ஜோசப் ஸ்டாலின், லெனின் கனவான சோவியத் யூனியனை எதிரிகளை களையெடுத்து கட்டமைத்த கதை!

 



சர்வம் ஸ்டாலின் மயம்
மருதன்
கிழக்கு பதிப்பகம்

ஜோசப் ஸ்டாலின், சோவியத் ரஷ்யாவை எப்படி வளர்த்தார், எதிரிகளை உளவுத்துறை மூலம் கண்டுபிடித்து ஒழித்தது எப்படி, உண்மையில் அவர் சர்வாதிகாரிதானா என்பதை நூல் விளக்கிச்சொல்கிறது.

139 பக்கங்களைக் கொண்ட சிறிய நூல்தான். நூலின் தொடக்கத்தில் ட்ராட்ஸ்கி என்பவரை உளவுத்துறை அதிகாரி, ஐஸ்கத்தியால் குத்திக் கொல்கிறார். ஏன் அப்படி கொன்றார் என்ற கேள்வியோடு தொடங்குகிறது கட்டுரைநூல், ஒரு புனைவு நூலைப்போல கட்டுரை நூலை கட்டமைத்திருக்கிறார்கள். ஆனால், நூல் இறுதிவரை அப்படி செல்லவில்லை. நூலில் ஸ்டாலின் செய்த போராட்டங்கள் ஓரளவுக்கு கூறப்பட்டுள்ளன. அவரது தனிப்பட்ட வாழ்க்கை அதிக முக்கியத்துவம் தரவில்லை. அதை தனியாக பிரித்து விவரித்திருக்கலாம். அவர் எழுதிய நூல்களோ, பேசிய உரைகளோ, அல்லவது அவரைப்பற்றி உள்நாட்டில், வெளிநாட்டில் எழுதப்பட்ட நூல்களைப் பற்றியோ கூட எந்த குறிப்புகளும் இல்லை.

ஸ்டாலின் மரணம் கூட சட்டென நடந்தது போன்று இருக்கிறது. எதற்கு இந்த அவசரம் என நூலாசிரியர் மருதன்தான் விளக்கி கூறவேண்டும்.

லெனின், துப்பாக்கியால் சுடப்பட்டு 1924ஆம் ஆண்டு இறந்துவிடுகிறார். அதற்குப் பிறகு ஸ்டாலின்தான் சோவியத் யூனியனை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வருகிறார். அவர் வாழ்க்கை முழுவதும் ட்ராட்ஸ்கி, புகாரின் ஆகியோரின் அவதூறுகள், இழிவுகள், ஆதரவாளர்களின் வதந்திகள் என போராடி வந்திருக்கிறார். நூல் முழுக்க ட்ராட்ஸ்கி நிறைந்திருக்கிறார். எதற்காக மெக்சிகோவில் வாழ்ந்தவரை கண்டுபிடித்து கொன்றார்கள் என்று இறுதியாக அறிந்துகொள்கிறோம்.
மக்களுக்கு, நாட்டிற்கு எதிராக இருந்தவர்களை தேடிப்பிடித்து களையெடுப்பதை ரஷ்யா இன்றுவரை செய்து வருகிறது. இதற்கான விதை சோவியத் காலத்திலேயே விழுந்துவிட்டது.

ஸ்டாலின் செய்த புரட்சிகர மாற்றங்களை விட அவர் செய்த களையெடுப்புகளை மட்டுமே நிறைய படிப்பது போல தோன்றுவது ஏனோ? ஐஸ்கத்தி சம்பவம் தொடங்கி ஸ்டாலின் மீது ஒருவித அச்ச உணர்வை தோற்றுவிப்பதுதான் நூலாசிரியரின் நோக்கமோ என்னவோ?

ஸ்டாலின் நூலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, ஆட்சியாளர் ஸ்டாலின் என்பவர் ஒரே ஒருவருக்கு மட்டுமே அடிபணிந்தார். கட்டுண்டார். அது லெனின் மட்டுமே. லெனினுக்கு பிறகு அவரது மனைவி, நண்பர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் சொல்வதையெல்லாம் காதுகொடுத்து கேட்கவில்லை. ஏனெனில் அவருக்கு போல்ஷ்விக்குகள் பற்றி தெரிந்தது. அக்கருத்துகளைப் பற்றிய பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார். சிறை சென்றிருக்கிறார். எனவே, யாருக்கும் அடிபணிந்து சொல்வதை செய்யவேண்டுமென்ற அவசியமில்லை என துணிந்து நின்றிருக்கிறார். அவருக்கு வாழ்க்கையில் பெரிய அதிர்ச்சி என்னவென்றால், அவரைப் பற்றி லெனின் கடிந்து எழுதிய கடிதம் ஒன்றுதான். மற்றபடி தனது மகனை ஜெர்மனி பிடித்து பேரம் பேசியபோது கூட பெரிதாக வருந்தியதாக தெரியவில்லை. ஒரே வார்த்தையில் நான் யாரிடமும் பேரம் பேசுவதில்லை என சொல்லி ஒற்றை வாக்கியத்தில் பேச்சை முடித்துக்கொள்கிறார்.

ஆம் அவர் எதிரிகளிடம் சமரசமும் செய்துகொள்ளவில்லை. பேரமும் பேசவில்லை. வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொண்ட அவரது குணம் மக்களுக்கு பிடித்துப்போனது. மக்களின் ஆதரவுடன்தான் சோவியத் யூனியன் உருவானது. தலைவர்களின் பேச்சால், உரையால் மட்டுமல்ல. ட்ராட்ஸ்கி, புகாரின் ஆகியோரின் கருத்துகள் எடுபடாமல் போனதற்கான காரணம் பற்றிய அத்தியாயங்கள் சிறப்பாக உள்ளன.

அரசியல் தலைவர் நேரடியாக மக்களிடம் சென்று பேசுவதற்கும், அறையில் உட்கார்ந்து மனம்போன போக்கில் எழுதி குவித்து ஒருவரை அவதூறு செய்வதற்கும் வேறுபாடு உள்ளதல்லவா? மக்களுக்கு ஸ்டாலின் பற்றி தெரியும். அவர்களை அவரை பார்த்திருக்கிறார்கள். அவர் மே தினத்திற்காக தொழிலாளர்களோடு ஒன்றாக நின்று போராடியிருக்கிறார். சிறை சென்றிருக்கிறார். சைபீரியாவில் உள்ள சிறையில் அடைத்து வைத்திருக்கிறார். அப்படியும் தப்பித்து வந்து போராட்டங்களை ஒருங்கிணைத்திருக்கிறார். அவரது எதிரிகளான பிறர் இப்படியான எந்த மக்கள் ஆதரவு செயல்பாடுகளையும் செய்யவில்லை. ட்ராட்ஸ்கியின் சிந்தனைகள் எழுத்துகள் அவரை சிந்தனைவாதி என்ற வகையில் மட்டுமே அடையாளப்படுத்தியதன் காரணம் இதுவாகவே இருக்கமுடியும்.

கிழக்கு பதிப்பகம், வலதுசாரி மதவாத சிந்தனைகளை ஆதரிக்க கூடியது. எனவே, இடதுசாரி இயக்கங்கள், ஆளுமைகள் பற்றிய நூல்கள் வெளியிடப்பட்டாலும் அதையும் கவனமாக வாசிக்கவேண்டியது முக்கியம்.

கோமாளிமேடை குழு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!