திரைப்பட திருட்டுக்கு எதிராக தனிநபராக போராடும் நாயகன்!

 



 

நேடு விடுதலா
ஆசிப்கான், மௌர்யானி
தெலுங்கு

திரைப்படங்களை சட்டவிரோதமாக வலைத்தளங்களில் வெளியிடுவதைப் பற்றிய படம். அவ்வளவே. கதை எளிமையானது. அதை சொன்ன விதத்தில் எந்த புதுமையும் இல்லை. அப்படியே நேர்கோட்டு வடிவம். சலிப்பு தட்டுகிற படம்.

படத்தில் நாயகன், கல்லூரி படிப்பை 99 சதவீத மதிப்பெண்களைப் பெற்று முடிக்கிறார். அடுத்து என்ன செய்வது என தெரியாத நிலையில், அப்பாவின் சிபாரிசின் பெயரில் ஹெச்எம் டிவியில் வேலைக்கு சேர்கிறார். அங்கு அவருக்கு சினிமா நிகழ்ச்சிப்பிரிவில் வேலை செய்யக் கூறுகிறார்கள். அப்படி வேலை செய்யும்போது, நடக்கும் சம்பவம் ஒன்றால் பாதிக்கப்பட்டு அதை தீர்க்க முயல்கிறார். இறுதியில் என்னானது என்பதே கதை.

தெலுங்கு திரைப்படங்களை திருட்டுத்தனமாக சிதைப்பவர்கள், அதன் உள்ளேயே இருக்கிறார்கள் என்று சொல்கிறது படம். ஆனால் அப்படி திரைப்படத்திருட்டை காட்டியவர்கள் அதை சுவாரசியமாக சொல்ல மறந்துவிட்டார்கள். இதனால் படம் எங்கெங்கோ சென்று எப்படியோ முடிகிறது. படத்தில் வேகமாக நடக்கும் விஷயம், நாயகி நாயகனை காதலிப்பதுதான். நடிகை மௌர்யானி அழகாக இருக்கிறார். ஆனால், அவர் நடிப்பதற்கு பெரிய வாய்ப்பில்லை. அவரது பாத்திரத்தை சமூக வலைத்தள இன்ப்ளூயன்சர் என்று கூறலாம். தனது ஒட்டுமொத்த வாழ்க்கையை சமூக வலைதளத்தில் அடகு வைத்து, அதில் வரும் பணத்தை செலவு செய்கிறார். கடைகளில் வாங்கும் பொருட்கள், உடுத்தும் ஆடை என எதற்கும் காசு கொடுப்பதில்லை. அனைத்தையும் விளம்பரம் செய்து கடைக்காரர்களிடம் காசு வாங்குகிறார். தனது அந்தரங்க வாழ்க்கை பகிரங்கப்படுவது பற்றி அவர் கவலையே கொள்வதில்லை. என்ன மாதிரியான பாத்திரம் இது?

தொழில்வாழ்க்கை, அந்தரங்கம் வேறு வேறு என அறியாத லூசுப்பெண் பாத்திரம் இது. நாயகன், நாயகி என இருவருக்குமான காதல் காட்சிகளில் பெரிய புதுமை ஏதும் இல்லை. மிரட்டல், பிறகு காதல் வந்துவிடுகிறது. படத்திற்கு உழைத்திருப்பவர் ஒரே ஒருவர்தான். அவர்தான் இசையமைப்பாளர். ஒட்டுமொத்த படத்தையும் அவர் மட்டுமே காப்பாற்ற முடியாதே?

சொல்லும் செய்தி மட்டுமே நன்றாக இருந்தால் போதும் என இயக்குநர் முடிவெடுத்துவிட்டார். எனவே, படத்தை சீரியல் அல்லது டெலி பிலிம் அளவுக்கு எடுத்திருக்கிறார். பெரிதாக சொல்ல ஏதுமில்லை. திரைப்படத் திருட்டை பத்திரிகையாளராக நாயகன் வேலை செய்து தனியாளாக நின்று ஒழிக்கிறார். இதற்கு ஒட்டுமொத்த காவல்துறையே அவருக்கு உதவுகிறது. எதுவுமே நம்புகிறமாதிரி இல்லை.

சினிமா திருட்டு பற்றி மட்டுமே பேசிவிட்டு திரையரங்கில் நடக்கும் கொள்ளையைப் பற்றி மௌனமாக கடக்கிறது படம். இருதரப்பிலும் வாதங்களைப் பேசவேண்டும் அல்லவா? திருட்டைத் தடுக்க வலைத்தளங்களில் காசு கட்டி பார்க்கும் முறையை திரைப்படத் துறையினரே அறிமுகம் செய்யலாமே?  குறைந்த விலையில் அனைத்து தரப்பு மக்களும் படம் பார்க்கலாமே?

படத்தின் இடையே சைவ உணவு பிரச்சாரம் வேறு நடக்கிறது. இதெல்லாம் காமெடி என்ற பெயரில் நடக்கும் வன்முறையன்றி வேறல்ல.

கோமாளிமேடை குழு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!