மாணவர்களை மன உளைச்சலில் தள்ளும் சீன அரசு தேர்வுமுறை!
சீன பொதுவுடைமைக் கட்சி, நாட்டிலுள்ள பொதுக்கல்வியைக் கட்டுப்படுத்தி ஒழுங்குமுறைப்படுத்தி வருகிறது. அரசியல் கொள்கை திணிப்பு, அதீத தேசியவாதமும் உள்ளடங்கும். உலகிலேயே சீனாவில் பள்ளிகளும், ஆசிரியர்களும், படிக்கும் மாணவர்களும் அதிகம். சீன அரசின் நோக்கம், மக்களை உற்பத்தித்துறையில் இருந்து கண்டுபிடிப்புகளுக்கு நகர்த்தி நாட்டை முன்னேற்றுவதுதான். அதற்கு கல்வி தரமாக இருக்கவேண்டும் என்பதே முதல்படி.
ஏழை - பணக்காரர், நகரம் - கிராமம் இடைவெளியே குறைத்து கல்வியில் சீர்திருத்தங்களை செய்யவேண்டும். சிந்தனையும், செயல்திறனும் கொண்ட மாணவர்களை உருவாக்கினால்தான் நாடு எதிர்காலத்தில் வலிமை பெறும். கிராமங்களில் சிறுபான்மை மக்களுக்கு, ஏழைகளுக்கு, தொலைதூரத்தில் வசிப்பவர்களுக்கு கற்கும் கல்வியை தரமாக்குதல், தொடக்க கல்வியை அனைவரும் எளிதாக அணுகும்படி மாற்றுதல், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வியை மானியம் அளித்து வழங்குதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து மேம்படுத்துதல் ஆகியவற்றை பொதுவுடைமைக் கட்சி முக்கியமானதாக கருதியது.
சீனத்தின், பதிமூன்றாவது ஐந்தாவது திட்டத்தில் கல்வியை சீர்திருத்தி மேம்படுத்துவதற்கான கொள்கைகள் சேர்க்கப்பட்டன. கட்டாயக் கல்வி, தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை என அனைத்துமே எதிர்பார்த்த அளவில் வெற்றி பெற்றன. ஒற்றைக் குழந்தை கொள்கை மாற்றப்பட்டு இருகுழ்ந்தை பெற்றுக்கொள்ளலாம் என அரசு இயங்கத் தொடங்கிவிட்ட காலம் அது.
2016ஆம் ஆண்டு வாக்கிலேயே சீன அரசு கல்வித்துறையை மேம்படுத்த பத்தொன்பது சதவீத நிதி முதலீட்டை செய்யத் தொடங்கியது. பள்ளி, பல்கலைக்கழகம் என்பது சுயமாக முடிவெடுத்து இயங்கலாம் என்றாலும் அதில் மாகாண, மத்திய அரசின் தலைவர்களின் பங்களிப்பும் கட்டுப்பாடும் இருந்தது. பாடத்திட்டங்களை அமைப்பதில் அவர்களும் தங்கள் கருத்துகளைக் கூறினர்.
ஆறு வயதில் இருந்து பிள்ளைகளுக்கு தொடக்க கல்வி தொடங்குகிறது. கட்டாயக் கல்வி திட்டம் என்பது மொத்தம் ஒன்பது ஆண்டுகளை உள்ளடக்கியது. பிறகு மாணவர்கள் நடுநிலைப்பள்ளிக்கான தேசிய தேர்வை எழுதவேண்டும். தேர்ச்சி அடைந்தவர்கள் மேலே படிக்கலாம். தோல்வி அடைந்தவர்கள், தொழில்நுட்ப பிரிவுக்கு மாற்றப்படுவார்கள்.
இளங்கலை பட்டம் பெற நான்கு ஆண்டுகளும், முதுகலைக்கும், முனைவர் பட்டங்களுக்கு தலா மூன்று ஆண்டுகளும் தேவை.
சீனாவில் உயர்கல்விக்கு அதிக செலவு பிடிக்கும். 2016ஆம் ஆண்டு சீன அரசு, தொடக்க பள்ளிகளுக்கான கல்விக்கட்டணத்தை விலக்கிவிட்டது. ஆனாலும் கூட மறைமுக கட்டணங்கள் உண்டு. உயர்கல்வியை மாணவர் பயில, கிராமத்தில் சாதாரணமாக வேலை செய்யும் பணியாளரின் ஓராண்டு வருமானம் தேவை. பல்வேறு வசதிகள் நிறைந்த பள்ளியை உயர்கல்விக்கு தேர்ந்தெடுக்க பெற்றோர்கள் போட்டியிட்டனர்.
சீனாவில் உள்ள அரசு பொதுப்பள்ளிகள் பரிசோதனை முறையில் பாடங்களைக் கற்றுக்கொடுத்தன. இதை பெற்றோர்கள் சந்தேகமாகவே பார்த்தனர். பள்ளிகள், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்பட்டன. அரசு பள்ளிகளுக்கு அடிக்கடி பாடங்களை சோதனை செய்ய கல்வித்துறை அதிகாரிகள் வருவார்கள். இவர்கள் கல்வியின் தரம், ஆசிரியர்களின் திறன், மாணவர்களுக்கு தேவையான வசதிகள், மதிப்பெண், என்ன சாதித்திருக்கிறார்கள் என்பதை அறிக்கையாக அரசுக்கு அளிக்கிறார்கள். மாணவர்கள் விளையாட்டில் சாதனை படைத்தாலோ, பல்கலைக்கழகத்திற்கு படிக்க சென்றாலோ பள்ளிக்கு கூடுதல் புள்ளிகள் வழங்கப்படும். இதில் ஊழல்களும் நடக்கின்றன.
அரசு அமைப்பு என்றாலே ஊழலுக்கு முக்கிய பங்கு உண்டு அல்லவா? சீன சமூகத்தில் அன்பளிப்புகள்,பரிசுகளுக்கு முக்கிய இடமுண்டு. அதைப்பயன்படுத்தி வசதி இல்லாத பள்ளிகளில் கூட வசதிகள் இருப்பதாக சொல்லி ஆசிரியர்கள், நிர்வாகிகள் நிதியைப் பெற்று சுயநலனுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
சீன சமூகத்தில், தேர்வுகள் இல்லையென்றால் வாய்ப்பு இல்லை. வசதியும் இல்லை. தொன்மைக் காலத்தில் இருந்தே சீனாவில் நடைபெறும் அரசு தேர்வுகள் மாணவர்களுக்கு முக்கியமானவை. அதில் மாணவர்கள் பெறும் தகுதி, தரத்தைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை மேலே உயருமா, கீழே செல்லுமா என்று கூற முடியும். மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் கூட வசதியானவர்கள் காசு கொடுத்து ஊழல் செய்தேனும் பிள்ளைகளை அரசு அதிகாரிகளாக்க முயல்வது உண்டு. முடியரசாக இருந்தபோதிருந்த அதே இயல்பு, நாடு குடியரசு ஆனபிறகும் அப்படியே தொடர்ந்தது. புதிய மாற்றங்களுக்கு மக்கள் மெதுவாகத்தான் மாறுவார்கள் என மாக்கியவெல்லி கூறுகிறார். அடிப்படையில் சீன சமூகம், குடும்ப செல்வாக்கு, அரசியல் தொடர்புகளை முக்கியமாக கருதுகிறது. அதை வைத்துதான் ஒருவர் முன்னேற முடியும்.
பள்ளியில் கற்பிக்கப்படும் கல்வியோடு கூடுதலாக சதுரங்கம், தற்காப்புக்கலை, ஓவியம், காலிகிராபி என ஏராளமான கலைகளை பிள்ளைகளுக்கு கற்றுத்தர பெற்றோர் துடிக்கிறார்கள். சீனாவில் உள்ள பெற்றோர், அரசு பள்ளிகளின் பரிசோதனைக் கல்வியை மட்டுமே விரும்பவில்லை. தங்களது பிள்ளைகள் சகலகலா வல்லவனாக இருக்கவேண்டும் என பெற்றோர் விரும்புவதில் புதுமை ஒன்றும் இல்லை. ஆனால், கற்பவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்தான் பிரச்னை. தொடக்க காலத்தில் சீன மாணவர்கள், வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றனர். இப்படியான படித்த மாணவர்களுக்கு அன்றைய சமூகத்தில் பெரிய மதிப்பும் மரியாதையும் இருந்தது. அதே மரியாதை இன்றும் தொடர்கிறது.
பணம், அதிகாரம் என இரண்டையும் பெறுவது சீன சமூகத்தில் முக்கியம். இதை கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்களே சான்று. வளமையான மாணவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது தொடங்கி கையூட்டு பெற்றால்தான் உதவி, வாய்ப்பு வசதிகளை அளிப்பது என நிலைப்பாட்டை பாகுபாடு கொண்டதாக மாற்றிக்கொண்டனர். இதுவே அவர்கள் மீது ஏழை, நடுத்தர வர்க்க மாணவர்கள் புகார்களை அளிப்பதற்கு வாய்ப்பாக அமைந்தது.
செழிப்பான, வசதியான குடும்ப வாரிசுகளுக்கு மதிப்பெண் அளிக்க ஆசிரியர்கள் கையூட்டு பெற்றனர். ஆசிரியர் என்ற அதிகாரத்தை வைத்துக்கொண்டு பணம் சம்பாதிப்பதில் இறங்கினர் என்று சொன்னால் சரியாக இருக்கும். இந்த செயல்பாடு, ஏழை - பணக்காரர் இடைவெளியை அதிகப்படுத்தி வருகிறது. நடைமுறை இப்படி இருக்கும்போது கல்வி சீர்திருத்தம் செய்யும் மாற்றம் பெரிதாக எடுபடவில்லை.
சீனாவில் கல்வி என்பது ஒருவரின் தலையெழுத்தை முற்றாக மாற்றக்கூடியது. அதை வைத்தே சமூக அந்தஸ்து, தொழில், தொடர்பு, திருமண வாழ்க்கை வரை தீர்மானிக்கப்படுகிறது. எனவே, பெற்றோர்களும் ஆசிரியர்களுக்கு கையூட்டு அளித்தேனும் நல்ல மதிப்பெண்ணை பெற முயல்கிறார்கள். சீனாவில் கல்வி என்பது மிகப்பெரிய வணிகம். இதில் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம், தோளில் ஏற்றப்படும் சுமை அதிகம். தேர்வுக் காய்ச்சல் என்பார்களே, அந்த சூழ்நிலை சீனாவில் உண்டு.
2017ஆம் ஆண்டு குவாங்சி மாகாணத்தில் தென்மேற்குப் பகுதியில் இருந்து நான்கு மாணவர்கள் பீகிங், சிங்குவா என இரண்டு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுக்கு தேர்வாகினர். மாணவர்களை காரில் வைத்து ஊர்வலமாக கொண்டு வந்து மக்கள் கொண்டாடினர். புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் படிக்க இடம் கிடைப்பது மாணவர்களுக்கு மட்டுமல்ல அவர்களது குடும்பத்திற்கே பெரிய பெருமை. குறிப்பிட்ட சமூக நிலையில் இருந்து அவர்கள் மேலேறுகிறார்கள் என்று கூட கருதலாம்.
சீனப்பெற்றோர், பிள்ளைகளை ஆங்கில மொழி பேசவைத்து அவர்களை வெளிநாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க மெனக்கெடுகிறார்கள். ஆங்கில மொழியை துல்லியமாக பேச தனியார் மொழிபயிற்சி நிறுவனங்களை நாடி ஏராளமாக செலவு செய்கிறார்கள். பள்ளியில் இடங்களைப் பெற சில ஆண்டுகளுக்கு முன்னரே, தன்னார்வமாக நிதிக்கொடைகளை வழங்குகிறார்கள். மாணவர்களை தேர்வில் தயாராக்குவதை எலிப்பந்தயம் என்று கூட அழைக்கலாம். நடைமுறையில் நிலைமை அப்படித்தான் உள்ளது.


கருத்துகள்
கருத்துரையிடுக