நூறு நாட்கள் சாதாரண மனிதராக வாழ முற்படும் பெரும் பணக்கார வாரிசு!
புருஷோத்தமுடு
தெலுங்கு
ராஜ்தருண், ஹாசினி சுதீர்
உன்னால் முடியும் தம்பி என்ற தமிழ்படத்தினுடைய கதையைப் போன்றதுதான். அதை தெலுங்கு கரம் மசாலா சேர்த்து எடுத்திருக்கிறார்கள். வழக்கம்போல வீணடித்திருக்கிறார்கள்.
ராஜ்தருண், கார்ப்பரேட் நிறுவனத்துடைய அடுத்த இயக்குநராக வரக்கூடியவர். ஆனால், நிறுவனரின் விதி ஒன்று உள்ளது.அதாவது அடுத்த இயக்குநராக வரக்கூடியவர், நூறு நாட்களுக்கு தன்னுடைய அடையாளங்களை மறைத்து சாதாரண மனிதராக வாழ வேண்டும். அப்படி வாழ்ந்து நூறு நாட்களை முடித்தால் மட்டுமே அவர், நிறுவனத்தின் இயக்குநராக முடியும். ராஜ்தருண் இந்த சோதனையை ஏற்றுக்கொள்கிறார். அதில் வென்றாரா இல்லையா என்பதே கதையின் இறுதிப்பகுதி.
நிறுவனரின் விதியைப் பற்றி பார்ப்போம். நிறுவனம் லாபகரமாக இயங்குவது முக்கியம். அதேசமயம், லாபத்திற்காக ஒருவர் மனதிலுள்ள கருணையை மனிதர்கள் மீதான மனிதநேயத்தை இழந்துவிடக்கூடாது. அதைத்தான் நிறுவனர், தனது வம்சாவளியிடம் எதிர்பார்க்கிறார். அப்படியான மனம் கொண்டவன்தான் நிறுவனத்தை சரியான பாதையில் நடத்த முடியும் என நம்பி அப்படியான வினோத விதியை ஏற்படுத்துகிறார்.
படத்தில் ராமு பாத்திரத்தில் ராஜ்தருண் நடித்திருக்கிறார். நன்றாக நடிக்க வாய்ப்பிருந்தும் படத்தின் காட்சிகள் எந்த உணர்ச்சியையும் பார்வையாளர்களுக்கு தரவில்லை. அப்படியே வேகமாக கடக்கின்றன. தன்னுடைய சொந்தப்பெயர், செல்வாக்கு, செல்வம் எதையும் வெளியாட்களுக்கு சொல்லக்கூடாது. தன்னுடைய இயல்பான புத்திசாலித்தனம், உடல் உழைப்பு வைத்தே பிழைக்கவேண்டும். விசாகபட்டினம் செல்லும் வழியில் உள்ள பூக்களை விளைவித்து விற்கும் கிராமத்திற்கு ராமு செல்கிறார். அங்கு செல்பவர், எதிரில் நாயகி ஓட்டிவரும் இருசக்கர வாகனத்தில் அடிபட்டு கீழே விழுந்துவிடுகிறார். நாயகி, பரிதாபப்பட்டு அவனை தனது வீட்டுக்கு கூட்டிச்சென்று சிகிச்சை அளிக்கிறாள்.
நாயகன் ராமு, போட்டிருக்கும் சட்டை, பேண்ட் ஆகியவற்றின் விலையே அதிகமாக தோன்றுகிறது. ஆனால், தான் அனாதை என்று சொல்லி பூந்தோட்டத்தை பாதுகாக்கும் வேலையை கெஞ்சிப்பெறுகிறார். படம் நெடுக ராமு பாத்திரம் போட்டுவரும் ஃபார்மல் உடையின் விலை என்னவென்று இயக்குநர்தான் கூறவேண்டும். படத்தில் ஒரு காட்சியில், நாயகிக்கு உதவும் வேலைக்காரர் தன்னுடைய பழைய சட்டை, லுங்கியை நாயகனுக்கு கொடுக்கிறார். அதை நாயகன் எந்த காட்சியிலாவது அணிந்தாரா என்பது அவருக்கே வெளிச்சம். கிராமத்தில் உள்ள அனைவரும் பனியன், சாதாரண சட்டை என அணிந்து வலம் வரும்போது நாயகன், நாயகி மட்டும் பல்லாயிரம் மதிப்பான உடைகளை அணிந்துகொண்டு வருகிறார்கள். இதுவே கதையை கெடுக்க போதுமானதாக இருக்கிறது. படம்நெடுக ராஜ்தருண், ஹாசினி சுதீர் கிராம வாழ்க்கைக்கு அந்நியமாகவே தெரிகிறார்கள்.
காற்றைப் பயன்படுத்தி மோட்டார் இயக்கியதற்காக நாயக துதி பாடல் உண்டு, நாயகியின் பிறந்தநாளன்று பூந்தோட்டம் முழுக்க சீரியல் பல்புகளை தொங்கவிட்டு கே டிராமா ரகத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது, அப்பாடலில் நாயகியின் இடுப்புத்துணியை விலக்கி தொப்புளைப் பார்ப்பது, இறுதிக் காட்சியில் கத்திக்குத்து காயத்துடன் வந்து இந்தி அதிகாரியிடம் தெலுங்கில் பேசுவது, தோட்டத்தை பாதுகாப்பவனுடன் அருகே படுக்கை போட்டு நாயகி உறங்குவது, நாயகன், நாயகி இருவரும் காபி டே கடையில் இருப்பதைப் போல பிளாஸ்டிக் கோப்பையில் காபி குடிப்பது என படம் நெடுக சகிக்கவே முடியாத காட்சிகள் உள்ளன. அவையே படத்தின் கதையை தரையில் போட்டு புதைத்துவிடுகின்றன. இதில் பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன், சக்திமான் நடிகர் முகேஷ் கன்னா ஆகியோரின் கேமியோ வேறு இருக்கிறது. ஆனால் எதுவுமே படத்தை காப்பாற்ற உதவவில்லை.
கிராமத்து மக்களுக்கு கோழைத்தனம் இருக்கிறது. ஒன்றாக சேர்ந்து இருந்தாலும் கூட எதிர்த்துப்பேசி உரிமைகளை பெற முடியாத சூழல், இவர்களுக்காக நாயகன் போராடி சில விஷயங்களை செய்கிறான். ஆனால் அது அவர்களுக்கு போதுமானதாக இல்லை. அவனையே போராட்டத்தின் தலைவனாக்கி, அவன் முதுகின் பின் ஒளிந்துகொள்கிறார்கள். இத்தனைக்கும் நாயகன் அவர்கள் கோழையாக இருக்கக்கூடாது என்கிறான். இறுதிக் காட்சியில் கூட நாயக துதிக்காக தங்களுக்கு என்ன வேண்டும் என சொல்லாமல் மௌனம் காக்கிறார்கள். பரிதாபமாக இருக்கிறது. நாயகன் பேசும் வசனங்களும் பிரச்னை, தீர்வை பற்றி இல்லாமல் பொதுவாக இருக்கிறது. இத்தனையும் வயிற்றில் கத்தி குத்து வாங்கி ரத்தம் வெளியேறிக்கொண்டிருக்கும் போது பேசுகிறார். எதிரில் உள்ள முகேஷ் கன்னா உள்ளிட்ட வடக்கு நாட்டு அதிகாரிகள் அதைப்பற்றி கவலையே படாமல் இருக்கிறார்கள். இதை எப்படி புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. சரியான மென்டல் பயல்களாக இருப்பார்கள் போல.
நாயகி பாத்திரம் எப்போதும் போல தொப்புளையும் மார்பகத்தையும் காட்டவே பயன்பட்டிருக்கிறது. தோட்டத்தை நாயகன் ஃபார்மல் சட்டை போட்டுக்கொண்டு காவல் காப்பதை ஒரு காட்சியில் கூட பார்க்க முடியவில்லை என்பது பெருஞ்சோகம். பின்னணி என்ன என்று தெரிந்துகொள்ள முடியாதவன் என தொடக்கத்தில் வேலை தரக்கூட யோசிப்பவள், ஒருகட்டத்தில் அவன் படுக்கைக்கு அருகே படுக்கை போட்டு படுக்கிறாள். எப்படி? இனிமே அப்படித்தான் என சமாதானம் செய்துகொண்டு படம் பார்க்கவேண்டும். டோண்ட் கொசின் தி எமோஷன்.
இடுப்புத்துணியை அவிழ்த்துப் பார்க்குமளவு சுதந்திரம் அளித்துவிட்டு, அவன் படித்தவன், விவசாயிகளுக்கு எந்திரங்களை உருவாக்கி கொடுத்தான் என்ற காரணத்திற்காக அவனோடு சண்டை போடுவது லாஜிக்காக இல்லை. அப்படி சந்தேகம் வரவேண்டுமென்றால், குடிக்க காபி கேட்டபோது வந்திருக்கவேண்டும். பூந்தோட்டம் வைத்து பராமரிக்கும் நில உரிமையாளர், மாதம் ஐயாயிரம் சம்பளம் வாங்கும் காவல்காரனுக்கு தன் கையால் காபி போட்டு கொடுப்பாரா என்ன? எங்கு இதுமாதிரி பழக்கங்கள் நடைபெறுகிறது. பொதுவாக கிராமங்களில் சாதி தீண்டாமை தீவிரமாக இருக்கும்.
காட்டில் பூச்செடிகளுக்கு தினசரி நான்கு முறை தண்ணீர் விடுவதை பிளாஸ்டிக் குழாய்கள் இல்லாமல் மூங்கிலை வைத்தே செய்து முடிக்கிறான் நாயகன். ஆனால், அதை பூந்தோட்ட தொழிலாளர்களோடு சேர்ந்து செய்வதாக காட்சியை அமைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அதை செய்துவிட்டு, நாற்காலி போட்டு கரும்பு தின்கிறார். உண்மையில், கூலி வேலைக்காரன் இப்படி நாற்காலியில் முதலாளிக்கு முன்னே அமர முடியுமா? நாயகன் சொட்டுநீர் பாசனத்தைத்தான் செய்கிறான். நாயகி புரிந்துகொள்கிறாள். ஆனால், அப்போது கூட அவன் அதை தனியாளாக எப்படி செய்தான் என அவள் சந்தேகம் கொள்வதில்லை. நோயில் இருந்து மீண்ட அவளது அப்பா வந்து சந்தேகம் கேட்கும்போதுதான், அவளுக்கு அவன் பொய் சொல்லியிருக்கிறான் என்று தெரிகிறதா என்ன?
கிராமத்தை எம்எல்ஏ, அவரது மகன் சுரண்டுகிறார்கள். சரி. நாயகன் அதற்கு என்ன ஆக்கப்பூர்வ எதிர்வினை ஆற்றுகிறான். முதலில் அவர்களில் சில ஆட்களை அடிக்கிறான். இதனால், நாயகனை காவல்துறை அதிகாரி கைது செய்து கூட்டிக்கொண்டு போகிறார். அப்போதும் அவனைக் காக்க யாரும் வருவதில்லை. அதாவது, அவன் முன்னே செய்த நற்செயல் அங்கு காக்கிறதாக காட்டுகிறார்கள்.
கிராம மக்களுக்கு விரோதி அவர்களேதான். அவர்கள் அடிமை மனம் கொண்டவர்கள், சாமி வந்து காக்கும். வானத்தில் இருந்து தேவதூதன் வருவான் என அநீதிகளை பொறுக்கிறார்கள். இதில் நாயகன் வேறு பகவத் கீதையை படித்துக்காட்டும் வசனம் ஒன்று வருகிறது. அதெல்லாம் எரிச்சலின் உச்சகட்டம்.
படம் முடியும்போதும் நாயகன் ஆக்கப்பூர்வமாக ஏதும் செய்வதில்லை. நாயகியின் கடனை அடைத்து நிலத்தை மீட்கிறான். அவளைக் கட்டி அணைக்கிறான். கொடுத்த காசுக்கு நிலமும், இளம்பெண்ணும் சொந்தமாகிவிட்டது. அம்புட்டுத்தேன். பூ விற்கும் விவசாயிகளுக்கு வாழ்க்கை மாறியதென காட்டும் ஒரு காட்சி கூட இல்லை. உண்மையில் நூறு நாட்களில் ராமு என்ன செய்தார்? காலையில் எழுந்தார், முதலாளியம்மா கையில் பிளாஸ்டிக் கோப்பையில் காபி குடித்தார், ஃபார்மல் சட்டையை போட்டுக்கொண்டு பூந்தோட்ட வேலைகளை செய்தார், காட்டில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். அவ்வளவுதான். வேறேதுமில்லை. இதில் பில்டப்புகள் வேறு.
நாயகன் தான் அனுபவித்த வசதிகளை யோசித்துப் பார்ப்பதாக காட்சிகள் வருகிறது. அதைவிட அவர், நூறு நாள் விதியை அதில் தான் கற்றதை யோசிப்பதாக காட்டியிருக்கலாம். அவன் வாழ்க்கையில் பார்க்காத பல்வேறு உணர்ச்சிகளை, மனிதர்களை, மனித நேயத்தை காட்சிகளாக மாற்றியிருக்க வாய்ப்பிருந்தும் இயக்குநர் கோட்டைவிட்டுவிட்டார். எனவே, வழக்கமான கரம் மசாலா படமாக எஞ்சுகிறது.
இறுதிக்காட்சியெல்லாம் கிரிஞ்ச் ஆப் தி இயர் என விருதே கொடுக்கலாம்.
ஆடம்பர உடைகள், தொப்புள் நடனம், எல்லையற்ற நாயக துதி, கிளிஷே காட்சிகள் காட்சிகள் காரணமாக நல்ல கதை இருந்தும் புருஷோத்தமுடு கீழே சரிந்துவிட்டார்.
கோமாளிமேடைகுழு




கருத்துகள்
கருத்துரையிடுக