தர்மம் அர்த்தம் காமம் என உறவுகளில் அறநெறியை வலியுறுத்தும் காம சூத்திரம்!

 

 


 

 காமசூத்திரம்
நாராயண ரெட்டி
விகடன் பிரசுரம்
ப.1000க்கும் மேல்
விலை 230

நூலின் பெயர் காமசூத்திரம் என்றவுடன் பல்வேறு போஸ்களை கற்பனை செய்யவேண்டாம். இந்த நூல் முழுக்க தர்மம், அர்த்தம், காமம் என அடிப்படை நீதிநெறிகளைப் பேசுகிறது. நூலில் எவ்வித ஓவியங்களும் கிடையாது. அப்படி தேடுபவர்கள் வேறு நூல்களை தேடுங்கள். கண்டடையலாம்.

வடமொழி நூலை தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். அதை புரிந்துகொண்டால் நூலை வாசிக்கும்போது ஏற்படும் இடர்ப்பாடுகளை முன்னமே சகித்துக்கொள்ள முடியும். நூலில் வாத்சாயனார் சொன்னது மட்டும் இல்லை. நாராயண ரெட்டி சொல்லும் பழைமைவாத கருத்துகளும் ஏராளம் உள்ளன. அவற்றை அன்னம் போல பிரித்துப்போட்டுவிட்டு அடிப்படையாக மூல ஆசிரியர் என்ன சொன்னாரோ அதை மட்டும் படிக்கலாம்.

காமம் என்பதை வாத்சாயனார் முன்னிலைப் படுத்தவில்லை. பெண்ணிடம் மென்மையாக பேசுவது எப்படி, மனதை தாம்பத்திய உறவுக்கு தயார்படுத்துவதற்கான ஆலோசனைகள், உத்திகள் ஆகியவற்றைக் கூறுகிறார். பலவந்தம் என்பதை அவர் ஆதரிக்கவில்லை. அதேசமயம் அவரின் காலத்தில் அரசர்கள், மந்திரிகள், பிரபுக்கள் பிடித்த பெண்களை அடைய பைசாசிக, ராட்சஸ பிரயோகங்களை எப்படி செய்து வெற்றி அடைந்தனர் என்பதையும் விளக்கியுள்ளனர். அதை நூலின் பின்பகுதியில் நீங்கள் படித்து அறியலாம்.

காதல் என்ற உணர்வைப் பற்றி கூறியுள்ளது முக்கியமானது. இருதரப்பிலும் அன்பு உருவாகவேண்டும் அதுவே காதல், ஒருவர் மனதில் உண்டாகும் உணர்வு காதல் அல்ல என வாத்சாயனார் ஒரே போடாக போட்டுவிட்டார். அதை ராட்சசம், பைசாசிகம் என்கிறார்.

காதலன், காதலி, கணவன், மனைவி ஆகியோர் எப்படி உறவைத் தொடங்குவது வளர்ப்பது, அதில் பிரச்னைகள் வந்தால் எப்படி தீர்ப்பது என விளக்கமாக கூறியிருக்கிறார். அதெல்லாம் முக்கியமானவை. வேசி, கணிகை ஆகியோருக்கான விதிகள், செயல்பாடுகள், ஆலோசனைகள் தனியாக உள்ளன. அவற்றையும் ஒருவர் படித்து தெரிந்துகொள்ளலாம். அதை விலக்கவேண்டியதில்லை. விலைமாதர்களும் இன்று சமூகத்தில் ஒரு பகுதிதான். எனவே அவர்களைப் பற்றியும் தெரிந்துகொண்டால் நன்மையே.

காலத்தைப் பொறுத்து வாத்சாயனார் கூறிய ஆலோசனைகளை மேம்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக காதலுக்கு தூது போகும் யோசனைகள் இன்று மாறிவிட்டன. மனைவியின் நடத்தை விதிகள் எல்லாம் இன்று சாத்தியம் கிடையாது. எனவே, நிறைய விஷயங்களை தற்போதைய ஆசாரங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.

காமத்தைப் பற்றி பேசும் நூல் என்பதால், அந்த சமாச்சாரத்திற்கு வருவோம். நூலில், பெண்ணின் மனதை எப்படி திறப்பது, அதில் நம்பிக்கையை வளர்த்து அன்பை பயிரிட்டு உடலுறவு வைத்துக்கொள்வது என்றுதான் வாத்சாயனார் கூறுகிறார். கூடவே உடலுறவுக்கு மட்டுமே ஆர்வம் காட்டும் நபர்களுக்கான ஆலோசனைகள் தனி. அவை எதற்கு, யாரிடம் அதை செய்வது என்று முற்று முழுதாக ஆலோசனைகள் உண்டு.

வடமொழி சுலோகம், அப்புறம் அதற்கு தமிழ் விளக்கம். பிறகு ஆசிரியரின் வியாக்யானம் என மூன்று பகுதிகள் உள்ளன. நீங்கள் தமிழ் விளக்கத்தை மட்டுமே படித்தால் போதுமானது. பெரும்பாலான இடங்களில் நூலின் எழுத்தாளர் கால மாற்றங்களை பற்றிய புலம்பல்களை மட்டுமே முன்வைக்கிறார். அவருக்கு என்ன பிரச்னையோ?

உறவை வளர்க்க பல்வேறு யோசனைகளை சொன்னாலும் அறநெறி வழுவக்கூடாது என எச்சரிக்கிறார் வாத்சாயனார். சில இடங்களில் அரசர் எப்படி பெண்களை அனுபவிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதெல்லாம் அக்காலகட்டத்தில் நடந்தவை என்று மட்டும் எடுத்துக்கொள்ளலாம். இதை அடிப்படையாக வைத்து தவறான வகையில் இயங்கக்கூடாது. அது ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். நூலின் கடைசி பாகத்தில் வசியம். பெண்களை மயக்குவது, ஆண் தன்னை மருந்துகளால் அழகாக மாற்றிக்காட்டுவது என நிறைய விஷயங்கள் பேசப்படுகிறது. இதெல்லாம் எந்தளவு உண்மை என வாசகர்கள் பகுத்தாய்ந்து கொள்வது நல்லது.

புதிய உறவைத் தொடங்குபவர், காம சூத்திரத்தை படித்தால் அதை வைத்து உறவைக் காப்பாற்றிக்கொள்ளலாம். அதை மேம்படுத்தலாம் தொடரலாம். உறவுகளில் உள்ள சூட்சுமத்தை, தந்திரத்தை, நோக்கத்தை அறியலாம்.

கோமாளிமேடை குழு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!