சீனாவின் கல்விச் சீர்திருத்தங்கள்- பள்ளியில் கற்பிக்கப்படும் பாடங்கள்!
சீனாவில் தொடக்கப்பள்ளி முடித்ததும் உயர்கல்விக்காக தேசிய தேர்வை எழுத வேண்டும். அதை வைத்துத்தான் மாணவர்கள் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். தேசிய தேர்வில் சீனமொழி, கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், அரசியல் அறிவியல், உடற்பயிற்சி ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
சீனாவில், பெய்ஜிங், ஷாங்காய் ஆகிய நகரங்களில் உள்ள பள்ளிகள் சிறப்பானவை. வெளிநாட்டிலுள்ள பள்ளிகளைப் போல வசதிகளைக் கொண்டவை. இவற்றுக்கு அடுத்த நிலையில் வூகான், செங்டு, ஷியான் ஆகிய நகரிலுள்ள பள்ளிகள் இருக்கும். அனைத்து நாடுகளைப் போலவே கிராமங்களிலுள்ள பள்ளிகளில் வசதிகள் குறைவாக உள்ளன. இந்த வேறுபாடுகளும், இப்போது மெல்ல குறைக்கப்பட்டு வருகிறது.
நடுநிலைப்பள்ளியில் என்னென்ன பாடங்கள் கற்பிக்கப்படும் என்று பார்ப்போம். சீனமொழி, கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, அரசியல், புவியியல், தகவல் தொழில்நுட்பம், வெளிநாட்டு மொழிகள், உடற்பயிற்சி, ஆரோக்கிய கல்வி, ஓவியம், இசை, இனக்குழு செயல்பாடுகள், அறக்கல்வி.
உயர்கல்வியைப் பொறுத்தவரை மாகாணங்களில் நடைபெறும் தேசிய தேர்வுகள் முக்கியமானவை. இதைப் பொறுத்தே மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியும். தேர்வில் பெறும் தகுதி, மதிப்பெண் ஆகியவை அவசியத் தகுதி. அரசின் தேசிய தேர்வுகளில் நாற்பது சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுவார்கள். இந்த கடினமான தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றால் மட்டுமே பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க முடியும்.
சீன உயர்நிலைக் கல்வியில் தொழில்நுட்ப கல்வியோடு ஆங்கிலம், பிற நாட்டு மொழிகளையும் கற்கலாம். சில பள்ளிகளில் ஜெர்மன் மொழியும் கூட கற்றுத் தருகிறார்கள். இவையெல்லாமே முறையான ஜெர்மன் நாட்டு பல்கலைக்கழகங்களோடு ஒப்பந்தமிட்டு இயங்குபவை. தனியார் கல்வி நிறுவனங்களும் மொழிகளைக் கற்றுத்தருகின்றன. பிள்ளைகளை படிக்க வைத்து வேற்றுமொழி கற்றுக்கொடுத்து அயல்நாடுகளுக்கு அனுப்ப சீனப் பெற்றோர் பெரிதும் முயல்கிறார்கள்.
அரசின் இந்த தேர்வு மட்டுமே ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிக்குமா என்றால் அப்படியெல்லாம் கிடையாது. வசதியுள்ளவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்க ஐஇஎல்டிஎஸ் தேர்வைக் கூட எழுதலாம். ஆங்கிலத்தில் சரளமாக பேசினால், எழுதினால் போதும். அரசின் தேசிய தேர்வு மதிப்பெண்ணைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
2018ஆம் ஆண்டு சீனாவில், அரசின் தேசிய தேர்வை எழுதிய இருபதாயிரம் மாணவர்களை அணுகிய எஸ்சிஎம்பி என்ற நாளிதழ் பல்வேறு கேள்விகளைக் கேட்டது. அந்த ஆய்வில், மாணவர்கள் அத்தேர்வை முன்னுரிமை கொண்டதாக கருதவில்லை என்ற தெரியவந்தது.
தேர்வு முதலில் அச்சுறுத்தல் கொண்டதாக, மன அழுத்தம் தருவதாக இருந்தாலும் இப்போது சீர்திருத்தங்கள் மூலம் சற்றே நிலைமை மாறியுள்ளது. பின்தங்கிய வர்க்கத்தைச் சேர்ந்த பலரும் உயர்கல்வியை அடைய முடிகிறது. குறிப்பிட்ட கல்விக் கட்டணத்தை செலுத்த முடியும் நிலையில் மக்களும் உள்ளனர் என்பது ஆறுதலான செய்தி. சோசலிச கருத்தியல் கல்வி என்றாலும் நாட்டு வளர்ச்சிக்கு உதவியுள்ளது என்பதைக் கவனிக்கவேண்டும்.
2015ஆம் ஆண்டு மேட் இன் சீனா 2025 என்ற திட்டத்தை சீன அரசு அறிமுகப்படுத்தியது. இதில், ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, உற்பத்தித்துறையை நவீனமயமாக்கல் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. 2017ஆம் ஆண்டில் அரசு கௌன்சில், ஏழு வயது மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, கணினி கோடிங் ஆகியவற்றை கற்றுத்தரும் வகையில் பாடங்களை மாற்றி அமைத்தது. இதற்காக 80 தனியார் கல்வி அமைப்புகள் அரசுடன் இணைந்துள்ளன.
சீனாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கென ஏராளமான பட்டயப்படிப்புகளை நடத்துகின்றன. இவற்றை மாணவர்கள் ஆர்வமுடன் படித்து தேர்ச்சி பெறுகிறார்கள். இந்த சான்றிதழை பள்ளி, பல்கலைக்கழகத்தில் சேரும்போது பயன்படுத்திக்கொள்ளலாம். மதிப்பெண்ணை வைத்து பள்ளி, பல்கலைக்கழகங்களில் சேர முடியாதபோது, கூடுதலாக என்ன கற்றுள்ளோம், என்ன போட்டிகளில் பங்கேற்று சாதித்துள்ளோம் என்பதைக் கூறலாம்.
சீனாவில் ஓய்வு பெறும் வயது தற்போது மாற்றப்பட்டுவிட்டது. முன்பு, ஐம்பது தொடங்கி ஐம்பத்தைந்து வயது என இருந்தது. ஓய்வு பெற்றவர்களுக்கு ஓவியம்,நடனம், இசை என பல்வேறு திறன்களை கற்றுக்கொடுப்பதில் அரசு முன்னிலை கொடுத்தது. இப்படியான திறன்களை சொல்லிக் கொடுப்பதில் தனியார் அமைப்புகளுக்கும் முக்கியப் பங்குண்டு.
சீனாவில் திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் 10 மில்லியன் மாணவர்களுக்கு மேல் பயன் பெற்றுள்ளனர். பீகிங், ஃபுடான், ஷாங்காய் ஜியோடாங் ஆகிய பல்கலைக்கழகங்கள் இணைய வழி பட்டய படிப்புகளை வழங்கி வருகின்றன. 2018ஆம் ஆண்டு 490 இணைய வழி படிப்புகள், 2020ஆம் ஆண்டி்ல 3000 ஆக அதிகரித்துள்ளதே அதன் வளர்ச்சியைக் கூறும் சான்று.
சீனாவில் 2018ஆம் ஆண்டுதான் இணைய வழி படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதை எம்ஓஓசி என சுருக்கமாக அழைத்தனர். அனைவராலும் நேரடியாக பள்ளி, பல்கலைக்கழகம் வந்து கல்வி கற்க முடியாது. அவர்களது சமூக, பொருளாதார சூழல் அப்படியிருக்கலாம். ஆனால் கல்வி கற்காமல் இருப்பது மாகாண ரீதியாக, மத்திய ரீதியாக பெரும் இடைவெளியே உருவாக்கும். கல்லாமை தனிநபர் ரீதியாகவும் வேலை பெறுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையும் கூட.
கல்வி என்பது வேலை பெறுவதற்கு உதவுவது என்பது பொதுவான மனப்போக்கு. அப்படி எண்ணுவது முழுக்க தவறு என்று கூறமுடியாது. எப்போதும் நிலத்தில் காலூன்றியபடி கனவு காண்பது நல்லதுதானே? சீன அரசு, 2017ஆம் ஆண்டு பதிமூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் வயது வந்தோருக்கான கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.
விவசாயிகள், தொழிற்சாலை பணியாளர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் பலருக்கும் அடிப்படையான கல்வி என்பது தேவை. அப்போதுதான் நகரம், கிராமம் என வேறுபாடுகள் இன்றி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும். அந்த வகையில்
2011ஆம் ஆண்டில், வயது வந்தோருக்கான கல்வித் திட்டத்தில் 10.4 மில்லியன் இணைந்தனர். கல்வியை எப்படி வழங்குவது, அதற்கான வளங்கள் என்ற விவகாரத்தில் நிறைய சவால்கள் உள்ளன. இக்கல்வி திட்டத்தில் பெரும்பாலானவை அரசு வழங்குவதுதான். இதில் தனியார் நிறுவனங்களும் கூட இணைந்துள்ளன. அவை பெறும் கட்டணங்களும் மலிவாக உள்ளதுதான் ஆச்சரியமானது.
சீனாவில் நகரங்களில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகம். கிராமங்களில் வேலை செய்பவர்களோடு ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகம். ஆசிரியர்களின் சம்பளம் குறைவுதான். அதிலும் ஒருபகுதி, அவர்களின் திறன் சார்ந்து சோதித்து வழங்கப்படுகிறது. நிறைய பள்ளிகளில் அர்ப்பணிப்பான ஆசிரியர்கள், தங்களை மேம்படுத்திக்கொண்டு பிள்ளைகளை மேலே கொண்டு வர இயல்பான கற்றலை ஊக்குவிக்க முயன்று வருகி்ன்றனர்.




கருத்துகள்
கருத்துரையிடுக