பிழைத்திருப்போம் - எங்கே செல்லும் இந்தப்பாதை?- தங்குவதற்கான இடம், அவசியமான பொருட்கள்
இறுதிப்பகுதி
பிழைத்திருப்போம்
எங்கே செல்லும் இந்தப்பாதை?
பேரிடர், கலவரம், வதந்தி, பொய் வழக்கு என எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். நிம்மதியாக இருக்க தலைக்கு மேலே கூரை வேண்டும். அதாவது தங்குவதற்கு இடம்வேண்டும். அது பாதுகாப்பாக இருக்கவேண்டும். அதேசமயம் அதற்கான செலவும் குறைவாக இருக்கவேண்டும். இடங்களை முன்னமே கண்டுபிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
தூரம்
போகும் தூரம் குறிப்பிட்ட தொலைவில் இருக்கவேண்டும். வண்டியில் நீங்கள் போய்க்கொண்டே இருக்கமுடியாது அல்லவா? பெட்ரோலும் வண்டியில் குறைவாக இருக்கும்போது ஏதாவது ஒரு இடத்தை உறுதி செய்து அதை நோக்கி சென்றே தீரவேண்டும். அல்லாதபோது உங்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும்.
பல்வேறு இடங்கள்
ஒரு கெட்ட விஷயம் நடக்கும்போது, வீட்டின் கதவை மட்டும் திறக்காது, ஜன்னல்களையும் திறந்துகொண்டு வரும் என்பார்கள். மோசமான விஷயங்கள் நடைபெறும்போது, உடனே தப்பிக்க நான்கு திசைகளுக்கு நான்கு இடங்கள் என தயாரித்து வைத்துக்கொண்டால் உதவியாக இருக்கும். ஒரே இடத்தை மட்டுமே நம்பியிருக்க முடியாது. அது ஆபத்தும் கூட. தனிக்குரல் கலைஞரான குணால் கம்ரா, தனது பகடி நிகழ்ச்சியால் ஆபத்து ஏற்பட்டபோது சொந்த ஊரில் இல்லை. அவர் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டார். இதனால், காவல்துறையினர், மதவாத கூட்டம் அவரது உறவினர்களின் வீட்டுக்கு சென்று கலவரம் செய்ய முயன்றது. உண்மையை பேசும்போது சாவுக்கு மிக அருகில் இருக்கிறீர்கள். தப்பிப்பதற்கு முன்னமே ஏற்பாடுகளை செய்துவைக்க வேண்டும்.
கார் டென்ட்
டென்ட் அமைக்க கூடாரத்துணி இல்லையா, கார் இரண்டாள் நீளத்திற்கு வாங்கி வைத்திருக்கிறீர்களா, அதை பயன்படுத்திக்கொள்ளலாம். தற்காலிகமாக அதில் தங்கிக்கொள்ளலாம். இன்று ஏராளமான கார்கள் அதிக இடவசதியுடன் மினி டெம்போ அளவுக்கு பெரிதாக விற்கப்படுகின்றன. புதிது முடியாவிட்டாலும் பழையது வாங்கிக்கொள்ளலாம். காரில் உள்ளே தங்கினாலும் வெளியே என்ன நடக்கிறது என பார்ப்பது அவசியம். இல்லையெனில் இந்தியாவில் கிறித்தவ பாதிரியார், அவரது இரு மகன்களை காரோடு வைத்து மதவாத கும்பல் எரித்துக்கொன்ற சம்பவம் போல ஆபத்துகள் சூழலாம்.
கூட்டம்
உறவு, நட்புகளை ஆபத்துகள் சூழும் முன்னரே அனுசரணையாக பேசி வைத்திருந்தால், சில நாட்கள் தங்குவதற்கு இடத்தை ஏற்பாடு செய்துகொள்ளலாம். நிரந்தரமாக அல்ல. தற்காலிகமாக தங்கிவிட்டு வேறு இடங்களுக்கு நகரவேண்டும். தனியாளாக இருந்தால் பரவாயில்லை. மைதானம், சாலையோரம் என தங்கிக்கொள்ளலாம். குடும்பமாக இருக்கும்போது பிரச்னைகள் அதிகம்.
மோட்டல்
விக்கிரவாண்டி மோசமான அனுபவங்களை மறந்துவிடுங்கள். ஏதாவது நல்ல மோட்டலை தேடி தங்குவதற்கு முயலலாம். நாடி சோதிடமே ஆன்லைனுக்கு வந்துவிட்டது. ஓட்டல் அறைகளை எளிதாக இணையத்தில் தேடி பதிவு செய்யலாம். ஓட்டல் வணிகமே இன்று புக்கிங் ரிசர்வேஷன் என்ற வார்த்தைகளில்தான் வாழ்கிறது. தடை கலாசாரம் எனும் மதவாத கும்பலின் தந்திரத்தில் சிக்கிக்கொள்ளாத மக்களை அடிப்படையாக கொண்டால் ஓட்டல் வணிகம் பெரிய பாதிப்பை சந்திக்கவில்லை. ஏதாக இருந்தாலும் முதலிலேயே ஓட்டலில் புக் செய்து வைத்துக்கொண்டால் குடு்ம்பத்துடன் தெருவில் தங்கும்பிரச்னை இருக்காது. காசை கட்டுவதில் க்யூஆர் கோடு வந்துவிட்டது. கிரடிட், டெபிட் கார்டுகளை கைவசம் வைத்துக்கொள்வது நல்லது. முடிந்தால் ரொக்கமாக பரிமாற்றம் செய்வது சிறப்பு.
2
உங்கள் வீட்டை மதவாத கும்பல் உண்மையை எழுதியதற்காக, பேசியதற்காக, வீடியோ வெளியிட்டதற்காக இடிக்கிறார்கள். அப்போது உயிர்பிழைக்க என்னென்ன பொருட்களை எடுப்பீர்கள். அதே மனநிலையை பேரிடர், கலவர சூழலில் பேணுங்கள். அதுதான் முக்கியம்.
பேன்ட், சட்டை, உள்ளாடை, சாக்ஸ் ஆகியவற்றை தலா இரண்டு அல்லது நான்கு எடுத்துக்கொள்ளுங்கள். உள்ளாடைகளை கூடுதலாக எடுத்துக்கொள்ளுங்கள். ஒரே உள்ளாடையை அணிந்தால் திருப்பால் செலவு அதிகமாகும்.
பெண்களுக்கான பொருட்கள் கூடுதலாக இருக்கலாம். ஆனால், தென்னாட்டு ரயிலில் பயணிக்கும் வடநாட்டு முட்டாள்கள் போல வீடு மாற்றுவது போல பொருட்களை தூக்கிக்கொண்டு செல்லவேண்டாம். எது அவசியமோ, அது மட்டுமே இருக்கவேண்டும். எமோசனல் சப்போர்ட், லைஃப் சப்போர்ட் என இரண்டுமே வேறு அர்த்தங்களைக் கொண்டவை. வாழ்க்கை ஆதாரமே அடிப்படையில் முக்கியமானது.
செலவை கிரடிட் கார்டில் செய்ய முடிந்தால் அதிலேயே செய்யலாம். அதன் உரிமை உங்கள் நண்பரின் பெயரில் இருந்தால் இன்னும் மகிழ்ச்சி. கையில் காசு தேவை. அவசியமான பொருட்களை வாங்க காசு பயன்படும். அதாவது ரொக்கம். டிஜிட்டல் இந்தியா, பேரிடர்களால் மின்சாரம் போனாலே காணாமல் போய்விடும். அந்த சூழ்நிலையில் நாம் தொன்மை இந்தியாவுக்கு வந்துவிடுவோம்.
முக்கியமான ஆவணங்களான அடையாள அட்டை, ரேஷன் அட்டை, சமூக பாதுகாப்பு அட்டை என எது தேவையோ எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அனைத்து பொருட்களையும் அட்டைப்பெட்டியில் போட்டு தூக்கிக்கொண்டிருக்க முடியாது. வலுவான பையில் போட்டு நிரப்பிக்கொள்ளுங்கள்.
முதலுதவி பெட்டி முக்கியம். எப்போது யாருக்கு வேண்டுமானாலும் காயம் படலாம். அதை எதிர்கொள்ள நம்மிடம் பொருட்கள் தேவை. பேண்டேஜ், சோப்பு, டிங்க்சர் என குறைந்தபட்ச பொருட்களேனும் அவசியம். மனிதர்கள் இயல்பாகவே சுயநலமானவர்கள். ஆபத்துக்காலங்களில், இன்னும் குரூரமானவர்களாக மாறக்கூடும்.
அகிம்சைக்கும் இந்தியாவுக்கும் எள்ளளவு தொடர்பில்லை. இருந்தாலும் அதை சொல்லி பிழைக்கும் ஆட்கள், குறிப்பாக மதவாத கும்பல்களிடம் கவனமாக இருப்பது அவசியம். சிறுபான்மையினர் போல கையில் பச்சை குத்திக்கொண்டு, உடை அணிந்துகொண்டு கலவரம் செய்வார்கள். மக்களின் போராட்டத்தை குலைப்பார்கள். காவல்துறை பெரும்பாலும் மதவாத ஆட்களோடு இணைந்து வேலை செய்வார்கள் என்பதால் கவனமாக இருந்தால்தான் உயிர்பிழைக்க முடியும்.
நாட்டிற்கு உழைத்த ராணுவ அதிகாரியையே மதத்தை வைத்து இழிவுபடுத்துபவர்களைக் கொண்ட நாட்டில் உயிர் பிழைத்திருப்பது கடினம்தான். பாதுகாப்பான தொலைவில் நின்று போராட்டங்களை பார்ப்பது நல்லது. மானபங்கம், வல்லுறவு, சமூக வலைத்தளம் வழியாக அவதூறு, இழிவுபடுத்தல்களை ஆளும் அரசே முனைந்து செய்வதால் மக்கள் கவனமாக இருக்கவேண்டும். அகிம்சை, இம்சை என எந்த குழுக்கள் வந்தாலும் அவர்களிடமிருந்தும், இசங்களிடமிருந்து தள்ளியிருப்பது நல்லது.
காவல்துறையை திரைப்படங்களில் மட்டும் புனிதர்களாக காட்டுவார்கள். நடைமுறையில் அப்படியானவர்களை லென்ஸ் வைத்து தேடினாலும் கிடைக்கமாட்டார்கள். லாக்கப் படுகொலைகள், என்கவுன்டர்கள், உயர்சாதிக்கு ஆதரவாக இயங்குவது என அவர்களின் செயல்பாடுகளே வேறு லெவலுக்கு மாறிவிட்டது. அவர்களை முடிந்தளவு நேருக்கு நேராக சந்திக்காமல் இருந்தால் உங்களுக்கு பொருளிழப்பு, அவமானம் எல்லாம் ஏற்படாது. கேள்விகளுக்கு வழக்குரைஞரை வைத்துக்கொண்டு பதில் கூறுவது நல்லது.
பிரெப்பர் இதழ்



கருத்துகள்
கருத்துரையிடுக