சீனாவின் கல்விச் சாதனை! - கல்வி சீர்திருத்தங்கள்
சீனா, 1978ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் சந்தை பொருளாதார சக்தியாக மாறத் தொடங்கியது. அதுவரை நாடு வெறும் சோசலிச கருத்தியலைக் கொண்டதாக மட்டுமே இருந்தது. முன்னாள் அதிபர் டெங் ஷியோபிங்கின் காலத்தில் கல்வி, மத்திய அரசிடமிருந்து மையப்படுத்தாததாக, தனியார்மயமாக, சந்தைமதிப்பு கொண்டதாக மாறியது.
மாவோவின் சீடராக டெங் அறியப்பட்டாலும், காலத்திற்கேற்ப நாட்டை மாற்றவேண்டும் என்ற சீர்திருத்த எண்ணம் கொண்டவர். இன்றும் கூட சீனாவில் அவருக்கு சிலைகளோ, கூறிய மேற்கோள்களோ கூட இல்லை. அதாவது அவற்றை வெளிப்படையாக பார்க்க முடியாது. ஆனாலும் முன்னாள் அதிபர் டெங் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்ற முக்கியமான தலைவர் என்பதை யாரும் மறுப்பதில்லை.
சீன அரசு, 1949ஆம் ஆண்டு, வணிக நோக்கம் கொண்ட கல்வி அமைப்புகளை தடை செய்தது. சோசலிச கல்வியை அடிப்படையாக கொண்டு சமூகத்தை வலுவாக்க முயன்றது.
மாவோவின் கலாசாரப் புரட்சி காரணமாக சீன மாணவர்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேறினர். வெளிநாடுகளில் கல்வி பயின்றனர். அரசின் அத்துமீறல் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லாதவர்களுக்கு கல்வி கற்பிக்கவேண்டும் என டெங் நினைத்தார். எனவே, கல்வி சீர்திருத்தங்களி்ல அப்படியான பிரிவினரையே முதன்மையாக இலக்காக நிர்ணயித்தார். கலாசார புரட்சி காரணமாக, ஒரு முழு தலைமுறையே கல்வி கற்காமல் இருந்தது. இத்தகைய மூர்க்கமான செயல்பாடுகள் கல்வியை மட்டும் பாதிக்கவில்லை. கல்வி அமைப்புகள், கல்வியாளர்களையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருந்தது.
கலாசார புரட்சி காலத்தில் கல்வி கற்பிப்பது ஆணுக்கான பணியாக இல்லை. அது பெண்களுக்கானது என கருதப்பட்டது. மாவோவின் இறப்போடு கலாசார புரட்சி வீழ்ச்சிக்கு உள்ளானது. அவரின் மனைவி ஜியாங் சியின் ஆதரவில் இருந்த நான்கு அதிகார மையங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இதற்குப்பிறகுதான், 1977ஆம் ஆண்டு, டெங் அதிகாரத்தைக் கைப்பற்றினார். அடுத்த முப்பது ஆண்டுகளில் சீனா, ஏராளமான சீர்திருத்தங்களை கண்டது.
தேசிய அளவிலான தேர்வு திரும்ப கொண்டு வரப்பட்டு, சோதித்து பார்க்கப்பட்டு 1978ஆம் ஆண்டு ஏற்கப்பட்டது. இத்தேர்வு வழியாக, குடு்ம்ப பின்புலம் இல்லாத மாணவர்களும் தேர்வெழுதி பல்கலைக்கழகத்திற்குள் படிக்கும் வாய்ப்பைப் பெற்றனர். கட்சியில் அதிகாரம் பெற்றவர்களின் பிள்ளைகள், இத்தேர்வை எழுதி மட்டுமே பல்கலைக்கழகத்தில் படிக்க அனுமதி பெற்றார்களா என்பதில் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. இன்றைய சீன அதிபர் ஷி ச்சின்பிங் பொதுத் தேர்வு வழியாக பல்கலைக்கழகத்திற்கு சென்றவர்தான். ஆனால், அவரது குடும்பம் செல்வச்செழிப்பானது.
அன்றைக்கு இருந்த நிலைப்படி படித்தவர்கள், படிக்காதவர்கள் என பாகுபாடு தீவிரமாக இருந்தது. கல்வி பயிலும் செலவு அதிகம். அதை ஏழைகள் எளிதாக அணுக முடியவில்லை. 1986ஆம் ஆண்டு சீன அரசு, அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையைக் கொண்டு வந்தது.
ஒன்பது ஆண்டுகள் கட்டாயம் கல்வி பயில வேண்டும். இதில் சாதி, மதம், இனம், பாலினம், பணக்காரர், ஏழை என்ற எந்த வேறுபாடும் கிடையாது. தொண்ணூறுகள் தொடங்கி, அரசு கல்விக்கான செலவை ஏற்றுக்கொண்டது. அரசின் கல்வி சீர்திருத்தங்களை அன்றைய சீன சமூகத்தில் அனைவரும் ஏற்றுக்கொண்டனரா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், தொழிற்சாலை பணியாளர்கள், விவசாயிகள் என முரண்பட்ட பல்வேறு சமூக அடுக்குகளும் கல்வியைப் பெறுவதில் மோதிக்கொண்டன.
கல்வியைப் பெறுவதில் ஒருவரின் தனிப்பட்ட சமூக அந்தஸ்து, அவரின் தொடர்புகள் முக்கிய பங்கு வகித்தன. நடைமுறையில் தேசிய தேர்வு, குடிமைத்தேர்வுகள் வாழ்க்கையைப் பற்றிய ஆழமான பொருளை அறிவது என்ற சீனத்தின் தொன்மை நோக்கத்தில் இல்லை. சமூக, பொருளாதார வாய்ப்புகளைப் பெறுவதை நோக்கமாக கொண்டிருந்தன.
நவீன காலத்தில் மாணவர்களும் வாய்ப்பு, வளர்ச்சி, பொருளாதாரம் நோக்கியே சென்று வருகிறார்கள். தரமான கல்வியை நோக்கிய சீன அரசின் பயணம் எளிமையாகவெல்லாம் இல்லை. பல்வேறு சவால்களை சந்தித்தே நாடு இன்று தொழில்நுட்பத்தில், பொருளாதாரத்தில் ஏராளமான சாதனைகளை செய்து வருகிறது.
தொன்மைக்கால மிங் வம்ச ஆட்சியில் சீனா கலைகளிலும், பொருளாதார வளர்ச்சியிலும் அற மதிப்பீடுகளிலும் நிகரற்று விளங்கியது. அப்படியான பெருமை மிகுந்த காலத்தை நோக்கி நாட்டை கொண்டு செல்ல சீன அரசு முயல்கிறது.
தத்துவவாதியான கன்பூசியஸ், வாழும் காலத்தில் கொண்டாடப்படாத ஆளுமை. ஆனால் அவரின் நிலை இன்று அப்படியில்லை. சிலைகள் வைக்கப்பட்டு கருத்துகள் நினைவுகூரப்படுகின்றன. சீனமொழியைக் கற்றுக்கொள்ள உலக நாடுகளி்ல கன்பூசியஸ் கழகங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. கன்பூசியசின் மேற்கோள்களை சீன அதிபர் ஷி ச்சின் பிங், தனது உரைகளில் பயன்படுத்தி வருகிறார்.
படங்கள் - சிஜிடிஎன், தி எகனாமிஸ்ட் இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக