தரிசு நிலத்தை பசுமையாக்கிய சீன அரசு!
பசுமையின் திசை!
சீனாவை பொருளாதார வளர்ச்சிக்கு பாராட்டுபவர்களை விட சூழல் மாசுபாட்டிற்கு கடுமையாக விமர்சிப்பவர்களே அதிகம். ஆனால், இப்போது கூறும் செய்தி பசுமை ஆர்வலர்களுக்கு நற்செய்திதான். சீனாவில் மூன்று மாகாணங்களுக்கு சேர்ந்த தரிசு நிலத்தை போராடி பாடுபட்டு, மறுபடியும் பசுமையின் திசைக்கு திருப்பியிருக்கிறது சீன அரசு.
பல லட்சம் மக்களுக்கு வாழ்வாதாரமாக மாறியுள்ள நிலப்பரப்பின் அளவு 6,40,000 சதுர கி.மீ. ஆகும். இருபதாம் நூற்றாண்டில் வேளாண்மைக்காக பயன்படுத்திய அதீத உரப்பயன்பாடு, நிலத்தை வளம் குன்றச்செய்தது என சூழலியலாளர் ஜான் டி லியு படம்பிடித்த ஆவணப்படம், பல்வேறு தகவல்களை நமக்கு தருகிறது.
விளைச்சல் தந்த நிலம் மெல்ல தரிசாகி, அதில் இருந்து தூசிப்புயல் மஞ்சள் ஆற்றில் வந்து விழத்தொடங்கியது. இந்த ஆறு தலைநகரான பெய்ஜிங் வழியாக செல்கிறது. நிலம் மாசடைந்து ஆற்றையும் மாசுபடுத்துவதை அறிந்த சீன அரசு, இதற்கென கிரெய்ன் டு க்ரீன்(Grain to Green) என்ற திட்டத்தை உருவாக்கியது.
உலகவங்கியின் நிதியுதவியோடு திட்டம் தொடங்கப்பட்டது. மாசுபட்ட நிலத்தை மீண்டும் பழையபடி பசுமையான வளம் நிறைந்த இயல்புக்கு கொண்டு வருவதே நோக்கம் என சீன அரசு உழைத்தது. மூன்று ஆண்டுகள் திட்டமிட்டு அதிகாரிகள், விவசாயிகள், பல்வேறு மக்கள் இனக்குழுக்கள் என பரப்புரை செய்து பணியாற்றினர்.
மரம் வெட்டுதல், ஆடு மாடு மேய்த்தல், கால்நடை பண்ணைகள் அமைத்தல், மலைப்பகுதிகளில் பயிர்களை விதைத்தல் தடை செய்யப்பட்டது. நிலத்தை பசுமையாக மாற்றும் கிராமத்து மக்களுக்கு அரசு மானியத்தொகையை ரொக்கமாக வழங்கியது. இதனால், காட்டில் சென்று மரத்தை வெட்டியவர்கள், மரக்கன்றுகளை நடுபவர்களாக மாறினர். காடுகள், புல்வெளி பகுதி, பாதுகாக்கப்பட்ட பகுதியாக தரிசு நிலப்பரப்பு மாறத்தொடங்கியது.
பூச்செடிகளை நடவு செய்தல், பருப்பு, கொட்டைகளை பெறுவதற்கான மரக்கன்றுகளை நடுவது, பன்மைத்தன்மை கொண்ட மரக்கன்றுகளை நடுவது என மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 2016ஆம் ஆண்டு தொடங்கி 30,000 சதுர கி.மீ. அளவு நிலப்பரப்பை பசுமையாக மாற்றியது சீன அரசு, இச்செய்தி நேச்சர் கிளைமேட் சேஞ்ச் என்ற இதழில் ஆய்வறிக்கையாக வெளியாகியுள்ளது.
அங்கு, பாதுகாப்பு காரணமாக இருபத்தைந்து சதவீதம் நிலப்பரப்பு இயல்புக்கு திரும்பியது. எனவே, அதுவரை மாசுபாடு காரணமாக வராமல் இருந்த பல்வேறு பறவைகள், வந்து வசிக்கத் தொடங்கியுள்ளன என்பது நம்பிக்கை தருகிறது.
தரிசாக கிடந்த நிலங்கள் திரும்ப வளமையானதன் எதிரொலியாக மஞ்சள் ஆற்றில் இருந்து நிலத்தில் உறிஞ்சப்பட்ட நீரின் அளவு குறைந்துள்ளது. எனவே, இந்த வகையில் மிச்சமாகும் ஆற்று நீரை நகரத்தில் உள்ள மக்கள் தேவைக்கென பயன்படுத்திக்கொள்ள முடியும். வளமிழந்த நிலப்பரப்பை திரும்பவும் பசுமை பரப்பாக சீன அரசு மாற்றியுள்ளது, காலநிலை மாற்றம் சார்ந்தும் யோசிக்க வைத்துள்ளது. மாசுபாடு அடைந்த நிலப்பரப்பு, மஞ்சள் ஆறு ஆகியவற்றை திரும்ப நன்னிலைக்கு கொண்டு வர சீனஅரசு கொண்டு வந்த ஆக்கப்பூர்வ திட்டங்களின் வழியாக கிராமத்து மக்களின் வாழ்வும் வளம்கொண்டதாக மாறியுள்ளது.
மூலம்
A Barren land restored -helen davidson( the Guardian weekly)
ச.அன்பரசு
நன்றி
நமது அறிவியல் இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக