல்வி பற்றி சிறிது பார்ப்போம். தனியார் பள்ளிகள் என்றால் உடனே அதை சமூக நீதிக்கு எதிரானதாக பார்க்கவேண்டாம். அதை நடத்துபவர்கள் தங்கள் விருப்பு வெறுப்பை உள்ளே கொண்டு வரும்போதுதான் பிரச்னையாகிறது. கல்வி பரவலாக தனியார் பள்ளிகளும் உதவுகின்றன. அவை மதவாதங்களை, இசத்தை அடிப்படையாக கொண்டிராமல் தரமாக இருந்தால் எந்த பிரச்னையுமில்லை.
2500 ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் பள்ளியை தொடங்கியது வேறு யாருமல்ல தத்துவவாதியான அறிஞர் கன்பூசியஸ். அவர் தனது வாழ்நாளில் 3 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வியைக் கற்றுக் கொடுத்தார். நாடோடியாக சுற்றித் திரிந்தபடியே கல்வியைக் கற்றுக்கொடுத்தார். இன்றுள்ள சீன கல்விச்சூழலில் செல்வாக்கு பெற்றவராக உள்ளவர் சிந்தனையாளர் கன்பூசியஸ். அவரது சமகாலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டவர்களாக சிந்தனையாளர்கள் மென்சியஸ், சுன் ஸி ஆகியோர் இருந்தனர். இவர்களும் தங்களுக்கென தனி பள்ளியைத் தொடங்கி இயங்கி வந்தனர்.
சுயி வம்சத்தில், அரசு தேசியளவில் தேர்வுகளை நடத்தியது. இதில் தேர்வாகும் மாணவர்கள் அரசு அமைப்பில் பல்வேறு பதவிகளில் அமர்த்தப்பட்டனர். தேர்வில் தேர்வானவர்களுக்கு சமூக அந்தஸ்து கிடைத்தது. கூடவே, அரசிடமிருந்து நிறைய பரிசுகளும் வழங்கப்பட்டன. சொத்துக்களும் கிடைத்தன. அன்றைக்கு தனியார் பள்ளிகளே, அரசு தேர்வுக்கு மாணவர்களை தகுதிப்படுத்தி உதவின.
டாங் வம்ச ஆட்சியில் தனியார் பள்ளிகளோடு அரசு பள்ளிகளும் போட்டி போட்டு வளர்ந்தன. பௌத்தம் செல்வாக்கு செலுத்திய காலம் என்பதால், பௌத்த விகாரங்களிலும் கல்வி வழங்கப்பட்டது. பின்னாளில் பள்ளிகளில் கல்வி மட்டுமல்லாது அரசியலும் பேசப்படத் தொடங்கியது.
அன்றைய சீனாவில் 'ஷிசு' என்ற கற்பிக்கும் முறை இருந்தது. ஒற்றை ஆசிரியர் மாணவரின் குடும்பத்தால் அழைத்து வரப்பட்டு பாடங்களை கற்பிப்பார். இவருக்கு, மாணவரின் குடும்பம் கொடுக்கும் கல்விக்கட்டணமே வாழ்வாதாரம். ஒற்றைக் குடும்பம், அல்லது கிராம மக்கள் ஆசிரியர்களை அழைத்து வந்து மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்வார்கள். பணக்கார குடும்பம் என்றால் தம் வாரிசுகளுக்கு கற்பிக்கும் ஆசிரியரை வீட்டிலேயே தனி அறை ஒதுக்கிக் கொடுத்து கற்பிக்கச் செய்வார்கள். இம்முறை 1949ஆம் ஆண்டு வரை நீடித்தது.
மேற்கு நாடுகள் சீனாவை ஆக்கிரமித்து ஆண்டபோது, கல்விமுறையில் மேற்கத்திய முறையிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சிந்தனைகள் உள்ளே வந்தன. அக்காலத்தில் பள்ளிகளும் பல்வேறு பிரிவுகளாக பிரிந்தன. ராணுவப்பள்ளிகள், வணிக ரீதியாக கற்பிக்கும் பள்ளிகள், கலைப்படிப்பை கற்பிக்கும் பள்ளிகள் என கல்வி பரவலானது.
1905ஆம் ஆண்டு சீன பல்கலைக்கழகம், ஃப்யூடன் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. 1919ஆம் ஆண்டு, சீன தொழிலதிபரான சென் ஜியாஜெங் ஷியாமென் பல்கலைக்கழகத்தை நிறுவினார். அதே ஆண்டில் நாங்காய் பல்கலைக்கழகமும் உருவாகி இயங்கத் தொடங்கியது. இந்த இரண்டு பல்கலைக்கழகங்களும் மாணவர்களிடையே பிரபலமானவை. 1931ஆம் ஆண்டில், சீனத்தில் 47 தனியார் பல்கலைக்கழகங்கள் செயல்பாட்டில் இருந்தன. அப்போது அரசு நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 56.
1947ஆம் ஆண்டில், நாட்டில் 207 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வந்தன. இதில், தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 79. குடியரசாக மாறும்வரை தனியார் தொடக்க, மேல்நிலைப்பள்ளிகள் கல்விக்கு பெரும்பங்காற்றின. ஆனால், பொதுவுடைமைக்கட்சி ஆட்சிக்கு வந்ததும் தனியார் கல்வி நிறுவனங்களை மூடியது. அரசு பள்ளிகளை தொடங்கி நடத்த தொடங்கியது. 1956ஆம் ஆண்டு, முழுமையாக அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுவிட்டன. மின்பன் என்ற பெயரில் கிராமங்களில் பள்ளிகள் தொடங்கி நடத்தப்பட்டன. இதில், விவசாயிகளுக்கு அடிப்படைக் கல்வி கற்பிக்கப்பட்டது.
அரசு நடத்திய பள்ளிகளிலும் மாணவர்களுக்கு சோசலிச கருத்தியலை அடிப்படையாக கொண்ட கல்வி கற்பிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்தை அரசே கட்டுப்படுத்தி வந்தது. 1980ஆம் ஆண்டில் தேசிய பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் விதமாக தனியார் கல்வி நிறுவனங்கள் மீண்டும் தொடங்கப்பட்டன. மாலை வகுப்புகள், வார இறுதி வகுப்புகள் என கலைகளை கற்றுத்தர முயன்றன.
1992ஆம் ஆண்டு குவாங்யா என்ற தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளி ஆசிரியர்கள் வெளிநாட்டினர். பயிற்றுமொழி ஆங்கிலம். குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வகுப்பறை, அழகான சிறிய வகுப்பறை, கணினி, டிவிகள், பியானோ என நிறைய வசதிகள் இருந்தன. எனவே, இங்கு கல்விக்கட்டணமும் அதிகம். அப்போதே உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்த பள்ளி இது. இன்றுவரை சீனாவில் தனியார் பள்ளிகள் பல்வேறு புதிய கல்விமுறைகளை சோதிப்பது, சீர்திருத்தங்களை கொண்டுவருவது என இயங்கி வருகின்றன.


கருத்துகள்
கருத்துரையிடுக