பறவைகள் வலசை செல்வதன் காரணம்!
அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி
எறும்பால், எவ்வளவு எடையை தூக்க முடியும்?
பத்து முதல் இருபது மடங்கு எடையைத் தூக்க முடியும். இதை அதன் எடையோடு ஒப்பிட வேண்டும். சில எறும்பு இனங்கள், தனது எடையை விட ஐம்பது மடங்கு அதிகமாக தூக்குவதும் கூட உண்டு. எறும்புகள் எடையை தூக்கிக்கொண்டு மரத்தில், அல்லது பாறையில் செங்குத்தாக ஏறுவதையும் அதன் திறமையின் பங்காக சேர்த்துக்கொள்ளுங்கள். முதுகில் டாடா நானோ காரை கட்டிக்கொண்டு உலகின் உயரமான மலைச்சிகரத்தில் நீங்கள் ஏற முடியுமா? யோசித்துப் பாருங்கள்.
சுறாக்களின் பற்கள் பற்றி கூறுங்கள்.
சுறாக்களுக்கு, அதன் வாழ்நாளில் முளைக்கும் பற்களின் எண்ணிக்கை இருபது ஆயிரம். ஆறு முதல் இருபது வரிசையில் பற்கள் இருக்கும். முன்னே உள்ள பற்கள் இரையை பிடித்து கடித்து துண்டாக உதவுகிறது.
மீன்களின் வயதை எப்படி அறிவது?
அதன் செதில்களை வைத்து அறியலாம். மரங்களின் வயதை எப்படி அறிகிறோம். அதன் உட்புறத்திலுள்ள வளைய வடிவம் உதவுகிறது அல்லவா? அதே உத்திதான் இங்கும் உதவுகிறது.
மீன்கள் செல்லும் திசையை சட்டென மாற்றிக்கொள்வது எப்படி?
அப்படி மாற்றிக்கொள்ளாவிட்டால் சட்டியில் குழம்பாக கொதித்துக்கொண்டிருக்கும். மீன்கள், திசையை அறிய தப்பிக்க நீரில் ஏற்படும் அழுத்தங்களை கவனிக்கின்றன. அதன்படி சட்டென முடிவெடுத்து எதிரிகளிடமிருந்து தப்புகின்றன. இசிடியோபோரஸ் பிளாடைப்டெரஸ் என்ற மீன் மணிக்கு 95 கி.மீ வேகத்தில் நீந்துகிறது. இதற்கடுத்து, துன்னஸ் தைன்னஸ் என்ற மீன், மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் நீந்துவதாக அறிவியலாளர்கள் தகவல் தெரிவிக்கிறார்கள்.
நிலத்தில் வேகமாக செல்லும் பாம்பு?
டெண்ட்ரோஸ்பிஸ் பாலிலெபிஸ் - பிளாக் மாம்பா என்ற பாம்பு நான்கு மீட்டர் நீளம் கொண்டது. மணிக்கு பதினொரு கி.மீ வேகத்தில் செல்லுகிறது. இரையை துரத்தும்போது இதன் ஆக்ரோஷத்தை பார்க்க முடியும்.
நிலத்தில் சிறிய வகை முதலை மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.
அனைத்து பறவைகளும் பறக்குமா?
இந்த கேள்வியிலேயே பதில் இருக்கிறதே? சில பறவைகள் இறக்கைகள் இருந்தாலும் பறக்கும் திறன் இருக்காது. எடுத்துக்காட்டு பெங்குவின், ஈமு ஆகியவை. தீவில் வாழும் பறவை இனங்கள், எதிரிகளே இல்லாத நிலையில் வாழ்ந்து வரும். இயற்கையில் ஒரு உயிரினம் பிழைப்பதற்கான குறைந்தபட்ச திறனேனும் இருக்கும். எனவே, எதிரிகள் இல்லாத பறவைகள் சொகுசாக வாழ்ந்து பழகி, பறக்கும் ஆற்றலை காலப்போக்கில் இழந்துவிட்டன.
பறவைகளின் உடலிலுள்ள நிறங்களுக்கு என்ன காரணம்?
நிறமிகள்தான் காரணம். எதற்கு என்றால், பறவைகள் எளிதாக பார்க்க முடிந்தால் அவை எதிரிகளிடம் மாட்டி உயிரை விட நேரும். எனவே, அவற்றைப் பாதுகாக்க சிறகில் நிறங்கள், உடலில் மாறுபட்ட நிறங்கள் இருக்கும். சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் ஆகிய நிறங்களுக்கு, லிப்போகுரோம் என்ற நிறமி மூலம். கருப்பு, பழுப்பு, சாம்பல் நிறத்திற்கு மெலனின் என்ற நிறமி அடிப்படை.
பறவைகள் வலசை செல்வதற்கு காரணம் என்ன?
உடல் ரீதியாக ஏற்படும் வேதியியல் மாற்றங்கள், சூழல் மாற்றங்கள் என இரண்டையும் காரணமாக காட்டலாம். சூரிய வெப்பம் குறையும்போது பறவைகளின் உடலிலுள்ள பிட்யூட்டரி, அட்ரினல் சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. புரோலாக்டின், கார்டிகோஸ்ட்ரோன் ஆகிய வேதிப்பொருட்கள் சுரக்கின்றன. இதன் விளைவாகவே, பறவைகள் வலசை செல்கின்றன. அதற்கு தேவையான கொழுப்பு சக்தி, பறவைகளின் தோலில் உள்ளன. மேற்சொன்ன வேதிப்பொருட்கள் பறவைகளை உடல், உள்ள ரீதியாக பாதிக்கின்றன. வலசைக்கு தூண்டுகின்றன.



கருத்துகள்
கருத்துரையிடுக