மதவாத சமூகம் புறக்கணித்த தலித்துகளின் சமையலறை!
தலித் கிச்சன்ஸ் ஆப் மராத்வடா
சாகு படோல்
ஆங்கிலம்
ஹார்பர் கோலின்ஸ்
இந்த நூலில், எழுத்தாளர் சாகு படோல் மும்பையில் உள்ள தலித் மக்களின் வாழ்க்கை, சாதிமுறை, கொண்டாடும் பண்டிகைகள், நம்பிக்கை, உணவுமுறை, அதை செய்வது எப்படி என ஏராளமான தகவல்களைக் கொண்டு விளக்கியுள்ளார்.
பெரும்பாலும் அசைவ உணவுகள்தான். சைவ உணவு செய்முறைகளும் இறுதியில் உள்ளன. அதை தவிர்த்துவிடுவோம். அசைவ உணவுகளை எப்படி சமைக்கிறார்கள் என்பதே நம்மை பெரிதும் ஆச்சரியப்படுத்துகிறது. அசைவ உணவு செய்முறைகளில் பலவும் மிகச்சில பொருட்களை வைத்தே செய்கிறார்கள். நிறைய அசைவ பொருட்களை சமைக்க நீர் கூட பயன்படுத்தப்படுவதில்லை. சட்டியில் கறியை போட்டு அதை சூட்டில் வறுப்பதே பெரும்பாலான உணவு செய்முறையாக உள்ளது. விலங்கின் ரத்தத்தை ஊற்றி அதை வேக வைக்கும் முறை தொடங்கி, தலித்துகளின் உணவுமுறை பற்றிய வியப்பு தொடங்குகிறது.
மும்பையில் உள்ள சாதிமுறை, சாதி மேலாதிக்கம், தெய்வ வழிபாடு பற்றியும் விரிவாக கூறியுள்ளார். அவர்களின் வழிபாட்டில் தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் தெய்வ கதைகளும் உள்ளன. சாதிமுறையில் தலித்துகளுக்கும் நிறைய பிரிவினைகள் உள்ளன. நூலில், மகர், மங் என இரு தலித் பிரிவுகளின் உணவுப்பழக்கவழக்கங்கள், பண்டிகை பற்றி மட்டுமே விளக்கப்பட்டுள்ளது. மகர்கள், பெரும்பாலும் பௌத்த மதத்தை பின்பற்றுபவர்கள். அவர்கள் பன்றி இறைச்சியை உண்பதில்லை. தலித்துகளாக இருந்தாலும் மேல்சாதியினரின் தெய்வங்களை வணங்கத் தொடங்கியுள்ளதை தகவல்கள் வழியாக அறிய முடிகிறது. இறைச்சியில் குதிரை இறைச்சியை மட்டுமே இரு தலித் பிரிவினரும் தவிர்க்கிறார்கள். மற்ற இறைச்சிகளை உண்ணுகிறார்கள். மாடு, ஆடு, கோழி, தேனீ என எதை கொடுத்தாலும் அதை அக்கு அக்காக பிரித்து உறுப்புகளுக்கு ஒரு உணவு செய்முறையை வைத்திருக்கிறார்கள். மாட்டின் கொம்பைக்கூட பயன்படுத்துகிறார்கள். வீணாக்கிவிடுவதில்லை.
தலித்துகளுக்கு பெரும்பாலும் கிடைக்கும் மேல்சாதியினர் வீட்டு உணவுகள், கெட்டுப்போனவையாக சாப்பிட்டு மீந்துபோனவையாகவே உள்ளன. அப்படி கிடைக்கும் உணவுப்பொருட்களில் ஒன்றாக மோரை வைத்துக்கூட நான்கு வகையான உணவுகளை உருவாக்குகிறார்கள். சாப்பிடுகிறார்கள் என்றால் சாமர்த்தியத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.
விலங்குகளை விட இழிய வாழ்க்கை. இப்படியான நிலையில் வாழும் தலித் உணவுமுறைகளை ஐயர்/ஐயங்கார் ஆதிக்கம் செலுத்தும் ஊடகங்களில் எப்படி எழுதுவார்கள் அல்லது ஒளிபரப்புவார்கள்? மேல்சாதியினர் கொடுக்கும் மீந்துபோன உணவுகளை சாப்பிட்டு உயிர்வாழும் நிலை. நிலமில்லாத நிலையில் பசுக்களை வளர்க்க முடியாது. அப்படியே வளர்த்தாலும் அதையும் கொள்ளையடிக்க சாதி வெறியர்கள் ஏதேனும் முயற்சி செய்கிறார்கள், ஏதேனும் வாய்ப்பு தேடி சாதி இழிவு செய்துகொண்டே இருக்கிறார்கள். சாகு படோல், தலித் உணவுமுறைகளை நிறைய பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பினாலும் மேல்சாதியினர் அனைத்து பத்திரிகைகளையும் ஆக்கிரமித்து உள்ளதால் எதுவும் அச்சுக்கு வரவில்லை. பிறகுதான் உணவு செய்முறைகளை நூலாக தொகுத்து மராத்தில் 2015இல் எழுதினார். பிறகு, ஆங்கில மொழிபெயர்ப்பாளர் மூலம் நூல் ஆங்கிலத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
ஒரு விலங்கை அறுத்தால், அதிலுள்ள அனைத்து உறுப்புகளையும் வீணாக்காமல் சமைப்பது சாதாரண விஷயமல்ல. விலங்கை அறுத்து தோலை பதப்படுத்தி உரிமையாளருக்கு கொடுக்கவேண்டும். தோலைப் பதப்படுத்த குறிப்பிட்ட முறைகள் உள்ளன. அதையும் தலித்துகள்தான் செய்கிறார்கள். பன்றியை வளர்ப்பது, தேனடையை எடுத்து சமைப்பது, ரத்தத்தை வறுத்து வேக வைத்து உண்பது என நிறைய சுவாரசியங்களை நூல் வழங்குகிறது.
சாகு படோல் நூல் பற்றி பிபிசி மட்டுமே காணொளி ஒன்றை வெளியிட்டது. மற்ற ஊடகங்கள் அவரின் நூலைப் பற்றி எழுதினார்களா இல்லையா என்று தெரியவில்லை. ஏதாகிலும் சரி. ஆர்வம் இருப்பவர்கள் நூலை வாங்கி வாசிக்கலாம். சாதி, உணவு, அதிலுள்ள அரசியல், சமூக பழக்கவழக்கம், தெய்வ வழிபாடு என நிறைய விஷயங்களை புரிந்துகொள்ள உதவுகிறது.
கோமாளிமேடை குழு


கருத்துகள்
கருத்துரையிடுக